என் மலர்
நீங்கள் தேடியது "Diwali legiyam"
- தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம்.
- தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது.
தீபாவளியின் போதுதான் நாம் பெரும்பாலும் அதிகளவிலான எண்ணெய் உணவுகள் எடுத்துக்கொள்வோம். அதுவும் எண்ணெய், கொழுப்பு, சர்க்கரை ஆகிய மூன்றையும் ஒரேநேரத்தில் எடுத்துக்கொள்வோம். இவற்றால் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் வயிற்று உப்புசம், திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவற்றை சரிசெய்ய மருத்துவ குணங்கள் கொண்ட, எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கும் தீபாவளி லேகியம் குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்
தீபாவளி லேகியப்பொடி
வெல்லம்
தேன்
நெய்
இஞ்சி
நல்லெண்ணெய்
செய்முறை
கடையில் தீபாவளி லேகிய மருந்து பொடி கிடைக்கும். அந்தப்பொடியை வைத்து தீபாவளி லேகியம் செய்வது எப்படி என பார்ப்போம். கடையில் கிடைக்கும் தீபாவளி லேகியப்பொடியை 100 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப 100 கிராம் இஞ்சி எடுத்துக்கொண்டு, அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் சிறுசிறு துண்டுகளாக இஞ்சியை வெட்டி, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த சாற்றை அரைமணிநேரம் அப்படியே வைக்கவேண்டும். அதன் அடியில் வெள்ளை நிறத்தில் தண்ணீர் படியும். கீழே படிந்ததை விட்டுவிட்டு, மேலே நிற்கும் இஞ்சி தண்ணீரை தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில், 200 கிராம் வெல்லத்தை எடுத்து பாகு காய்ச்சுவது போல் கரைக்க வேண்டும். வெல்லம் சூட்டில் கரைந்தபின் அதில், எடுத்துவைத்துள்ள இஞ்சித்தண்ணீரை ஊற்றவேண்டும். பின்னர் லேகியப்பொடியையும் சேர்க்கவேண்டும். அந்தக் கலவையை தொடர்ந்து கலந்துவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். கலவை கெட்டியாக மாறும்போது, கொஞ்சம் சொஞ்சமாக இடையிடையே நெய் மற்றும் நல்லெண்ணெயை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். கலவை, அல்வா பதத்திற்கு வந்தபின் இறக்கி ஆறவைக்க வேண்டும். நன்கு ஆறியபின், அதனை உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளலாம். தீபாவளி லேகியம் ரெடி.

பல்வேறு மூலிகைப் பொருட்களை உள்ளடக்கியதுதான் தீபாவளி லேகியம்
தீபாவளி லேகியத்தின் நன்மைகள்...
தீபாவளி மழைக்காலத்தில் வரும். அப்போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைக்கு இந்த லேகியம் நல்ல பலனைத்தரும். தீபாவளியின் போது நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்கள், உணவுகள் செரிமானக் கோளாறுக்கு வழிவகுக்கும். அப்போது இந்த லேகியம், செரிமான பிரச்சனையை எதிர்த்து போராட உதவுகிறது. தீபாவளி மட்டுமின்றி எப்போதும் இந்த மருந்தை வீட்டில் தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. இது கடைகளில் கிடைக்கும் என்றாலும் வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது.
- சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
- வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
தீபாவளி விருந்தாலும், பலகாரங்களாலும் ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் ஏப்பங்கள், வாந்தி, வயிற்று வலி, அசதி போன்றவற்றுக்கு லேகியம் நிவாரணம் கொடுக்கும். கூடவே பனிக்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கும் இது அருமருந்தாகும்.
தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தை சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.
தேவையான பொருள்கள்:
சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சதகுப்பை - 30கிராம்
சிறுநாகப்பூ - 50 கிராம்
வாய்விடங்கம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
லவங்கப்பட்டை - 50 கிராம்
கோரைக் கிழங்கு - 50 கிராம்
கொத்தமல்லி - 30 கிராம்
சித்தரத்தை - 30 கிராம்
ஓமம் - 30 கிராம்
அதிமதுரம் - 20 கிராம்
கிராம்பு - 20 கிராம்
வெல்லம்- 300 கிராம்
தேன் - 100 கிராம்
நெய் - 100 மில்லி

செய்முறை:
* அடுப்பில் பாத்திரம் வைத்து, மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வறுத்து வைத்த ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நன்றாக மிக்சி ஜாரில் போட்டு அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* லேகியத்திற்கு வேண்டிய அளவு வெல்லத்தை எடுத்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகு காய்ச்ச வேண்ம்.
* பாகு கம்பி பதம் வந்தவுடன் அடுப்பில் இருந்து எடுக்காமல் தீயை கொஞ்சம் குறைத்து வைத்து, அரைத்து வைத்திருக்கும் அனைத்து பொடிகளை ஒன்றன் பின் ஒன்றாக சிறிது சிறிதாக கெட்டி ஆகாமல் சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
* பின்னர் வாணலியை இறக்கி வைத்து நெய் விட்டு நன்றாகக் கிளறி சிறிது ஆறிய பின் சிறிது சிறிதாக தேன் விட்டுக் கிளறி வேறு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஆறிய பின்னர் வயதுக்கு ஏற்றவாறு 3 - 12 வயது வரை 5 கிராம் காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு எடுத்து சாப்பிடலாம். 13 வயதுக்கு மேற்பட்டோர் 10 கிராம் அளவு எடுத்து காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.
-சித்த மருத்துவர் காமராஜ்..






