என் மலர்tooltip icon

    வழிபாடு

    வாழ்வில் இன்ப ஒளி ஏற்றும் தீபாவளி
    X

    வாழ்வில் இன்ப ஒளி ஏற்றும் தீபாவளி

    • தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
    • உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம்.

    இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் மிகவும் பிரமாண்டமாக, ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. 'தீப ஒளி திருநாள்' எனப்படும் தீபாவளி, உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பட்டாசு, புத்தாடை, இனிப்பு, வழிபாடு என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆனந்தப்படுத்தும் நாளாக தீபாவளி திருநாள் உள்ளது.

    'தீபம்' என்றால் 'விளக்கு' என்றும், 'ஆவளி' என்றால் 'வரிசை' என்றும் பொருள். விளக்குகளை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடும் நாளே தீபாவளி எனப்படும். வாழ்வில் இருள் எனும் தீமை நீங்கி, நன்மை எனும் ஒளியை பரவச் செய்யும் தினமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. ராமாயணத்தில் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த ராமன், ராவணனை அழித்துவிட்டு வனவாசம் முடிந்து, மனைவி சீதா தேவி, தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார். ராமன் திரும்பி வருவதை வரவேற்கும் வகையில் அயோத்தி மக்கள் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுவதாக சிலர் கூறுகிறார்கள்.

    இருப்பினும், நரகாசுரன் எனும் அரக்கனை அழித்த தினமே தீபாவளி என பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. ஒரு முறை இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை தூக்கிச் சென்று கடலுக்குள் மறைத்து வைத்தான். பூமியை மீட்பதற்காக மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார். அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே பவுமன் எனும் இயற்பெயர் கொண்ட 'நரகாசுரன்'.

    வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் என்றாலும், அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் இயல்பாகவே அசுர சுபாவத்துடன் இருந்தான். நரன் என்றால் மனிதன் என்று பொருள். மனிதனாக இருந்தாலும் அசுர குணங்கள் கொண்டவன் என்பதால் 'நரகஅசுரன்' எனப்பட்டான். அப்பெயரே 'நரகாசுரன்' என்றானது.

    நரகாசுரன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். இவன் மக்களையும், முனிவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். மிகவும் சக்தி படைத்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகை தாண்டி விண்ணுலகையும் ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான். தேவர்களை அழிக்க வேண்டும் என்றால் சாகா வரம் பெற வேண்டும் என்று எண்ணிய நரகாசுரன், பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த பிரம்ம தேவர், அவன்முன் தோன்றினார். நரகாசுரன் பிரம்ம தேவரிடம், ''சாகா வரம் வேண்டும்'' என்று கேட்டான்.

    பிரம்ம தேவர், ''உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது உண்டு. அதனால் வேறு ஏதேனும் வரம் கேள்'' என்றார். உடனே, ''நான் என் தாயின் கையாலே இறக்க வேண்டும்'' என்ற வரத்தை கேட்டான். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது அவனின் எண்ணம். பிரம்ம தேவரும் அவ்வாறே வரத்தை வழங்கினார். இதையடுத்து, தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் மேலும் பல கொடுமைகளை செய்தான், நரகாசுரன். மக்கள், முனிவர்கள், தேவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். இதனால் மனம் வருந்திய தேவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.

    கிருஷ்ணரும் நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். கிருஷ்ணர், நரகாசுரனை அழிக்க அவன் ஆட்சி செய்த இடத்துக்கு புறப்பட்டார். கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமாவும் உடன் சென்றாள். நரகாசுரனின் ராஜ்ஜியத்துக்கு காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்துவிட்டு நகருக்குள் நுழைந்தார், கிருஷ்ணர்.

    பின்பு நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணர், நரகாசுரன் எய்த அம்பினால் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்தது போல் நடித்தார். கிருஷ்ணர் தேரில் சாய்ந்து விழுந்ததை கண்ட சத்தியபாமா, மிகவும் கோபம் கொண்டாள். தன் கணவருக்காக நரகாசுரனுடன் போர் புரிந்து, அவனை வதம் செய்தாள். நரகாசுரன், தான் பெற்ற வரத்தின்படியே தன் தாயின் கையாலேயே மரணத்தை பெற்றான். நரகாசுரன், இறக்கும் தருவாயில்தான், தன் தாயான பூமாதேவியின் அவதாரம் தான் சத்தியபாமா என்பதை அறிந்தான்.

    நரகாசுரனை வதம் செய்த பின்புதான், சத்தியபாமாவுக்கும் தன் மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. இருப்பினும், தன் மகனின் இறப்பு மக்களுக்கான மகிழ்ச்சி என்பதை புரிந்த கொண்டாள். சத்தியபாமா கிருஷ்ணரிடம், ''இன்றைய தினம், மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'' என்று வேண்டினாள். அவ்வாறே கிருஷ்ணரும் அருள்புரிந்தார். அதன்படி, நரகாசுரன் எனும் அரக்கன் அழிந்து மகிழ்ச்சி பொங்கிய நாளாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். தீபாவளி புனித நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜை அறையை சுத்தம் செய்து, புத்தாடை உடுத்தி இறைவனின் படத்துக்கு முன்பாக விளக்கேற்றி, இனிப்புகள், பலகாரங்கள் செய்து படைத்து வழிபட வேண்டும். உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம். தொழில் செய்வோர் தங்களிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு புத்தாடை, இனிப்பு, பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள்.

    தீபாவளி என்பது வாழ்வின் புது தொடக்கமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரிடமும் சகோதர உணர்வுடன் மகிழ்ச்சியை பகிர்வோம். தீபாவளியையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் குடும்பத்தோடு கலந்துகொண்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் கிருஷ்ணரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    தீபாவளி நன்னாளில் இல்லங்களில் விதவிதமான வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் வெடித்து சிதறி இன்பம் பரவட்டும்.

    Next Story
    ×