search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tigers"

    • சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
    • ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 புலிகள் திடீரென பலியாகின. அவை எப்படி இறந்தன என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி ரமேஷ், இந்திய வனவிலங்கு நிறுவன மண்டல துணை இயக்குநர் கிபாசங்கர், சென்னை வனவிலங்கு ஆய்வர் டோக்கி ஆதில் லையா அடங்கிய குழுவினர், கடந்த மாதம் 25-ந்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் புலிகள் இறந்து கிடந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடியாக களஆய்வு நடத்தினர். பின்னர் இதுதொடர்பான இறுதிகட்ட அறிக்கை, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தலைமை வனஉயிரின காப்பாளர் சீனிவாராவ்ரெட்டி தற்போது அந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 2006-ம்ஆண்டு 56 புலிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இங்கு தற்போது 114 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் அடர்ந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் விலங்குகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

    பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 5 குட்டிகள் வரை ஈனும்.

    இதில் 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பலியாக வாய்ப்பு உள்ளது. மேலும் இளைய வயது பிரசவம் காரணமாகவும் பிறந்த குட்டிகள் பலி யாகக்கூடும். சீகூர் வனப்பகுதியில் 2 குட்டிகள் உடல்நலக்குறைவால் இறந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகள் 2 மாதங்களே ஆனவை. அவைகளுக்கு உணவு தேடி தாய்ப்புலி வெகுதூரம் சென்றிருக்கலாம். இதனால் தான் அந்த புலிகள் பலியாக நேர்ந்து உள்ளது.

    மாமிச உண்ணிகளுக்கு இடையே உட்பூசல் என்பது ஒரு பொதுவான நிகழ்வு. இதன்காரணமாகவே நடுவட்டம், கார்குடி ஆகிய பகுதிகளில் புலிகள் பலியாகி உள்ளன. ஊட்டி எமரால்டு பகுதியில் 2 புலிகளை விஷம் வைத்து கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து உள்ளனர்.

    சின்னக்குன்னூர், சீகூர் ஆகிய வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் முறையே 40, 16 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி புலிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சின்னக்குன்னூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் சிக்கிய 15-ல் 4 பெண் புலிகள். சீகூர் பகுதியில் தென்பட்ட 5-ல் 4 பெண் புலிகள் ஆகும். சின்னக்குன்னூர் பகுதியில் இறந்த 4 குட்டிகளை ஈன்ற தாய்ப்புலி இரைதேடி அடர்ந்த காட்டுக்குள் வெகு தூரம் வரை சென்று இருக்கக்கூடும். அதனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொட ர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆண்டிமடம் பகுதியில் புலிகள் சுற்றி திரிந்தனர்
    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்து, பெரிய ஆத்துகுறிச்சி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே விஸ்வநாதன் மகன் பாலகிருஷ்ணன் என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது விநோத சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் இரண்டு புலிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நடுங்கிய அவர் அந்த இடத்தில் இருந்து தனது மாடுகளை வேக வேகமாக ஒட்டிக் கொண்டு வெளியில் வந்து விட்டார்.

    புலிகள் இரண்டும் அருகில் உள்ள கரும்பு வயல் வெளியில் சென்றுள்ளதையும் அவர் கண்டுள்ளார். இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களிடம் அவர் தெரிவித்ததை தொடர்ந்து, அந்த பகுதி ஊர் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் புலி நடமாடுவது குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும் போலீஸ் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினரும், போலீசாரும் கால் தடத்தை வைத்து ஆய்வு மேற்கொண்டு, புலி எந்த பக்கம் போய் இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். புலிகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கை நடைபெற்று கொண்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி நுழைவாயிலில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் , தேசிய விலங்கான புலிகளின் முக்கியத்துவத்தை கூறி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு அமலாக்க பிரிவு ‌காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் , மக்களிடம் புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நாள் உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது .காடுகளின் காவலன் புலிகள் எனவும் , காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம். நாம் காடுகளை அழிப்பதன் மூலம் அதிக நகரங்களை உருவாக்குவதன் மூலம் வசிக்க இடம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் புலிகள் இறந்துவிடுகிறது .

    புலிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் குறைவாக உள்ளது . இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. புலிகளின் கண்கள் இரவில் மனிதர்களை விட ஆறு மடங்கு தெளிவாக தெரியும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , பாலசுப்பிரமணியம் , சுந்தரம் , பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புலி போன்று வேடமிட்டும் , பதாகைகளை ஏந்திக்கொண்டும் , புலிகளின் முககவசங்களை அணிந்தும், கைக்கட்டை விரல்களில் புலியின் நிறத்தை வரைந்தும் உலக புலிகள் தின விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 1988-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பகத்தில் அரிய வகை விலங்கினங்களும், மூலிகை செடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் 448 அரியவகை தன்னக தாவர தன்மை கொண்ட தாவரங்களும், 103 தன்னக தன்மை கொண்டு விலங்குகளும் உள்ளது.

    இங்குள்ள வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 2018-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அடர்ந்த வனப்பகுதியில் 7 நாட்கள் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் மற்றும் அடையாளங்களை பதிவு செய்வது போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தினர்.

    கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட எச்சங்கள், கால்தடங்கள் மரபணு சோதனைக்காக டோராடூனில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கணக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இங்கு புலிகளை விட சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் காணப்படும் சிறுத்தைகள் சிறிய பூனை இனத்தை சேர்ந்தவைகள் ஆகும். சிறுத்தைகள் சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும் தன்மை கொண்டவைகள். இவைகள் இலையுதிர் காடுகள் முதல் பசுமைமாறா காடுகள் வரை அனைத்து வகை காடுகளிலும் வசிக்கக் கூடியவை. வேட்டையாடும் தந்திரம் மிக்க சிறுத்தைகள் விலங்குகளை விரட்டி சென்று வேட்டையாடுவதில் திறமை மிக்கவைகளாக திகழ்கின்றன.

    இவைகள் மரங்களில் ஏறும் பலம் கொண்டவை என்பதால் வேட்டையாடிய 20 முதல் 30 கிலோ எடை கொண்ட மான், காட்டு பன்றி போன்ற விலங்குகளை 20 அடி உயரம் கொண்ட மரத்தில் ஏறி அமர்ந்து சாப்பிடும். மற்ற விலங்குகளை விட சுறுசுறுப்பானவை. 20 அடி நீளமும், 10 அடி உயரமும் தாண்டக்கூடியவை. மணிக்கு 58 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை. சிறுத்தைகள் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும். சிறுத்தை குட்டிகள் 2 வயது வரை தாயின் பராமரிப்பில் வாழும். அதன் பின் தனியாக பிரிந்து சென்று விடும்.

    இவைகள் 12 வயது முதல் 17 வயது வரை உயிர் வாழும். 2015-ம் ஆண்டு இந்தியாவில் 2487 சிறுத்தைகள் இருந்தன. அதில் தமிழக வனப்பகுதிகளில் மட்டும் 815 சிறுத்தைகள் காணப்பட்டன. மனிதர்களுடன் ஏற்படும் மோதல் சிறுத்தைகளுக்கு பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன. இதுபோல சட்டவிரோத வர்த்தகத்திற்காக கொல்லப்படுவது, வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாலும் அவைகளுக்கு அழிவை கொடுக்கின்றன. எனவே சிறுத்தைகள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் 1-ம் இடத்தில் வரையறுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர்.



    ×