என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு- தூய்மைப்பணிகளை மேற்கொள்ள உத்தரவு
- பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்.
- முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வி அலுவலர்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது.






