என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி பண்டிகை"

    • தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தீபாவளி தினமான இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் மழை பெய்து வருவதால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.

    • மீன், ஆட்டு, கோழி இறைச்சிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
    • ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.

    புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இறைச்சி கடைகளில் ஏராளமான மக்கள் இறைச்சி வாங்கி குவிந்தனர்.

    மீன், ஆட்டு, கோழி இறைச்சிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இன்று ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.850 முதல் ரூ.950 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

    • புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று மக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
    • சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.

    புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    • தீபாவளி முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாதவது:-

    இருள் இன்றுடன் விலகட்டும்,

    மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்!

    இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தீபாவளி தினத்தன்று நண்பர்களை வீட்டுக்கு வரவழையுங்கள்.
    • வீட்டுக்கு அருகில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.

    தீபாவளி பண்டிகை... மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்

    தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என்று நாம் மகிழ்ச்சியாக இருப்போம். இந்த மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்படி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கேட்கலாம். அதற்கான பதில் இதோ!

    * தீபாவளி தினத்தன்று நண்பர்களை வீட்டுக்கு வரவழையுங்கள்.

    * பெற்றோர், நண்பர்கள் என அனைவரும் வீட்டில் செய்த பலகாரங்களையும், உணவுகளையும் பகிர்ந்து உண்ணுங்கள்.

    * தீபாவளி கொண்டாட முடியாத சூழலில் இருக்கும் நண்பர்களுக்கு ஆடை வாங்கி கொடுக்கலாம்.

    * உங்கள் வீட்டுக்கு அருகில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.

    நாம் செய்யும் இந்த செயல்பாடுகளால் தீபாவளி மகிழ்ச்சி மற்றவர்களுக்கு பகிரப்படுகிறது. மகிழ்ச்சியாக இருங்கள். பிறரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள். பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.

    • குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.
    • கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.

    தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான். பட்டாசுக்களை வெடிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் பட்டாசுக்களை வெடிக்கும்போது கட்டாயம் பின்பற்றவேண்டியவை பற்றி தெரிந்து கொள்வோம்.

    * பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஒரு வாளி தண்ணீர், முதலுதவி பெட்டியை உடன் வைத்திருங்கள்.

    * வெடிக்கும் பட்டாசுகளை கையில் வைத்து தூக்கி எறியக் கூடாது.

    * அருகில் தீப்பற்றும் எந்த பொருட்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

    * பட்டாசுகளை வெடிக்க திறந்தவெளி பகுதியை தேர்ந்தெடுங்கள்.

    * குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள்.

    * வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும்.

    * வெடித்த பட்டாசுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு வாளி தண்ணீரில் மூழ்க வைக்கவும்.

    * நல்ல தரமான, உரிமம் பெற்ற பட்டாசுகளை வாங்கவும், தரத்தில் சமரசம் செய்ய வேண்டாம்.

    * கால்களை முழுவதும் மூடும் காலணிகள் பயன் படுத்துங்கள். ஷூ பயன்படுத்துவது காலில் காயம் ஏற்படுவதை தடுக்கும்.

    * கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும்.

     

    * 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பட்டாசுகளுக்கு அருகில் அனுமதிக்காதீர்கள். மற்ற வயது குழந்தைகளை அவர்களாகவே பட்டாசுகளை பற்றவைக்க அனுமதிக்காதீர்கள்.

    * பட்டாசுகளை வெடிக்க நீண்ட பத்தியை பயன்படுத்தவும். பட்டாசுகளை பற்ற வைக்கும்போது முகத்தை பட்டாசுகளுக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம். குறிப்பாக குனிந்து பட்டாசு பற்றவைப்பதை தவிர்க்கவும்.

    * ஒருபோதும் சீரற்ற முறையில் பட்டாசுகளை வீசாதீர்கள். ஒன்றுக்கு மேல் பட்டாசுகளை ஒன்றிணைத்து பற்ற வைக்காதீர்கள்.

    * நைலான், பட்டு, சிந்தட்டிக் உடைகளை அணிய வேண்டாம். ஏனெனில் அவை விரைவாக தீப்பிடிக்கும். தீப்பிடிக்கக்கூடிய தளர்வான ஆடைகளையும் அணியாதீர்கள்.

    * வீட்டின் உட்புறத்திலோ அல்லது வாகன நிறுத்துமிட பகுதியிலோ ஒருபோதும் பட்டாசுகளை பற்றவைக்காதீர்கள்.

