என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Deepavali"
- தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
- தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
சென்னை:
அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்லக்கூடிய எஸ்.இ.டி.சி. பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் கடந்த 1, 2-ந் தேதிகளில் முன்பதிவு செய்தனர். அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்டன.
அதே போல பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு வருவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்படும்.
- குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
- தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கத்துடன் டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மது டெட்ரா பேக்கில் தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் ரூ.140-க்கு விற்கப்படுவதால் கூலி வேலை செய்பவர்களால் அதை வாங்கி குடிக்க முடியாமல் கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளில் குவாட்டரில் பாதி அளவான 90 மில்லியில் மதுபானங்கள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.
இது சம்பந்தமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் 90 மில்லி மது டெட்ரா பாக்கெட்டுகள் விற்பனை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் 90 மில்லி மது டெட்ரா பேக்கில் தான் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
டெட்ரா பாக்கெட்டுகளில் விற்கப்படும் சிறிய அளவிலான மது வகைகள் எந்த அளவுக்கு அங்கு புழக்கத்தில் உள்ளது என்பது பற்றியும் விவரம் சேகரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. மதுபானங்களை தீபாவளி முதல் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணத்தை அதிகம் விரும்புகிறார்கள். பஸ் கட்டணத்தை விட செலவு குறைவு மற்றும் குறித்த நேரத்திற்கான பயணம் என்பதால் ரெயிலில் பணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அக்டோபர் 28, 29, 30-ந்தேதிகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிடுவார்கள்.
ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதனால் அக்டோபர் 28-ந்தேதி (திங்கட்கிழமை)க்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதையடுத்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக முடிந்தது. பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தனர்.
இதேபோல் அக்டோபர் 29-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளையும், அக்டோபர் 30-ந்தேதி பயணம் செய்பவர்கள் நாளை மறுநாளும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தீபாவளி பண்டிகை முன்பதிவுகளை வைத்து சிறப்பு ரெயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து ரெயில்வே முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் அதிகாரிகள்.
சென்னை:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
இதுபோன்ற சம்பவம் இனி ஏற்படாமல் தடுக்கும் விதமாக பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள 4 குழுக்களை அமைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தீபாவளி முடியும்வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கோவிட் பெருந்தொற்று விமான போக்குவரத்து துறையை மிகவும் பாதித்தது
- தொடர்ந்து 3 நாட்கள் விமான போக்குவரத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நலிவடைந்த பல தொழில்களில் சுற்றுலா துறையும், அதை சார்ந்திருந்த விமான போக்குவரத்தும் ஒன்று. பல உலக நாடுகளில் 2020 காலகட்டத்தில் சரிவடைந்த விமான போக்குவரத்து நிறுவனங்களின் வர்த்தகம் தற்போது வரை முழுமையாக சீரடையவில்லை.
ஆனால், இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தும், விமான நிறுவனங்களின் வருமானமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4,63,417 பேர் இதுவரை நவம்பர் மாதத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.
"நேர்மறை கொள்கைகள், வளர்ச்சியை நோக்கிய இலக்குகள் மற்றும் பயணிகளுக்கு இந்திய விமான சேவையில் உள்ள நம்பிக்கை காரணமாக, ஒவ்வொரு விமான பயணமும் ஒரு புதிய உச்சத்தை தொடுகிறது" என சிவில் விமான போக்குவரத்து துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.
Post-Covid, India's domestic aviation's turnaround story has not just been overwhelming but inspiring as well. Positive attitude, progressive policies, and deep trust among passengers are taking it to new heights with every flight, every day. pic.twitter.com/WVFGE8pg59
— MoCA_GoI (@MoCA_GoI) November 24, 2023
இது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
விமான பயண போக்குவரத்து வியாழக்கிழமை (நவம்பர் 23) கணக்கின்படி 5998 என உள்ளது.
நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து உள்ளூர் விமான போக்குவரத்து, எண்ணிக்கையின்படி புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
தீபாவளி பண்டிகை மற்றும் இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டி ஆகியவை காரணமாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த புதிய சாதனைக்கு ஒரு காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் டாடா குழுமமும் இண்டிகோ குழுமமும் 90 சதவீத சந்தையை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- மதுபோதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய தீப ஒளி திருநாளில், போதையின் ஆதிக்கம் காரணமாக 20 உயிர்கள் பலியாகியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சென்னையில் நடந்த விபத்து உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிர்க்கொல்லி மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்க வேண்டும் என்பதற்கு இதை விட வலிமையான காரணங்கள் இருக்க முடியாது.
மற்றொரு புறம், தீப ஒளி திருநாள் மற்றும் அதற்கு முந்தைய இரு நாள்களில் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.633 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மதுபோதையில் நடைபெறும் விபத்துகள் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தான் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்தாக உள்ளன. மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்காமல் தமிழ்நாட்டை முன்னேற்ற முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவதுடன், கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது.
- நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்களான காகித ஆலைகள், அச்சுத்தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
நாடு முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.
2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020-ல் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது.
தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து கடந்தாண்டு (2022) தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது.
இந்நிலையில் நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொடர் வெடி விபத்துகள், சீதோஷ்ண நிலை காரணமாக கடைசி கட்ட உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகளால் கடந்த ஆண்டு விற்பனை இலக்கை ஒட்டியே இந்த ஆண்டும் பட்டாசு பட்டாசுகள் விற் றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ரூ.5,950 கோடிக்கு மட்டுமே பட்டாசுகள் விற்பனையாகி கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.50 கோடிக்கு குறைவாகவே இருந்துள்ளது.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் இளங்கோவன் கூறும்போது, தொடர் மழையினால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு, தொடர் பட்டாசு வெடி விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர் ஆய்வுகள், நடவடிக்கையால் கடந்த ஒரு மாத காலத்தில் பட்டாசு உற்பத்தியில் 10 சதவிகிதம் பாதிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழக பட்டாசு விற்பனையில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட நடப்பாண்டில் ரூ.50 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.
- எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது.
- குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே புரூக்லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்தது. தொடர்ந்து ஒரு நாயை துரத்திக்கொண்டு ஓடியது.
அப்போது எதிர்பாராதவிதமாக விமலா என்பவரது பங்களா வீட்டுக்குள் சிறுத்தை நுழைந்தது. இதை கண்ட அவர் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்து போயினர். மேலும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால், மிரண்டு போன சிறுத்தை பயத்தில் அங்கேயே பதுங்கியது. உடனே தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர், பங்களா வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்ட முயன்றனர். அவர்கள் மேல் சிறுத்தை பாய்ந்து கடித்து குதறியது. தீயணைப்பு வீரர்கள் முரளி(வயது 56), குட்டி கிருஷ்ணன்(59), கண்ணன்(54), விஜயகுமார்(32), வருவாய் உதவியாளர் சுரேஷ்குமார்(32) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை சக தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் குட்டி கிருஷ்ணன் மட்டும் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதை அறிந்ததும், முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், இணை இயக்குனர் அருண், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் வனத்துறையினர் கவச உடை அணிந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர்கள் 4 இடங்களில் கேமராக்கள் பொருத்தி விடிய விடிய சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 26 மணி நேரத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 6 மணிக்கு அந்த வீட்டில் இருந்து சிறுத்தை வெளியேறியது. இந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
வனப்பகுதியில் இருந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருந்து வனத்துறையினருக்கும், வருவாய்த்துறையினருக்கும் போக்கு காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன.
- கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,050-க் கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன. இதனால் சிவகாசியில் உள்ள பிரபல நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர்.
வழக்கமான உற்பத்தியை விட இந்த ஆண்டு 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தி அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கடையில் இருந்த 13 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக கருகி பலியானர்.
இந்த விபத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழுவினர் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் தீவிர சோதனை செய்தனர். இதனால் பல இடங்களில் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் பாதித்தது. பின்னர் நிலைமை சகஜமானது.
விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்த ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விற்பனையானதாக கூறப்படுகிறது.
ஆனால் சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டியையொட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.
பெங்களூரு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தால் அங்கு பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்த நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஓசூர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற்று கடந்த 10 நாட்களாக பட்டாசு விற்பனையில் தீவிரம் காட்டினர்.
இதனால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிவகாசி உற்பத்தியாளர்கள் பெங்களூரு விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பலர் பல்வேறு ஊர்களில் தற்காலிக கடைகள் அமைத்து பட்டாசுகளை விற்றனர்.
தீபாவளியையொட்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக அளவில், கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
கறிக்கோழியை பொறுத்தவரை ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.95 செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை ரூ.98 நிர்ணயம் செய்திருந்தாலும், வியாபாரிகள் விலையை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு உயரவில்லை. இருப்பினும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம்.
கோழிகளின் தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதனால் பெரிய அளவில் பண்ணையாளர்களுக்கு லாபம் இல்லை. கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே வியாபாரிகள் கோழிகளை பிடித்தால் பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியி, தீபாவளியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இருளின் மீது ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அநீதியின் மீது நீதியையும் வென்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கருணை, நேர்மறை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். தீபாவளி பண்டிகை நம் மனசாட்சியை ஒளிரச் செய்து, மனிதகுலத்தின் நலனுக்காக உழைக்கத் தூண்டுகிறது. ஒரு தீபம் பலவற்றை ஒளிரச் செய்யும். அதேபோல ஏழை, எளியோரின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வரலாம்.
தீபத் திருவிழாவை நாம் அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.
- உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
- ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு பண்டிகைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதுபோல தீபாவளிப் பண்டிகையும் இந்தியாவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அறியாமையின் மீதான அறிவையும் குறிக்கிறது. தீபாவளி அன்று நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது, புத்தாடைகள் அணிவது நம் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியையும், குடும்பத்தினருடனும், உறவினருடனும் நம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்து கொள்ள நல்வாய்ப்பாக உள்ளது.
ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் இந்நாளில் அக்கம், பக்கத்தினருடன் அன்பையும், மரியாதையை யும், வலுவான பிணைப்பு களையும் குறிக்கும் வகையில், பரிசுப்பரிமாற்றங்கள் மற்றும் இனிப்புகளையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொண்டு வருகிறோம்.
நம் வாழ்வில் இருள் நீங்கி ஒளி உண்டாகுவதை குறிக்கும் விதமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபா டுகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பது என்பது நம் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணமாக பசுமை பட்டாசுகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
தீபாவளி என்பது வெறும் பண்டிகை அல்ல. இது நம் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்துள்ளது. இந்நன்னாளில் அனைவரது இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கி, உங்களது ஆசைகளும், கனவுகளும் நிறைவேற இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் களை கட்டியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகேயுள்ள குந்தாரப்பள்ளி புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர்.
செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு துவங்கிய வார சந்தையில் தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.
ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடுகள் வாங்கிச்செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலை விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்றும் வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் ரூ. 900க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் சுமார் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வருகையால் அந்த பகுதியே களை கட்டியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்