search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aavin"

    • அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
    • தகவல் வேகமாக பரவியதை அடுத்து ஆவின் விளக்கம்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. யாரும் எதிர்பாராத வகையில், பெய்த அதீத கனமழை காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது.

    வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழல்தான் நிலவுகிறது. வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் காரணமாக போக்குவரத்து முடங்கியதால், சென்னையில் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டுள்ளதாக கூறும் தகவல்கள் வெளியாகின. பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதியுற்ற நிலையில், பால் கீழே கொட்டப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து ஆவின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆவின் நிறுவனம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 15 லட்சம் லிட்டர் பால் சில்லறை விற்பனையாளர்கள். பால் டெப்போக்கள் மற்றும் மொத்த விற்பனையார்கள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் 04.12.2023 தேதியன்று மிக்ஜாம் புயல் காரணமாக அதிக அளவில் மழை பொழிந்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மின்சாரம் தடைப்பட்டது."

    "எனவே தாம்பரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பல பால் விற்பனை நிலையங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. எனவே சில இடங்களில் 04.12.2023 தேதியன்று பொது மக்களுக்கு பால் விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது."

    "இதனால் 04.12.2023 அன்று விற்பனை செய்ய இயலாத ஆவின் பால் பாக்கெட்டுகள் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை சில சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் வியாபாரிகள் அங்கே கொட்டிவிட்டு சென்றதாக தெரியவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • ஒவ்வொரு கோவில்களிலும் கிடைக்கும் பக்தர்களின் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
    • திருடு போன சிலைகளை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரையில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தற்போது ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைத்துள்ளனர். இதனால் ரூ.8 முதல் ரூ.10 வரை மக்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் கொள்ளையடிக்கிறது.

    பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்யும்போது ஏதேனும் குறைகள் இருந்தால் பாலை நிராகரித்து வருகின்றனர். ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் பொய்யை பரப்பி வருகிறார். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவினில் 1 சதவீதம் கொழுப்பு குறைத்தால் ரூ.8 வரை லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது 1.3 சதவீதம் வரை கொழுப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தை கொள்ளையடிக்கின்றனர்.

    இந்தியா முழுவதும் அமுல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் 65 சதவீத லாபம் பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதாக கூறி வருகிறது. அதற்கு முதலமைச்சரின் பங்களிப்பு என்ன? என்று தெரியவில்லை.

    ஒவ்வொரு கோவில்களிலும் கிடைக்கும் பக்தர்களின் பணத்தை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி இல்லாமல் கும்பாபிஷேகம் கோவில் வருமானத்தை வைத்து நடந்து வருகிறது. இதற்கு தி.மு.க. அரசு எந்த பங்களிப்பும் செய்யவில்லை. திருடு போன சிலைகளை மீட்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜனதா கட்சியில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா கட்சியிலும் தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நம் நாட்டில் கிரிக்கெட்டை விளையாட்டாக கருத வேண்டும். நம் மக்களுக்கு வெற்றியையும், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை. ஆஸ்திரேலியா கோப்பையை வென்றும் அந்த நாட்டு மக்கள் எந்த ஆரவாரமும் செய்யவில்லை. எனவே விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
    • திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    குறைந்து வரும் பால் கொள்முதல், ஊழல், முறைகேடு என பல புகார்களில் சிக்கித் தவிக்கும் ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை போக்க, 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள ஊதா நிற பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

    ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பது போல குறைத்துவிட்டு, பால்பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருக்கும் தி.மு.க. அரசு, பொதுமக்களின் நீண்டகால பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை திடீரென நிறுத்துவதன் மூலம் அதனை பருகிவந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வழிவகை செய்யும்.

    எனவே, நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிர்வாகத்தின் வருவாயை பெருக்க மாற்று ஏற்பாடுகளை செய்வதோடு, பொது மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா ஆகிய நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.
    • சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட குறைவாகவே ஆவின் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    ஆவின் நிறுவனம் மூன்றடுக்கு நிருவாக அமைப்பு முறையை கொண்டு விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலை நியாயமான மற்றும் நிலையான விலை கொடுத்து வாங்குவதையும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால்

    பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதையும் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனத்தில் 4 வகையான பால் விற்பனையில் உள்ளது.

