உடுமலை அமராவதி அணைக்கு படையெடுக்கும் யானைகள்- சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
உடுமலை அமராவதி அணைக்கு படையெடுக்கும் யானைகள்- சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
Published on: 

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன.

இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வன விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.

காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

இதனால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com