என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மதுபானங்கள் குவிப்பு
    X

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.600 கோடிக்கு மதுபானங்கள் குவிப்பு

    • டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது.
    • கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

    பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்ப வசதியாக தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளது.

    எனவே 4 நாட்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கி உள்ள நிலையில் மது பிரியர்களும் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் மது விற்பனையை அதிகரிக்க டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிஉள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 4829 மதுக்கடைகளில் 15 நாட்களுக்கு இருப்பு வைக்க வேண்டும். எந்த சரக்கும் இல்லை என்று சொல்லாமல் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபானங்களை கொடுக்க வேண்டும்.

    சாதாரண ரக மது வகைகள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும். பிராந்தி, விஸ்கி, பீர், ரம் ரகங்கள் ரூ.140 குறைந்த விலை சரக்கு அதிகளவில் இருப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    டாஸ்மாக் மதுக்குடோன்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாளிலும் செயல்படுகிறது. எந்தெந்த கடைகளுக்கு மதுபானம் தேவைப்படுகிறதோ அங்கு தட்டுப்பாடு இல்லாமல் சரக்கு அனுப்ப குடோனில் ஊழியர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நாட்களில் ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.130 கோடிக்கு விற்பனையாகும்.

    பண்டிகை நாட்களில் இது ரூ.180 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. அந்த வகையில் இன்று முதல் 21-ந்தேதி வரை மதுபானங்கள் சுமார் ரூ.600 கோடிக்கு விற்பனைக்கு கடைகளில் குவிக்கப்பட்டுள்ளது. எந்த மதுக்கடையிலும் குறிப்பிட்ட ரக மதுபானங்கள் இல்லை என்று சொல்லாத வகையில் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுபான பயன்பாடு இருந்து வருவதால் விற்பனை படுஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில் மதுக்கடைகளில் ரம் மது வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்களின் ரம் வகைகள் சப்ளை இல்லாததால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

    Next Story
    ×