என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எஸ்டேட் தொழிலாளி பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பந்தலூர் அருகே யானை மிதித்து எஸ்டேட் தொழிலாளி பலி - பொதுமக்கள் போராட்டம்
- யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
- பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.
கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.
வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.






