என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்
- விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை யானை ஒன்று சுற்றி திரிகிறது.
- கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட மோத்தங்கல்புதூர், மணல்காடு, அய்யன்தோட்டம் ஆகிய வனத்துறை ஒட்டிய விவசாய தோட்டப் பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி திரிகிறது.
இரவில் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் வெளியேறும் யானையால் விவசாயிகளும், மோத்தங்கபுதுார் மக்களும் அச்சத்தில் உள்ளனர். தோட்டப்பகுதிகளில் புகுந்த யானை வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்தது. அங்கிருந்த வீட்டை ஒட்டி இருந்த வாழை மரங்களை முறித்து தின்று விவசாயிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற சென்னம்பட்டி வனத்துறையினர், யானையை காட்டுக்குள் துரத்தினர். ஆனால் அந்த யானை மீண்டும் மீண்டும் அடுத்த அடுத்த நாட்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், ஒற்றை யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனச்சரகர் ராஜா தலைமையில் வனப்பணியாளர்கள் டிரோன் கேமாரவை பயன்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக யானை அப்பகுதியில் தென் படவில்லை. இதுகுறித்து வனச்சரகர் ராஜா கூறியதாவது;- எண்ணமங்கலம், கோவிலூர், மணல்காடு, மோத்தங்கபுதுார் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்துக்குள் ஒற்றை யானை நடமாட்டம் இருக்கிறது. பலமுறை விரட்டியும் தொடர்ந்து யானை வெளியேறுவதை தடுக்க முடிய வில்லை.
டிரோன் கேமராவை பயன்படுத்தி யானை நடமாட்டத்தை கண்டறிந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையை விரட்டும் வரை, இரவு நேரத்தில் வனப்பகுதி ஒட்டிய இடங்களிலும், பகலில் வனப் பகுதிகளிலும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என சென்னம்பட்டி வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.






