என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பண்ணாரி அருகே இரவில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
- யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
- சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.