என் மலர்
உள்ளூர் செய்திகள்

சந்திரசேகரபுரம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ராசிபுரத்தில் சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.
ராசிபுரத்தில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.
இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.
இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






