என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானக் கட்டணக் கொள்ளை: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
    X

    விமானக் கட்டணக் கொள்ளை: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    • எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை.
    • அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது.

    பண்டிகைக் காலங்களில் பன்மடங்கு விமான கட்டணங்கள் உயர்த்தப்படுவதன் மூலம் பயணிகள் 'சுரண்டப்படுவதாக' உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிச்சயமாக நீதிமன்றம் தலையிடும் என்றும் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து தனியார் விமான நிறுவனங்களால் விதிக்கப்படும் விமானக் கட்டண ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதர கூடுதல் கட்டணங்களைக் கட்டுப்படுத்த, பிணைப்புடன் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    மத்திய அரசின் சார்பில் பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் கௌஷிக் கால அவகாசம் கோரியதை அடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு (2026) நீதிமன்றம் ஒத்திவைத்தது .

    சிவில் விமான போக்குவரத்து துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கக் கோரி கடந்த மாதம் சமூக ஆர்வலர் எஸ். லட்சுமிநாராயணன் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்,

    "எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, தனியார் விமான நிறுவனங்கள் எகானமி வகுப்பு (Economy class) பயணிகளுக்கான இலவச செக்-இன் லக்கேஜ் அளவை 25 கிலோவிலிருந்து 15 கிலோவாகக் குறைத்துள்ளன என்றும், இதன் மூலம் 'முன்பு டிக்கெட் சேவையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு விஷயத்தை தற்போது புதிய வருவாய் ஈட்டும் வழியாக மாற்றியுள்ளன'. என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், செக்-இன் லக்கேஜ் வசதியைப் பயன்படுத்தாத பயணிகளுக்கு எந்தவிதமான தள்ளுபடி, இழப்பீடு அல்லது சலுகைகள் வழங்கப்படாதது, இம்முறையின் 'தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான தன்மையை' காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.



    தற்போது எந்தவொரு அதிகார அமைப்புக்கும் விமானக் கட்டணங்களையோ அல்லது கூடுதல் கட்டணங்களையோ ஆய்வு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லை. இது மறைமுகக் கட்டணங்கள் மற்றும் கணிக்க முடியாத விலை நிர்ணயம் மூலம் நுகர்வோரை சுரண்ட விமான நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது.

    தன்னிச்சையான கட்டண உயர்வு, ஒருதலைப்பட்சமாக சேவைகளைக் குறைத்தல் மற்றும் தரைமட்டத்தில் குறைகளைத் தீர்க்கும் வசதி இல்லாமை போன்ற ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற இத்தகைய நடைமுறைகள், குடிமக்களின் சமத்துவம், தடையற்ற நடமாட்டம் மற்றும் கண்ணியமான வாழ்வு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

    ஒழுங்குமுறைப் பாதுகாப்புகள் இல்லாததால், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் அல்லது வானிலை மாற்றங்களினால் ஏற்படும் இடையூறுகளின் போது கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்கின்றன. இது ஏழைகளையும் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களையும் பெருமளவில் பாதிக்கிறது. வசதி படைத்த பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிகிறது; ஆனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் பெரும்பாலும் உச்சக்கட்ட விலையேற்றத்தின் போது அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

    விமானக் கட்டணங்களை நிர்ணயிக்கும் கணினி வழிமுறைகள், ரத்து செய்யும் கொள்கைகள், சேவைகளின் தொடர்ச்சி மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகளை முறைப்படுத்துவதில் அரசு காட்டும் மெத்தனம், அரசியலமைப்பு ரீதியிலான கடமையைத் தவறுவதற்கு சமமாகும். இதில் நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு அவசியம்.

    மேலும், அத்தியாவசிய சேவைத் துறையில் தேவையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விலையை உயர்த்த விமான நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அளிப்பது நியாயமற்றது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையில், அவசர காலப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை நியாயமான மற்றும் சுரண்டலற்ற முறையில் பெறுவதும் அடங்கும். விமானப் பயணம் என்பது ஆடம்பரம் என்பதைத் தாண்டி ஒரு தேவையாக மாறும் அவசர காலங்களில், தன்னிச்சையான கட்டண உயர்வுகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள குடிமக்களின் இந்த உரிமையைப் பறிக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    முன்னதாக இது தொடர்பாக மத்திய அரசு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    Next Story
    ×