என் மலர்
வழிபாடு

தீபாவளி ஆஸ்தானம் கோலாகலம் - திருப்பதி கோவிலில் கூட்டம் அலைமோதியது
- தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை.
- திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்தார். ஏழுமலையானின் படைத்தளபதி விஸ்வக்சேனர் மற்றொரு பல்லக்கில் பவனி வந்தார்.
அர்ச்சகர்கள் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையானுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை. தோமாலா அர்ச்சனை சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கலந்துகொண்டு பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர். 23,304 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3. 86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.






