தாராபுரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
Published on

மூலனூர்:

திண்டுக்கல் மாவட்டம் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 56). இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் இன்று காலை லோடு ஆட்டோவில் திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே பட்டுத்துறை என்ற இடத்தில் உள்ள மலையாள கருப்பண்ணசாமி கோவிலில் வழிபடுவதற்காக சென்றார்.

தாராபுரம் அருகே மூலனூர் அடுத்த துலுக்க வலசு அருகே செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் வாகனத்தின் பின்புறத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிலர் வாகனத்தின் அடியில் சிக்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் தாராபுரம் மற்றும் வெள்ளகோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பழனிசாமி என்பவரின் மனைவி பொட்டியம்மாள் (55) இறந்தார். சத்யா (14), மணிமேகலை (35,) நாகரத்தினம் (36), மாரியம்மாள் (36), செல்வபிரியா(13), ஈஸ்வரி (39), மற்றொரு ஈஸ்வரி (30), லட்சுமி (47), சுப்பிரமணி (60) , பழனியம்மாள் ( 70) உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.12 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையிலும்,7 பேர் வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது என போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் சிலர் சரக்கு வாகனத்தில் பொதுமக்களை அழைத்து செல்கின்றனர். எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com