    1. இந்திய நாட்டின் பசு மாடுகளின் பாலில் சராசரியாக 3.3% முதல் 4.3% கொழுப்பு சத்தும் 8.0% முதல் 8.5% இதர சத்துக்கள் அடங்கியிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு தரமான பசும்பாலின் தரத்தில் வழங்கும் நோக்கத்தோடு 3.5% கொழுப்பு மற்றும் 8.5%

    இதர சத்துக்கள் அடங்கிய பாலுடன் வைட்டமின் ஏ மற்றும் டி தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு செறிவூட்டி ஊதா நிற பாக்கெட்டுகளில் ஆவின் டிலைட் என்ற பெயரில் லிட்டர் ஒன்றை 44 ரூபாய்க்கு வழங்கி வருகிறோம். சந்தை மதிப்பை

    ஒப்பிட்டால் பல நிறுவனங்கள் இப்பாலை விற்கும் விலையை விட இது மிக மிக குறைந்த விலையாகும். இந்த பால் பசும்பாலின் முழுமையான தரத்தில் வழங்கப்படுவதால் கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட சராசரி மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. எனவே இந்த வகை பாலை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    2. சில வாடிக்கையாளர்கள், குறிப்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெற்றவர்கள், தீவிர உடற்பயிற்சி செய்கின்றவர்கள் கொழுப்பு சத்து குறைந்த பாலை விரும்புவார்கள். அதற்காக கொழுப்புச்சத்து குறைக்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்று 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இது ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 16 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

    3. வளரும் குழந்தைகள், குறிப்பாக கொழுப்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அதிக கொழுப்பு உள்ள பாலை விரும்பினால் அவர்களுக்காக நிறை கொழுப்பு பால் 6% கொழுப்பு மற்றும் 9.0 % இதர சத்துக்கள் அடங்கிய பால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் லிட்டர் ஒன்று 60 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒப்பீட்டளவில் சந்தையில் உள்ள மற்ற பால் நிறுவனங்களின் விலையை விட 14 ரூபாய்க்கும் குறைவாக ஆவின் விற்பனை செய்கிறது.

     

    4. ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது. இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும். அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட

    திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை எனவேதான் Aavin for Healthy TN என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல், அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.

    இந்த நடவடிக்கைகள் எதுவும் இலாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை, இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.

    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.

    சென்னை:

    ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தால் செறிவூட்டப்பட்ட கொழுப்பு சத்து நிறைந்த பால் வகைகளை மாற்றி வேறு பெயரில் வினியோகம் செய்து வருகிறது.

    ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை ஒரு சதவீத கொழுப்பு சத்தை நீக்கி 3.5 சதவீதமாக ஆவின் டிலைட் (ஊதா நிறம்) என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

    இதே போல ஆரஞ்சு பால் பாக்கெட்டில் 6 சதவீதமாக இருந்த கொழுப்பு சத்தை 5 சதவீதமாக குறைத்து மஞ்சள் நிற பாக்கெட்டில் ஆவின் கோல்டு என வினியோகிக்கப்படுகிறது.

    தற்போது வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டினார்.

    பால் பாக்கெட் விலையை உயர்த்துவதற்கு பதிலாக மறைமுகமாக அதன் கொழுப்பு சத்து அளவை குறைத்து நஷ்டத்தை ஈடு செய்வதாக அவர் கூறினார். சென்னையில் பச்சை பாக்கெட் 50 சதவீதம் குறைக்கப்பட்டு ஊதா நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாகவும் அடுத்த மாதம் முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பச்சை பாக்கெட்டிற்கு பதிலாக ஊதா வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதாக பால் முகவர்கள் கண்டுபிடித்தனர்.
    • அரை லிட்டர் பாக்கெட்டில் 130 கிராம் எடை குறைவுடன் இருந்தது.

    சென்னை:

    சென்னையில் ஒரு சில பகுதிகளில் வினியோகம் செய்யப்பட்ட ஆவின் 'டிலைட்' ஊதா நிற பாக்கெட்டுகளில் 100 கிராம் எடை குறைவாக இருந்து உள்ளது. 520 கிராம் இருக்க வேண்டிய பால் பாக்கெட்டின் எடை 415 கிராம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை பகுதியில் வினியோகம் செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதாக பால் முகவர்கள் கண்டுபிடித்தனர்.

