search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குப்பையை தின்று பால் தரும் பசுக்கள்: குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள் என்னென்ன?
    X

    குப்பையை தின்று பால் தரும் பசுக்கள்: குழந்தைகளுக்கு வரும் பாதிப்புகள் என்னென்ன?

    • பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும்.
    • பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.

    பசுமையான மேய்ச்சல் நிலங்களை கிராமங்களில் உருவாக்கி புல், கீரைகளை தீவனமாக அளித்தார்கள். பசுக்கள் இன்று நகர-கிராம குப்பைத் தொட்டிகளில் உணவை தேடி திரிகின்றன. குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவை உண்டு தரும் பால் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.

    தமிழகத்தில் பால் மாடு வளர்ப்பு என்பது பல லட்சக்கணக்கான மக்களுக்கான வாழ்க்கை ஆதாரமாக உள்ளது.

    கிராமங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் கறந்த பாலை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் தனியாகவும், பண்ணைகள் மூலமாகவும் விற்கிறார்கள். பொதுவாகவே கொள்முதல் செய்யப்படும் பாலை அந்தந்த நிறுவனங்கள் ` பாஸ்டிரைசேசன் ' என்ற முறையில் 160 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் பதப்படுத்தி கிருமி நீக்கம் செய்து பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    நகரங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் பலர் ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர். ஆனால், சரியான வெப்பநிலையில் காய்ச்சாத பாலில் அந்த பசுக்கள் உட்கொண்ட தீவனத்தின் மணம் மற்றும் தன்மை காணப்படுவதுடன், புருசெல்லோசிஸ் போன்ற நோய் தொற்று கிருமிகளும் இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும். ஆரோக்கியமான சுகாதார நிலையில் பசும் புற்கள், புண்ணாக்கு, உலர் தீவனங்கள், தூய குடிநீர் தரப்பட்டு வளர்க்கப்படும் பசுக்களில் கறந்த பசும்பால் நறுமணத்துடன், இனிப்பு சுவையோடு இருக்கும்.

    மேய்ச்சலுக்கு போகும் பசுக்கள் நிலத்தில் முளைத்திருக்கும் காட்டு வெங்காயம் போன்ற களைகளை மேயும் போது அவற்றின் பாலில் இந்த களைகளின் வாடை காணப்படும். நிறமும் வேறுபடும். இதுதான் பாலின் இயல்பு.

    இப்போது நம் நாட்டில் பசுக்களின் நிலைமையை பார்க்கலாம். தற்போது நகரங்களிலும் பல கிராமங்களிலும் கூட வளர்க்கப்படும் பசுக்களை போதிய தீவனம் அளிக்க வசதி இல்லாமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இந்த பசுக்கள் தெருத்தெருவாக வீடுகளில் போய் மக்கள் தரும் எஞ்சிய இட்லி, தோசை முதல் குப்பையில் வீசப்பட்ட பாலித்தீன், நாப்கின் வரை அனைத்து கழிவுகளையும் உண்கின்றன.இந்த பசுக்களின் பால் எந்த தரத்தில் இருக்கும் என்பது கேள்விக்குறி.

    இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-

    பொதுவாக, பாலை வீட்டில் காய்ச்சும் போது அதிகபட்சமாக 100 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் தான் காய்ச்ச முடியும். இந்த கொதி நிலையிலும் தப்பி உயிர் வாழும் நுண்ணுயிரிகள் பாலில் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் செல்லும் போது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இதுவரை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. ஆனால், குப்பையில் வீசப்பட்ட கெட்டுப் போன உணவை உண்டு வாழும் பசுக்களுக்கு உறுதியாக பல உடல் நல குறைபாடுகளும், அவற்றின் பாலில் தரமற்ற கொழுப்பு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படும் என்பது உறுதி.

    இந்த வகை மாடுகளின் பாலை சரியாக காய்ச்சாமல் குடிக்கும் போது மனிதர்களுக்கு அனீமியா என்னும் ரத்தசோகை வரும். இந்த பாலை குடிக்கும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகும். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோய்களும் தொடர்ந்து வரும்.சுகாதாரமற்ற நிலையில் வளரும் பசுக்களில் எலும்புருக்கி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோய் இருக்கலாம். இந்த பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுகாதாரமற்ற பால் உற்பத்தியை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ` மாடு வளர்ப்பு என்றால் அதற்கு சுகாதாரமான கொட்டகை, சத்துள்ள பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம், தூய குடிநீர் எல்லாம் இருக்க வேண்டும். நகரங்களில் மாடு வளர்ப்பவர்களுக்கு இப்படி எந்த வசதியும் இல்லை. பணம் செலவழித்து தீவனம் வாங்க தயங்கி பசுக்களை சாலையில் திரிய விட்டு குப்பையில் மேய விடுகின்றனர்.

    இதனை தடுக்க, நகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகளை ஒரு இடத்தில் வைத்து பராமரிக்கும் வகையில் மாநகராட்சி ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கி மாட்டு கொட்டில்களை ஏற்படுத்தி தர வேண்டும்.இதன் மூலம் மட்டுமே நகர சாலைகளிலும் குப்பை தொட்டிகளை தேடி பசுக்கள் திரிவதை தடுக்க முடியும். மக்களுக்கு ஆரோக்கியமான பசுக்களின் பால் கிடைக்கும்' என்றார்.

    தாய்ப்பாலுக்கு அடுத்ததாக போற்றப்படுவது பசுவின் பால். மனிதனுக்கு உணவாக பால், நெய், வெண்ணெய், தயிர், மோர் என்றுபல விதமான பொருட்களை தரும் பசுக்களை மனிதர்கள் பாதுகாப்பாக கொட்டில், கோசாலை, பசு மடம்என்று அமைத்து வளர்த்தார்கள்.

    Next Story
    ×