search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Tiger Commission"

    • சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புலிகள் திடீரென பலியாகின. அவை எப்படி இறந்தன என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி ரமேஷ், இந்திய வனவிலங்கு நிறுவன மண்டல துணை இயக்குநர் கிபாசங்கர், சென்னை வனவிலங்கு ஆய்வர் டோக்கி ஆதில் லையா அடங்கிய குழுவினர், கடந்த மாதம் 25-ந்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக களஆய்வு நடத்தினர். பின்னர் இதுதொடர்பான இறுதிகட்ட அறிக்கை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை வனஉயிரின காப்பாளர் சீனிவாராவ்ரெட்டி தற்போது அந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2006-ம்ஆண்டு 56 புலிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இங்கு தற்போது 114 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் அடர்ந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் விலங்குகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 5 குட்டிகள் வரை ஈனும்.

    இதில் 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பலியாக வாய்ப்பு உள்ளது. மேலும் இளைய வயது பிரசவம் காரணமாகவும் பிறந்த குட்டிகள் பலி யாகக்கூடும். சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகள் 2 மாதங்களே ஆனவை. அவைகளுக்கு உணவு தேடி தாய்ப்புலி வெகுதூரம் சென்றிருக்கலாம். இதனால் தான் அந்த புலிகள் பலியாக நேர்ந்து உள்ளது.

    மாமிச உண்ணிகளுக்கு இடையே உட்பூசல் என்பது ஒரு பொதுவான நிகழ்வு. இதன்காரணமாகவே நடுவட்டம், கார்குடி ஆகிய பகுதிகளில் புலிகள் பலியாகி உள்ளன. ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    சின்னக்குன்னூர், சீகூர் ஆகிய வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் முறையே 40, 16 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய 15-ல் 4 பெண் புலிகள். சீகூர் பகுதியில் தென்பட்ட 5-ல் 4 பெண் புலிகள் ஆகும். சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகளை ஈன்ற தாய்ப்புலி இரைதேடி அடர்ந்த காட்டுக்குள் வெகு தூரம் வரை சென்று இருக்கக்கூடும். அதனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொட ர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×