    * பெரிய தீக்காயங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவரின் ஆடையை அகற்றி, அவர் மீது போர்வை போர்த்துங்கள்.

    * கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் கண்ணை அழுத்தி தேய்க்காதீர்கள். அது காயத்தை அதிகப்படுத்திவிடும்.

    * பட்டாசு வெடித்த தீக்காயத்தின் மீது பற்பசை, எண்ணெய், மஞ்சள் தூள், மை தடவக்கூடாது. குளிர்ந்த நீரையோ, ஐஸ் கட்டியையோ கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. தண்ணீரில் 10 நிமிடங்கள் கழுவி விட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    * பட்டாசுகளை பற்றவைக்கும்போது உங்கள் பாக்கெட்டில் பட்டாசுகளை வைத்திருக்கக்கூடாது.

    * மின் கம்பங்கள் அல்லது கம்பிகளுக்கு அருகில் ஒரு போதும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

    * பட்டாசு ஒருமுறை வெடிக்கவில்லை என்றால் மீண்டும் நெருப்பு பற்றவைக்க முயற்சிக்கக்கூடாது.

    • நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
    • துன்பங்கள் கரைந்து ஒளி மயமான எதிர்காலம் பிறக்கட்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன், திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் இருளை நீக்கி, ஒளியை ஏற்றிடும் தினமாகவும்; தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது.

    இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து ஒளி மயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தூய வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் டாக்டர் பா.இசக்கிமுத்து, மாநில தலைவர் ஆ.மணி அரசன், தமிழ்நாடு மண்பாண்ட குலாலர் சங்கம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோரும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
    • உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம்.

    இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் மிகவும் பிரமாண்டமாக, ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. 'தீப ஒளி திருநாள்' எனப்படும் தீபாவளி, உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பட்டாசு, புத்தாடை, இனிப்பு, வழிபாடு என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆனந்தப்படுத்தும் நாளாக தீபாவளி திருநாள் உள்ளது.

    'தீபம்' என்றால் 'விளக்கு' என்றும், 'ஆவளி' என்றால் 'வரிசை' என்றும் பொருள். விளக்குகளை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடும் நாளே தீபாவளி எனப்படும். வாழ்வில் இருள் எனும் தீமை நீங்கி, நன்மை எனும் ஒளியை பரவச் செய்யும் தினமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. ராமாயணத்தில் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த ராமன், ராவணனை அழித்துவிட்டு வனவாசம் முடிந்து, மனைவி சீதா தேவி, தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார். ராமன் திரும்பி வருவதை வரவேற்கும் வகையில் அயோத்தி மக்கள் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுவதாக சிலர் கூறுகிறார்கள்.

     

    இருப்பினும், நரகாசுரன் எனும் அரக்கனை அழித்த தினமே தீபாவளி என பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. ஒரு முறை இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை தூக்கிச் சென்று கடலுக்குள் மறைத்து வைத்தான். பூமியை மீட்பதற்காக மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார். அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே பவுமன் எனும் இயற்பெயர் கொண்ட 'நரகாசுரன்'.

    வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் என்றாலும், அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் இயல்பாகவே அசுர சுபாவத்துடன் இருந்தான். நரன் என்றால் மனிதன் என்று பொருள். மனிதனாக இருந்தாலும் அசுர குணங்கள் கொண்டவன் என்பதால் 'நரகஅசுரன்' எனப்பட்டான். அப்பெயரே 'நரகாசுரன்' என்றானது.

    நரகாசுரன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். இவன் மக்களையும், முனிவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். மிகவும் சக்தி படைத்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகை தாண்டி விண்ணுலகையும் ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான். தேவர்களை அழிக்க வேண்டும் என்றால் சாகா வரம் பெற வேண்டும் என்று எண்ணிய நரகாசுரன், பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த பிரம்ம தேவர், அவன்முன் தோன்றினார். நரகாசுரன் பிரம்ம தேவரிடம், ''சாகா வரம் வேண்டும்'' என்று கேட்டான்.

    பிரம்ம தேவர், ''உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது உண்டு. அதனால் வேறு ஏதேனும் வரம் கேள்'' என்றார். உடனே, ''நான் என் தாயின் கையாலே இறக்க வேண்டும்'' என்ற வரத்தை கேட்டான். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது அவனின் எண்ணம். பிரம்ம தேவரும் அவ்வாறே வரத்தை வழங்கினார். இதையடுத்து, தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் மேலும் பல கொடுமைகளை செய்தான், நரகாசுரன். மக்கள், முனிவர்கள், தேவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். இதனால் மனம் வருந்திய தேவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.

