search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Hearing impairment"

  • இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள்.
  • வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

  தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்...

   இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையை கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.

  இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

  இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவதால் காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு, பாக்டீரியாவின் வளர்ச்சி உள்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

  இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

   இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

  இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் மட்டும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

  • இங்கிலாந்திலிருந்து 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி
  • நலிவடைந்த நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் அதிகம் உள்ளனர் என்றார் டாக்டர். ரெயின்

  இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷயர் (West Yorkshire) பகுதியில் உள்ளது, பிராட்ஃபோர்டு (Bradford) நகரம்.

  இந்நகரின் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" (Bradford Royal Infirmary) மருத்துவமனையை சேர்ந்த "ஈஎன்டி" (ENT) எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், செவித்திறன் பரிசோதனை நிபுணர்களும் (audiologists), தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி (Malawi) நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர்.

  இங்கிலாந்திலிருந்து சுமார் 8,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடு மலாவி என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த சேவையில், பேராசிரியர். கிரிஸ் ரெயின் (Prof. Chris Raine) தலைமையிலான பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.

  அது மட்டுமின்றி மலாவி பகுதியில் உள்ள ஈஎன்டி மருத்துவர்களுக்கும் ஈஎன்டி சிகிச்சையளிப்பதில் உள்ள நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.


  இது குறித்து பேராசிரியர். டாக்டர் ரெயின் கூறியதாவது:

  செவித்திறன் குறைபாடு கண்ணுக்கு புலப்படாத நோய்.

  இது குழந்தைகளுக்கு கல்வி கற்பதில் சிரமத்தை உண்டாக்கி, ஈடுபாட்டை குறைக்க கூடிய குறைபாடு. பிறருடன் பழகுவதையும், வேலை வாய்ப்புகளையும் இந்த குறைபாடு தடை செய்து விடலாம்.

  பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள பல நாடுகளில் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் அதிகம் உள்ளனர்.

  ஆனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு இது குணப்படுத்தக் கூடியதுதான்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  செவித்திறன் குறைபாட்டை சரி செய்வதில் முக்கிய சிகிச்சை முறையான "காக்லியர் இம்ப்லேன்ட்" (cochlear implant) எனும் சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகளை "மெட்எல்" (MedEl) எனும் நிறுவனம் இவர்களுக்கு இலவசமாக தருவது குறிப்பிடத்தக்கது.

  இதன் மூலம் பிராட்ஃபோர்டு மருத்துவர்கள், மலாவியில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு செவித்திறன் குறைபாட்டை நீக்கியுள்ளனர்.

  வளர்ச்சியடைந்த நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நாட்டிற்கு சென்று பெரும் மருத்துவத்தொண்டில் 10 வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வரும் பிராட்ஃபோர்டு மருத்துவ குழுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


  • தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
  • இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண், மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது.

  ஒவ்வொரு நாளும் நம்முடைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் `ஸ்மார்ட் ஃபோன்கள்'. ஆம்...! இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருடைய கைகளிலுமே புகுந்து விளையாடுகிறது இந்த `ஸ்மார்ட்' போன்கள்.

  செல்போன் உடன், அதன் இணைபிரியா நண்பனாக காதில் மாட்டிக்கொள்ள இயர்போன் கட்டாயம் கையில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு. இதன் பயன்பாடு காரணமாக 1.1 பில்லியன் இளைய தலைமுறையினர் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

  கதிர்வீச்சு காது கேளாமைக்கு காரணமா...?

  செல்ஃபோனை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் பார்வை பாதிப்படைகிறது. ஆனால் அதேநேரத்தில் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது. செல்ஃபோன் அழைப்புகளின் போது `ரேடியோ ஃப்ரீக்வன்ஸி' எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளிப்படும். இது அதிகளவிலான பாதிப்பை உண்டாக்கும். அதாவது, ஒருவரின் மூளை வரை சென்று பாதிப்பை உண்டாக்கக் கூடியது. இந்த கதிர்வீச்சுகளின் வேகமானது குறையவும் செய்யலாம், கூடவும் செய்யலாம் அது முழுக்க முழுக்க அவரவர் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தது.

   தொடர்ந்து பாடல் கேட்பது தவறா...?

  காதுகளில் இயர்போன்களை மாட்டிக்கொண்டு பேசுவதைக் காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதையே பலரும் விரும்புகிறார்கள். தொடர்ந்து அதிக நேரம் பாடல்கள் கேட்கும் போது நம்முடைய காதுகள் செவித்திறனை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

  மேலும் இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் காதுகளின் உயிரணுக்களின் உணர்ச்சி நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும். இதனை மீண்டும் சரிசெய்ய சாத்தியமே இல்லை. இதனால் நிரந்தர காது கேளாமை கூட ஏற்படலாம்.

  மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறலுக்கு என்ன காரணம்...?

  இயர்போன்களை பயன்படுத்துவதை ஒரு அன்றாட பழக்கமாகக் கொள்வது ஒருவரது சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதட்டம் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இறுதியாக நம்முடைய மனஅமைதி கெடும். அதுபோக, இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால் சாதாரணமாக கவனம் செலுத்துவதில்கூட குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

  இயர்போன்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா...?

  இயர்போன்களை அதிகநேரம் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பதால் காதுகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் இதயம் வேகமாக துடிக்கும். அதோடு இதயம் சார்ந்த அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

   பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:

  சத்தங்கள் டெசிபல் என்ற அளவீடுகளில் அளக்கப்படுகின்றன. அதாவது 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காதுகள் பாதிப்பு அடைவதில் இருந்து பாதுகாக்கப்படும். ஆனால், 85 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடிய சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். எனவே, 60 டெசிபலுக்கு குறைவாக பயன்படுத்துவது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

  இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்காது.

  ஹெட்போனோ அல்லது இயர்போனோ... தொடர்ந்து கேட்காமல் இடைவெளிவிட்டு கேட்பது நல்லது. அதாவது அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிட ஓய்வும் அதே நேரத்தில் ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிட ஓய்வும் கொடுக்க வேண்டும். இயர்போனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும்.

  • முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

  காங்கயம்:

  காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச ஆடியோகிராம் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் அதற்கு உண்டான மருத்துவம் அளிக்கப்படும். ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

  குறைபாடு உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் முகாமிற்கு வருபவர்கள் தங்கள் புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை,முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் பழைய குடும்ப அட்டை இவைகளை கண்டிப்பாக எடுத்து வரவும் தெரிவித்தனர்.

  ×