என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உழவர்களின் முதல் எதிரியே திமுக தான்..!- விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு அன்புமணி கண்டனம்
    X

    உழவர்களின் முதல் எதிரியே திமுக தான்..!- விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு அன்புமணி கண்டனம்

    • கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

    உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என்று பாமக தலைவர் அன்புமணி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கறிக்கோழி வளர்ப்புக்கான கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அறவழியில் போராடிய கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10 நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. உரிமைக்காக போராடிய விவசாயிகளை திமுக அரசு சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    கறிக்கோழி வளர்ப்பை பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்காக கறிக்கோழிகளை வளர்த்து தருபவர்கள் உழவர்கள் தான். இதற்காக அவர்களுக்கு கிலோவுக்கு ரூ.6.50 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோவுக்கு ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி கறிக்கோழி விவசாயிகள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை மறுநாள் 21-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுகள் நடத்தப்படவுள்ளன. அதற்கு முன்பாகவே கறிக்கோழி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கவே, கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்களின் தூண்டுதலில் இந்த கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

    உழவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பெரு நிறுவனங்களின் கையாளாக மாறி அவர்களை ஒடுக்கி வருகிறது. மேல்மா பகுதியில் சிப்காட் வளாகத்திற்காக நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய உழவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த திமுக அரசிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய நடவடிக்கைகளால் உழவர்களின் முதல் எதிரியாக திமுக அரசு உருவெடுத்திருக்கிறது.

    கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கோழிப்பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்டோரை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 கூலி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை கோழி வளர்ப்பு பெரு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×