    கிருஷ்ணரும் நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். கிருஷ்ணர், நரகாசுரனை அழிக்க அவன் ஆட்சி செய்த இடத்துக்கு புறப்பட்டார். கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமாவும் உடன் சென்றாள். நரகாசுரனின் ராஜ்ஜியத்துக்கு காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்துவிட்டு நகருக்குள் நுழைந்தார், கிருஷ்ணர்.

    பின்பு நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணர், நரகாசுரன் எய்த அம்பினால் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்தது போல் நடித்தார். கிருஷ்ணர் தேரில் சாய்ந்து விழுந்ததை கண்ட சத்தியபாமா, மிகவும் கோபம் கொண்டாள். தன் கணவருக்காக நரகாசுரனுடன் போர் புரிந்து, அவனை வதம் செய்தாள். நரகாசுரன், தான் பெற்ற வரத்தின்படியே தன் தாயின் கையாலேயே மரணத்தை பெற்றான். நரகாசுரன், இறக்கும் தருவாயில்தான், தன் தாயான பூமாதேவியின் அவதாரம் தான் சத்தியபாமா என்பதை அறிந்தான்.

    நரகாசுரனை வதம் செய்த பின்புதான், சத்தியபாமாவுக்கும் தன் மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. இருப்பினும், தன் மகனின் இறப்பு மக்களுக்கான மகிழ்ச்சி என்பதை புரிந்த கொண்டாள். சத்தியபாமா கிருஷ்ணரிடம், ''இன்றைய தினம், மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'' என்று வேண்டினாள். அவ்வாறே கிருஷ்ணரும் அருள்புரிந்தார். அதன்படி, நரகாசுரன் எனும் அரக்கன் அழிந்து மகிழ்ச்சி பொங்கிய நாளாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். தீபாவளி புனித நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜை அறையை சுத்தம் செய்து, புத்தாடை உடுத்தி இறைவனின் படத்துக்கு முன்பாக விளக்கேற்றி, இனிப்புகள், பலகாரங்கள் செய்து படைத்து வழிபட வேண்டும். உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம். தொழில் செய்வோர் தங்களிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு புத்தாடை, இனிப்பு, பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள்.

    தீபாவளி என்பது வாழ்வின் புது தொடக்கமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரிடமும் சகோதர உணர்வுடன் மகிழ்ச்சியை பகிர்வோம். தீபாவளியையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் குடும்பத்தோடு கலந்துகொண்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் கிருஷ்ணரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    தீபாவளி நன்னாளில் இல்லங்களில் விதவிதமான வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் வெடித்து சிதறி இன்பம் பரவட்டும்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • 17-ந்தேதி இயக்கப்பட்ட 4,067 பஸ்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 565 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் வாரவிடுமுறை என்பதால், மொத்தம் 3 நாட்கள் தீபாவளி விடுமுறை கிடைக்கிறது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் சிலர் மேலும் 2 நாட்கள் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்கவும் செய்கின்றனர்.

    சென்னையை பொறுத்தவரையில், வெளிமாவட்டங்களிலிருந்து பணிக்காகவும், படிப்புக்காகவும் அதிகளவில் மக்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களெல்லாம் இதுபோன்ற பண்டிகைகாலங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதன்படி, சென்னையில் கடந்த 3 நாட்களாக மக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையையொட்டி 20,378 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னையில் இருந்து மட்டும் 14,268 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. 16-ந்தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட 2,853 பஸ்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 275 பேர் பயணித்தனர்.

    17-ந்தேதி இயக்கப்பட்ட 4,067 பஸ்களில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 565 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று இயக்கப்பட்ட 4 ஆயிரத்து 926 பஸ்கள் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 152 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பஸ்களில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 922 பேர் பயணம் செய்துள்ளனர்.

    • ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
    • சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

    ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

    பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் செய்யலாம். குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம்.

    புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். புரசு இலையும் பலாச மலரும் கிடைக்காதவர்கள் சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.

    சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து  தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின்போது, கட்டாயமாக 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.



    இந்த வழிபாட்டை தீபாவளியில் தொடங்கி தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்துவர கோடி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 72 நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் குபேர யந்திரத்தையும், லட்சுமி குபேரர் படத்தையும் வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம். இப்படி செய்துவர செல்வப் பெருக்கம் அதிகரிக்கும். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

    வடக்கு முகம் நோக்கி அமரந்து பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சவுபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்யலாம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாகனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.

    • மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
    • பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.

    பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×