    அரை லிட்டர் பாக்கெட்டில் 130 கிராம் எடை குறைவுடன் இருந்தது. பால் அளவை குறைப்பதற்கான காரணம் என்ன? எந்த ஒரு பொருளையும் அதில் குறிப்பிட்ட அளவில்தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் ஆவின் பால் பாக்கெட்டில் எதற்காக பால் அளவை குறைக்கிறார்கள். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதனை விற்பனை செய்யும் மளிகைக்கடை, பெட்டிக்கடைகளில் தகராறு செய்கின்றனர். ஆவின் விற்பனை மையங்களிலும் எடை குறைந்த பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, கோவை, வேலூர் மாவட்டங்களில் எடை அளவு குறைவான ஆவின் பால், தயிர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று ஊதா நிற பால் பாக்கெட்டுகளில் பால் அளவு குறைக்கப்பட்டு வினியோகம் செய்து உள்ளதாக புகார் வந்துள்ளது. எடை அளவை குறைத்து மோசடி செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    • ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.
    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக ஆவின் நிர்வாகம் குறைத்து வந்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் 4.5சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி 50 சதவீதம் குறைத்து விநியோகம் செய்த நிலையில், மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தையும் நாளை (அக்டோபர்-3) முதல் 50சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஏனெனில் ஆவின் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சமன்படுத்தப்பட்ட பால் என்றால் 3.0 சதவீதம் கொழுப்பு சத்தும், 8.5 சதவீதம் திடசத்தும் இருக்க வேண்டும் என்கிற நிலையில் ஊதா நிற பாக்கெட்டில் "செறிவூட்டப்பட்ட பசும்பால்" என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை "டிலைட் பால்" என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் சமன்படுத்தப்பட்ட பால் விற்பனையில் இருக்கும் போது தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் "சமன்படுத்தப்பட்ட பால்" என போட்டிருப்பதன் மூலம் ஆவின் நிர்வாகம் இரட்டை வேடம் போட்டு, மக்களை ஏமாற்றும் செயலில், முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்கிறது.

    ஏற்கனவே 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம் என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம் தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50 சதவீதம் குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக 1 சதவீதம் கொழுப்பு சத்து குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனை செய்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்திட திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.

    தற்போது நடைமுறையில் உள்ள பால் பாக்கெட்டுகளின் கொழுப்பு சத்து அளவையும், பால் பாக்கெட்டில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு முதல் ரூ.8 வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை செய்வதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் கடும் பாதிப்பு ஏற்படும்.
    • பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பால் பொருட்கள் விலையை உயர்த்துவது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஆவின் நெய் விலை அனைத்து அளவுகளிலும் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    அதுபோல அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பால் பொருட்கள் விலையை உயர்த்துவது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாம் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    • ஆவின் நிறுவனம் தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறது.

    சென்னை:

    ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஐந்து லட்சம் பேர் ஆவின் அட்டைதாரர்கள் ஆக இதில் பங்கெடுத்துள்ளனர்.

    ஆவின் நிறுவனத்தினால் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், நூடுல்ஸ், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ், யோகர்ட் டிரிங்ஸ் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆவினில் நெய் மற்றும் வெண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    15 மில்லி நெய்யின் விலை 14 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் ,100 மில்லி நெய்யின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    200 மில்லி நெய் பாட்டில் 145 ரூபாயில் இருந்து 160 ரூபாயாகவும் 500 மில்லி நெய் பாட்டில் 315 ரூபாயில் இருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் நெய்யின் விலை 630 ரூபாயில் இருந்து 700 ரூபாயாகவும், 15 கிலோ டின் நெய்யின் விலை 10,725 ரூபாயில் இருந்து 11880 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் வெண்ணெயின் விலையானது 100 கிராம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், 500 கிராம் 260 ரூபாயில் இருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பு
    • பிங்க் கலர் பாக்கெட்டை மஞ்சள் நிறமான மாற்றவும் திட்டம்

    5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ. 2 வீதம் 10 ரூபாய் உயர்ந்து தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 10 ரூபாய் அதிகரித்துள்ளது.

    சில தினங்களுக்கு முன் தயிர் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்து. மேலும், 120 கிராம் தயிர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அது 100 கிராமாக குறைக்கப்பட்டதாக தெரிகிறது.

    மேலும், பிங்க் கலரில் பாக்கெட்டில் 1/2 லிட்டர் ''டயட்'' பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பாக்கெட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்றவும் ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக கிடைப்பதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது.
    • சென்னையில் உள்ள ஆவின் ஏஜென்சிகள் பார்லர்களில் இந்த விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக கிடைப்பதால் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகிறது.

    கடந்த ஆண்டு பால் பொருட்களின் விலையை உயர்த்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வருவாய் இழப்பு கூடி வருகிறது. இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆவின் பன்னீர், பாதாம் விலை இன்று முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு கிலோ பன்னீர் ரூ.450-ல் இருந்து ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. அரை கிலோ பன்னீர் ரூ.300 ஆகவும் (ரூ.50 அதிகரிப்பு) 200 கிராம் பன்னீர் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் கூடியுள்ளது. இதேபோல பாதாம் மிக்ஸ் 200 கிராம் பாட்டில் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் உள்ள ஆவின் ஏஜென்சிகள் பார்லர்களில் இந்த விலை உயர்வு இன்றே நடைமுறைக்கு வந்தது.

    2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களின் 30 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
    மதுரை:

    மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பால் வினியோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் ஆவின் மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

    இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களின் 30 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர் தலைமையிலான விசாரணை கமிட்டியிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விசாரணை மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெறுகிறது. விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் பட்சத்தில் பணி நியமன முறைகேட்டில் தொடர்புடைய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. எனவே புதிதாக ஆவினில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
    ×