search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker death"

    • என்எல்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி என்எல்சி நிறுவனம் 2-வது சுரங்கம் நிலக்கரி வெட்டி எடுக்கும் கன்வெயர் பகுதியில் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் அன்பழகன். இவர் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் அன்பழகன் பணிக்கு சென்று பணியிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

    இது குறித்து என்எல்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த அன்பழகனின் உறவினர்கள் என்.எல்.சி. 2-வது சுரங்கத்துக்கு திரண்டுவந்தனர். அவர்கள் ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் சாவுக்கு நீதிகேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    • அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70). இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது, அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

    அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும் அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் மது பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா நிறத்தில் இருந்து உள்ளது.

    உடனே அண்ணாதுரை மகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கீழே கிடந்த மது பாட்டிலில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது அவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள பேரூரில் பேரூராட்சி சார்பில் வடக்கு ரதவீதியில் ரூ.71 லட்சத்தில் சாக்கடை வாருகால் அமைக்கும் பணி நடக்கிறது.

    கோவை மதுக்கரையை சேர்ந்த சுப்பிமணி என்பவர் ஒப்பந்தமுறையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சாக்கடை வாருகால் அமைக்கும் பணியில் தேனியை சேர்ந்த வேல்முருகன்(வயது49) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

    தற்போது சாலையோரத்தில் சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டு, கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழியை அளவீடு செய்யும் பணி மற்றும் மண்ணை பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடந்தது.

    நேற்று மாலை பேரூர் கோவிலுக்கு வடக்கே ஆற்றுப்பாதைக்கு முன்பு தோண்டப்பட்ட குழியில் இறங்கி வேல்முருகன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் இடத்தை சுற்றி போடப்பட்டிருந்த கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதில் வேல்முருகன் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இந்த சம்பவம் குறித்து வேல்முருகனின் மகன் மயில்சாமி பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அஜாக்கிரதையாக வேலையாட்களை பணியாற்ற வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கட்டிட காண்டிராக்டர் செந்தில்குமார், மேஸ்திரி சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், உப்பு பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கர்நாடக மாநிலம் மைசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை பெறாமல் முனுசாமி இருந்து விட்டார்.

    இந்தநிலையில் வெள்ளகோவிலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர், உங்களை ஏதேனும் நாய் கடித்து உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திருச்சியில் உள்ள நாய் கடி சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முனுசாமி நாய் கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் கதிரவன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவை சேர்ந்தவர் செந்தமிழ் (50). இவர் பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஹாலோ பிளாக் கல்லால் கட்டப்பட்டு சிமெண்ட் அட்டை போடப்பட்ட தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்து வரும் மழையின் காரமணாக இந்த ஹாலோ பிளாக்கால் கட்டப்பட்ட சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தது. நேற்று இரவும் மழை பெய்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் செந்தமிழ் வீடு மழையால் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த செந்தமிழ் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து கட்டிட இடிபாடுகளை அகற்ற தொடங்கினர். மேலும் இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் செந்தமிழ் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் பாலாஜி(19). இவர் ஈரோட்டில் உள்ள மோட்டார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். சென்னையை சேர்ந்த பாலகுமார் தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியங்குடி பகுதியில் தென்னந்தோப்பு வைத்துள்ளார்.

    அந்த தோப்பிற்கு மோட்டார் பொருத்தும் பணிக்காக பாலாஜி மற்றும் பரமேஸ்வரன்(42) , பிரவீன்குமார்(20) ஆகிய 3 பேரும் வந்தனர். கடந்த சில நாட்களாக மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று பணி முடிந்த பின்னர் 3 பேரும் சாப்பிட சென்றனர். பின்னர் பரமேஸ்வரன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர் திரும்பினர். ஆனால் பாலாஜி திடீரென மாயமானார்.

    இதனால் தோட்டத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் மீன் வளர்க்கும் தொட்டியில் பாலாஜி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விக்கி (வயது 35). தச்சு வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ரூபிணிதேவி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் விக்கி தனது வீட்டின் அருகே உள்ள நண்பர்களுடன் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பெரியாறு கால்வாயில் குளிக்க சென்றார். வைகை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனை உணராமல் விக்கி மற்றும் நண்பர்கள் கால்வாயில் குளித்தனர். கால்வாயில் நடுப்பகுதிக்கு சென்ற விக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வர வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த சிலர் கால்வாயில் நீந்தி விக்கியை தேடி பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசாருக்கும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அபி கோவிந்தராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் காதர் பாட்சா தலைமையிலான தீயணைப்பு மற்றும் கமாண்டோ படை வீரர்கள் சம்பவ இடம் வந்து விக்கியை தேடினர். ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலை வீரர்கள் தேடும் பணியை தொடங்கினர். அப்போது கள்ளந்திரி கால்வாயில் இருந்து சில மீட்டர் தொலைவில் புதருக்கு இடையே விக்கி உடல் சிக்கி இருந்தது தெரியவந்தது. வீரர்கள் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரியாரம் அருகே உள்ள பெரிங்கோம் பகுதியில் கல் கிரஷர் தொழிற்சாலை உள்ளது.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து எந்திரத்தில் சிக்கி பலியானவரை மீட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பரியாரம் அருகே உள்ள பெரிங்கோம் பகுதியில் கல் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த பலரும் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று பணி நடைபெற்றபோது, தொழிலாளி ஒருவர் கிரஷர் எந்திரத்தில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் எந்திரத்தை நிறுத்தினர்.

    பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து எந்திரத்தில் சிக்கி நசுங்கி பலியானவரை மீட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவரது பெயர் ஜூகல்டெஹரி (வயது 57), ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

    • மாதையன் பால் சீலிங் வேலை செய்து வந்தார்.
    • எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எம்.பெருமாபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மாதையன் (வயது 42). பால் சீலிங் வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 26-ந்தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார்.
    • மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி கிராமத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடுகளுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மூர்த்தி இறப்பதற்கு 3 நாட்கள் முன்பு இருந்தே தனக்கு அடிக்கடி தலை சுற்றல் வருவதாக கூறி மருத்துவமனைக்கு சென்று, மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் மூர்த்தி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்பு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி சாவு குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 7 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகனிடம் கேட்ட போது, இந்த சம்பவம் தொடர்பாக நன்கு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உடல் கூறு ஆய்வில் மூர்த்தியின் உடலில் ஏற்பட்ட காயங்கள் குச்சி குத்தி ஏற்பட்டது தான் என் உறுதியாக தெரியவந்த பின்பு தான் நாங்கள் இயற்கை மரணம் என முடிவு செய்தோம்.

    சமூக வலைத்தளத்தில் இவ்வாறு அவதூறு பரப்புவது தவறு. மேலும் தேவைப்பட்டால் மூர்த்தியின் உடலை மறுஆய்வு செய்ய தயாராக உள்ளோம் எனவும், இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

    மூர்த்தியின் மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலால் ஏற்காட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை சுட்டு கொன்றதாக கூறப்படும் 7 நபர்கள் யார்? என்றும் கேள்வி எழுதுள்ளது. எனவே இந்த விசயத்தில் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி உண்மை விவரங்களை தெளிவுபடுத்தவேண்டும் என்று ஏற்காடு பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது.
    • சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஊராட்சி கல்லப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சேகர் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    சேகர் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் கொண்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சேகர் சரியாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் எடப்பாடி அடுத்த கள்ளுக்கடை அருகே அரசு மதுபான கடையும், அதன் அருகில் மதுபான பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மதுபான பாரில் சேகர் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சேகர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சேகரின் உறவினர்கள் அங்கு திரண்டனர். உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார்.

    இந்த நிலையில் சேகர் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மேலும் ஒரு நபர் நீண்ட நேரமாக மதுபோதையில் சுயநினைவு இன்றி கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தி விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறுகையில், நானும், சேகரும் பாரில் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கவில்லை. அவர் யார்? என எனக்கு தெரியாது. வழக்கம்போல் நான் இங்கு மது குடிக்க வருவேன். அதுபோல் நேற்று இங்கு வந்து மது குடித்தேன். போதை தலைக்கேறியதால் நடக்க முடியாமல் பார் அருகில் படுத்துவிட்டேன், என்றார்.

    பின்னர் அந்த நபர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி போலீசார், சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, சேகரின் மனைவி நித்யா, தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேகர், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் மது குடிக்கக்கூடாது என டாக்டர்கள் அவரிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் சேகர் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவு அறிக்கை வந்த பிறகு தான் அவர் எப்படி இறந்தார் என முழு விபரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    சேகர் சொந்த ஊரான கல்லப்பாளையம் காலனி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அங்கு பதற்றமும், பரபரப்பும் நிலவி வருவதால் சேகரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனிடையே அவரது உறவினர்கள், சேகரின் சாவில் சந்தேகம் இருப்பதால், மது வாங்கி குடித்த அரசு டாஸ்மாக் கடையில் உள்ள மது வகைகளை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பாரில் உள்ள உணவு பொருட்களையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது.
    • தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு என எதிர்புறத்தில் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் உள்ள அனுராக் சிங் (வயது28), தன்ஜெய் சிங் (33), தரம்வீர் (40), வீரேந்திரஜா (37), மகாதேவ் சிங் (23) ஆகிய 5 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் தொழிற்சாலையின் எதிர்புறம் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 11-ந் தேதி இரவு அறையில் 5 தொழிலாளர்களும் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது. சற்று நேரத்தில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. இதில் இவர்கள் 5 பேரும் தீயில் சிக்கி கொண்டு அலறினர்.

    இவர்களது சத்தம் கேட்டு அருகே வசிக்கும் தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அறைக்குள் 5 பேரும் தீயில் உடல் கருகி சத்தம் போட்டபடி நின்றனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களில் 4 பேர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அனுராக் சிங் மற்றும் துப்ராவை சேர்ந்த தன்ஜெய்சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

    மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×