search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wildlife"

    • தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
    • விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.

    இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.

    மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.
    • வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    கோடை காலத்தில் வனப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்குவதால் ஆறுகள் வறண்டு போகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தாகத்தோடு தண்ணீரை தேடி மலை அடிவாரப்பகுதியை நோக்கி வந்து விடுகிறது.

    கடந்த சில வாரமாக வனப்பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மரங்கள், செடிகள், புற்கள் உள்ளிட்டவை காய்ந்து விட்டது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. அவை மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுத்த வந்த வண்ணம் உள்ளன.

    எனவே வன விலங்குகளின் தாகம் தீர்க்க ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் உடுமலை வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை குடித்துவிட்டு சென்று விடுகிறது.

    அத்துடன் உடுமலை- மூணாறு சாலையை வனவிலங்குகள கடந்து அணைப்பகுதிக்கு செல்வதும் சற்று குறைந்து உள்ளது. வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால் தாகத்தை தீர்ப்பதற்காக விளை நிலங்களை தேடி செல்ல வேண்டிய நிலையும் வனவிலங்களுக்கு குறைந்துள்ளது. வனவிலங்குகள் சாலையை கடக்கும் சூழல் ஏற்பட்டால் வாகனங்களை பொறுமை காத்து இயக்குமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நடந்த செல்லக்கூடிய அலிப்பிரி நடைபாதையில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டிபாளையத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது 3 வயது மகள் லக்ஷிதாவுடன் சென்றனர்.

    இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் பெற்றோரை பிரிந்து சிறுமி படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டிருந்தாள். அப்போது சிறுத்தை சிறுமியை தூக்கி சென்று கடித்துக் கொன்றது.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் சிக்கின. இதில் குழந்தையை கொன்ற சிறுத்தையை மீண்டும் காட்டிற்கு விடக்கூடாது அது மீண்டும் மனிதர்களை தாக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பிடிபட்ட 6 சிறுத்தைகளின் நகம் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

    முதற்கட்டமாக 4 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தது. அந்த 4 சிறுத்தைகள் மீண்டும் திருப்பதி வனப்பகுதியில் விடப்பட்டன.

    மேலும் 2 சிறுத்தைகளுக்கு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு பெரிய சிறுத்தை சிறுமியைக் கொன்றது தெரியவந்தது .

    இதனை தொடர்ந்து அந்த சிறுத்தை திருப்பதி பூங்காவில் உள்ள கூண்டில் நிரந்தரமாக அடைக்க முடிவு செய்தனர்.

    மேலும் உள்ள ஒரு சிறுத்தையை காட்டில் விட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது ஒரு புறம் இருக்க நேற்று திருப்பதி மலைபாதையில் கரடி ஒன்று நடமாடியது. இதனைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் கூட்டமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    • பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.

    பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    • கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
    • வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

    மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

    கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.
    • காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் காட்டு யானை, மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட எண்ணற்ற வன விலங்குகள் உள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இதன் காரணமாக வனப்பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் அங்குள்ள குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டுக்குள் அங்கு மிங்குமாக அலைந்து திரிந்து வருகின்றன.

    எனவே அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப்ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 9 குட்டைகள், 18 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. அங்கு தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் குளம், குட்டை மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது. எனவே காட்டுக்குள் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர்த்தொட்டிகளை தேடி அலைந்து திரிந்து வருகின்றன.

    இதனை கருத்தில் கொண்டு காட்டுக்குள் இருக்கும் வனநீர்த்தேக்க தொட்டிகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அங்கு தினந்தோறும் தண்ணீரை நிரப்பும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    வன நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறுவதும் தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
    • மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அரசு மற்றும் அரசு சாராவளர்ச்சி திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகிறது.

    இதனால் 11 ஆயிரத்து 717 எக்டேர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு எக்டேர் பரப்பில் 104 மரங்கள் வெட்டப்பட்டது. இந்த மரங்களை வெட்ட அனுமதி அளித்ததன் மூலம் வனத்துறையானது ரூ.2,058 கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாய் மாநிலத்தின் தற்காலிக இழப்பீடு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மாநில வனத்துறை 5 ஆண்டுகளுக்குள் 12 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை வெட்ட அனுமதித்துள்ளது.

    இதன் மூலம் மரங்களை வெட்டுவதில் நாட்டிலேயே தெலுங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    • கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது.
    • சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கரடி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பெரும்பாலான விலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் மலைஅடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் மனிதன்-விலங்கு மோதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஒரு கரடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோத்தகிரி அடுத்த கெரடா குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு பூட்டியிருந்த கேட்டை தாண்டி வீட்டுக்குள் புகுந்தது. தொடர்ந்து மாடிப்படிக்கட்டில் ஏறிய கரடி உணவு தேடி சுற்றி திரிந்தது. அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்காததால் அந்த கரடி மீண்டும் வந்த வழியாக திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டது. இது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    கெரடா குடியிருப்புக்குள் புகுந்த கரடி பூட்டிய வீட்டின் கேட்டை தாண்டி மாடிப்படிக்கு சென்று உணவு தேடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் நுழையும் கரடிகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சரணாலயத்தில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.
    • நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    வேதாரண்யம்:

    கோடியக்கரை வனவிலங்கு சரணா லயத்தில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் அமிஷேக் தோமர் ஆலோசனையின் பேரில், திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள். வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி இன்று காலை தொடங்கப்பட்டது.

    பயிற்சியை நாகப்பட்டி னம் வன உயிரின காப்பாளர் அபிஷேக் தோமர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான், மாயிலாடுதுறை எ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டி யன், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர். நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்களுக்கு பயிற்சியானது நடைபெற உள்ளது.

    • கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.
    • ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுகுய்யனூர் பிரிவு உள்ளது. இந்த பகுதி வனப்பகுதியையொட்டி உள்ளது. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் புதுகுய்யனூர் பிரிவு அருகே மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் 100 அடி ஆழத்தில் கிணறு ஒன்று உள்ளது. புதர்களால் நிறைந்து கிடக்கும் இந்த கிணற்றில் தண்ணீர் எதுவும் இல்லை.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அந்த பகுதியாக வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. சுமார் 100 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சிறுத்தை தவறி விழுந்ததில் இருந்து அங்குமிங்குமாக உறும்பி கொண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

    இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது சிறுத்தை கிணற்றுக்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தினர். சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து புதுப்பீர்கடவு, ராஜன்நகர், பண்ணாரி ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை பார்க்க குவிய தொடங்கினர்.

    பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வருவதால், வனத்துறையினர் அனைவரையும் வெளியேறும்படி அறிவுறுத்தினர். கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை கடும் சீற்றத்துடன் உள்ளது. எனவே மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு முன்னர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே கிணற்றில் கரடி ஒன்று விழுந்தது. அதனை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தி அதனை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

    ×