search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakkad Mundanthurai"

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 1988-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகம் என்ற பெருமையை பெற்ற இந்த காப்பகத்தில் அரிய வகை விலங்கினங்களும், மூலிகை செடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் 448 அரியவகை தன்னக தாவர தன்மை கொண்ட தாவரங்களும், 103 தன்னக தன்மை கொண்டு விலங்குகளும் உள்ளது.

    இங்குள்ள வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு 2018-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அடர்ந்த வனப்பகுதியில் 7 நாட்கள் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் மற்றும் அடையாளங்களை பதிவு செய்வது போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்தினர்.

    கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட எச்சங்கள், கால்தடங்கள் மரபணு சோதனைக்காக டோராடூனில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் கணக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள், 50 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இங்கு புலிகளை விட சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் காணப்படும் சிறுத்தைகள் சிறிய பூனை இனத்தை சேர்ந்தவைகள் ஆகும். சிறுத்தைகள் சூழலுக்கு ஏற்றவாறு வேட்டையாடும் தன்மை கொண்டவைகள். இவைகள் இலையுதிர் காடுகள் முதல் பசுமைமாறா காடுகள் வரை அனைத்து வகை காடுகளிலும் வசிக்கக் கூடியவை. வேட்டையாடும் தந்திரம் மிக்க சிறுத்தைகள் விலங்குகளை விரட்டி சென்று வேட்டையாடுவதில் திறமை மிக்கவைகளாக திகழ்கின்றன.

    இவைகள் மரங்களில் ஏறும் பலம் கொண்டவை என்பதால் வேட்டையாடிய 20 முதல் 30 கிலோ எடை கொண்ட மான், காட்டு பன்றி போன்ற விலங்குகளை 20 அடி உயரம் கொண்ட மரத்தில் ஏறி அமர்ந்து சாப்பிடும். மற்ற விலங்குகளை விட சுறுசுறுப்பானவை. 20 அடி நீளமும், 10 அடி உயரமும் தாண்டக்கூடியவை. மணிக்கு 58 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை. சிறுத்தைகள் 2 அல்லது 3 குட்டிகளை ஈனும். சிறுத்தை குட்டிகள் 2 வயது வரை தாயின் பராமரிப்பில் வாழும். அதன் பின் தனியாக பிரிந்து சென்று விடும்.

    இவைகள் 12 வயது முதல் 17 வயது வரை உயிர் வாழும். 2015-ம் ஆண்டு இந்தியாவில் 2487 சிறுத்தைகள் இருந்தன. அதில் தமிழக வனப்பகுதிகளில் மட்டும் 815 சிறுத்தைகள் காணப்பட்டன. மனிதர்களுடன் ஏற்படும் மோதல் சிறுத்தைகளுக்கு பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன. இதுபோல சட்டவிரோத வர்த்தகத்திற்காக கொல்லப்படுவது, வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாலும் அவைகளுக்கு அழிவை கொடுக்கின்றன. எனவே சிறுத்தைகள் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் 1-ம் இடத்தில் வரையறுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இத்தகவல்களை களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளனர்.



    ×