என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறுக்கு"

    • எத்தனை இனிப்பு வகைகள் இருந்தாலும் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும்!
    • நல்ல எண்ணெயில் சுட்டால் முறுக்கை 2 மாதத்திற்குக் கூட வைத்து சாப்பிடலாம்.

    தீபாவளி நெருங்கிவிட்டது. அனைவரது வீட்டிலும் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் சுடும் வாசம் வீசத்தொடங்கியிருக்கும். நாம் எத்தனை இனிப்பு வகைகள் சாப்பிட்டிருந்தாலும், அத்துடன் கடித்துக்கொள்ள முறுக்கு வேண்டும் என நாவின் சவை அரும்புகள் கேட்கும். அப்படிப்பட்ட முறுக்கில் பலவகைகள் உள்ளன. வெவ்வேறு பொருட்களை பயன்படுத்தி முறுக்கு சுடலாம். அந்தவகையில் பாசிப்பருப்பு முறுக்கு எப்படி சுடலாம் என பார்ப்போம்.


    செய்முறை

    பாசிப்பருப்பு முறுக்கு சுடுவதற்கு அரை கப் வெள்ளை உளுந்து, கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும். பின்னர் இவை இரண்டையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்ததும், சிறிதுநேரம் ஆறவிடவேண்டும். பின்னர் தண்ணீர் இல்லாமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கூடவே 4 கப் அரிசிமாவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அரைத்த பாசிப்பருப்பு கலவை, கருப்பு எள் அல்லது வெள்ளை எள், கொஞ்சமாக உப்பு மற்றும் மிதமான சூட்டில் 2 கரண்டி எண்ணெய் சேர்க்கவேண்டும். எந்த எண்ணெய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படி எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெருங்காயத்தூளையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

    அனைத்தையும் ஒன்றாக கலந்து பிசைந்துக்கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்றிவிடக்கூடாது. மாவு கெட்டியாக இல்லாமல் நல்ல மென்மையான பதத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் முறுக்கு நன்றாக வரும். மொறுமொறுவெனவும் இருக்கும். அந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முறுக்கு உரலில் நிரப்பவேண்டும். பின்னர் வாழை இலை அல்லது தட்டு எடுத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய்தடவி அதன்மீது உங்களுக்கு என்ன வடிவத்தில் வேண்டுமோ அதற்கேற்றவாறு பிழிந்து கொள்ளலாம். அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். வெள்ளை நிறத்திலேயே வேண்டும் என்றால் கொஞ்ச நேரத்திலேயே எடுத்துவிடவேண்டும். நன்கு சிவப்பான நிறத்தில் வேண்டும் என்றால் கொஞ்சநேரம் எண்ணெயில் விட்டு எடுக்கவேண்டும். முறுக்கு நன்கு ஆறியபின் காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும். 

    • தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான்.
    • கடைகளில் பலகாரம் வாங்குவதைவிட வீட்டில் செய்வதுதான் ஸ்பெஷல்!

    "தீபாவளி வந்துடுச்சி.. ட்ரெஸ் வாங்கியாச்சா? பலகாரம் எல்லாம் சுட்டாச்சா"? என்ற கேள்விகளிலேயே பாதி தீபாவளி பிறந்துவிட்டது. ட்ரெஸ் வாங்குகிறோமோ இல்லையோ, பலகாரம் இல்லாமல் தீபாவளி ஓடாது. காரணம் எல்லாரும் சாப்பிடுவாங்க. பிள்ளைங்க, யாரையும் வேடிக்கை பார்த்து ஏங்கக்கூடாது என, இருக்கும் பொருட்களில் எதையாவது செய்வாள் அம்மா. அந்த வகையில் தீபாவளி என்றாலே நமக்கு பெரும்பாலும் நினைவுக்கு வருவது முறுக்கும், அதிரசமும்தான். தீபாவளிக்கு அம்மா சுடும் முறுக்கையும், அதிரசத்தையும் ஒரு மாதத்திற்கு மேலும் வைத்து சாப்பிடுவோம். முறுக்கு சற்று நமத்தாலும், அதிரசம் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட அதிரசத்தை சுவையாக, எளிதாக செய்வது எப்படி? என பார்ப்போம். 


    அதிரசம் செய்முறை

    1 கிலோ பச்சரிசியை கழுவி, அரிசியில் இருக்கும் ஈரம் போகும்வரை காயவைக்க வேண்டும். பின்னர் அதனை லேசாக கொரகொர பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அரைக்கும்போது வாசனை கொடுக்கும் அளவிற்கு ஏலக்காயை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கிலோ அரிசிக்கு ஏற்ப, சுவைக்கு தகுந்தவாறு 600 அல்லது 750 கிராம் வெல்லம் எடுத்துக்கொள்ளலாம். அந்த வெல்லத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதம் பற்றி கவலைப்படாதீர்கள். வெல்லம் தண்ணீர் நன்றாக கொதிக்கும்போது, விரல்களில் தொட்டு பார்க்கும்போது, அது நூல்போல வரவேண்டும். அவ்வளவுதான்...

    அந்தப் பதம் வந்த பிறகு, பாகை இறக்கி, அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் ஊற்றி, இரண்டையும் நன்றாக கலந்துவிடவேண்டும். அப்போது கொஞ்சம் சுக்குப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம். மொத்தமாக சேர்த்து பிசைந்த மாவை 2, 3 நாட்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் மாவை எடுத்து பார்த்தால் நன்றாக பதம் பெற்றிருக்கும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து, அதனை வாழை இலையில் வைத்து தட்டி, சூடான கடலை எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி. இதில் வேறு எந்தப் பொருளும் சேர்க்கத் தேவையில்லை.

    • கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
    • சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் இனிப்பு சீடை, முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிகமுக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம். கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு- ஒரு கப்

    வெல்லம் - 100 கிராம்

    எண்ணை - ஒரு கப்

    ஏலக்காய் பொடி- சிறிது

    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

    வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி

    செய்முறை

    உளுத்தம் பருப்பு வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம். ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி  போட்டு அதில் வெல்லத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பிரித்து எடுக்கலாம். இதுதான் கிருஷ்ண சீடை.

    ×