என் மலர்tooltip icon

    சமையல்

    X

    அமுதமாய் இனிக்கும் அற்புத பால் பாயாசம்! ஒரு கிரீமி விருந்து!

    • சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
    • பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.

    நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.


    கிரீமி பால் பாயாசம் செய்முறை

    * அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.

    * பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.

    * பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.

    * பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

    * பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.

    * இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

    * இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.

    * கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.

    * சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)

    * பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

    இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!


    பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்

    பால் பாயாசத்தின் நன்மைகள்

    * இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

    * பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.

    * இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

    * இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.

    இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!

    Next Story
    ×