என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் உத்தரவு
    X

    சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் உத்தரவு

    • ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.
    • சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

    தி.மு.க.வின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

    இவர், கடந்த 1996- 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தபோது, தனது வருமானத்துக்கு மீறி அதிக சொத்துகளை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது, அதன்பிறகு அமைந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் துரைமுருகன் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு வேலூர் முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2007ல் அமைச்சர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது.

    மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின்கீழ், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு கோர்ட்டுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

    முன்னதாக, இந்த வழக்கில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து துரைமுருகனின் மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார். இதனை தொடர்ந்து அவரது பிடிவாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

    ஆனால், துரைமுருகன் இன்று ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிரான பிடிவாரண்ட்டை வருகிற 15-ம் தேதி அமல்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×