என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார்- பள்ளிக் கல்வித் துறை
    X

    தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார்- பள்ளிக் கல்வித் துறை

    • பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்திகள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடம் உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன.

    அவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி ஆகியோா் நேற்று நேரில் ஆய்வு செய்தனா்.

    இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    அவற்றில் 2.72 கோடி பாடப்புத்தகங்கள் மாணவா்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

    எஞ்சியுள்ள 1.47 கோடி பாடநூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும்.

    அனைத்து மாவட்ட கிடங்குகளிலும் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக்குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

    இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×