search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே பெருங்காயப் பொடி எப்படி செய்வது? அதன் பயன் என்ன?
    X

    வீட்டிலேயே பெருங்காயப் பொடி எப்படி செய்வது? அதன் பயன் என்ன?

    • அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு.
    • வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம்.

    பெருங்காய பொடியை கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் அதன் வாசனை வலுவாக இருப்பதை பார்க்கலாம். பெருங்காயத்தூள் என்று வாங்கும் சில தயாரிப்புகள் கலப்படமாக இருக்கலாம். நறுமணம் குறைந்து இருக்கலாம். வீட்டில் பெருங்காயத்தூள் தயாரித்து பயன்படுத்தும் போது அதன் நறுமணம் நன்றாக இருக்கும்.

    கலப்படமில்லாத ஆரோக்கியமான தயாரிப்பை வீட்டிலேயே செய்ய முடியும் என்னும் போது செய்முறையை கற்றுகொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெருங்காய பொடியை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கட்டி பெருங்காயம் - 100 கிராம் ( நாட்டு மருந்துகடை அல்லது மளிகை கடைகளில் கிடைக்கும்)

    உப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    பாக்கெட்டில் வாங்க கூடிய இந்த கட்டி பெருங்காயம் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருக்கும். இதை பிரிப்பது கடினமாக இருக்கும். மென்மையாக இருந்தால் சிறு சிறு பகுதியாக பிரித்து வையுங்கள். கடினமாக இருந்தால் உரலில் இட்டு துண்டுகளாக இடித்துக் கொள்ளுங்கள்.

    இரும்பு வாணலில் மிதமான தீயில் இதை வைத்து லேசாக வறுத்து பெருங்காயம் பொரிந்து நிறம் மாறும். லேசான மஞ்சள் நிறமாக, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் (நன்றாக பொரிய வேண்டும்) வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    பெருங்காயத்தை கட்டியாக அப்படியே வாணலியில் சேர்த்தும் சூடு செய்யலாம். பிறகு இறக்கி அதை துண்டுகளாக பிரிக்கலாம். நன்றாக பொரிந்த காயத்துண்டுகளை இப்போது இறக்கி ஆறவையுங்கள். வாணலியில் உப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    பிறகு இந்த பெருங்காயத் துண்டுகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன்பிறகு மிக்சியில் நைசாக அரைத்து பொடியாக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.

    பெருங்காயத்தின் பயன்கள்:

    மசாலாக்கள் நிறைந்த உணவுகள் அனைத்திலும் பெருங்காயம் சிட்டிகை சேர்ப்பது மணத்தை அதிகரிக்க செய்யும். பெருங்காயம் கடவுளின் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இவை உணவை அமிர்தமாக்கும் வல்லமை கொண்டவை. ஆரோக்கியம் அளிப்பவை.

    அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாயுவை உண்டாக்கும் உணவுகளில் கண்டிப்பாக பெருங்காயம் சேர்க்க வேண்டும். வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.

    வாழைப்பழத்தை தோல் உரித்து பழத்தின் மேல் பெருங்காய பொடியை வைத்து பல்லில் படாமல் விழுங்கினால் வாயு கழியும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள். மோரில் பெருங்காயம் சேர்த்தும் குடிக்கலாம். அன்றாட உணவு முறையில் ஏதாவது ஒரு வகையில் பெருங்காயம் சேர்ப்பது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும்.

    Next Story
    ×