என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாவலர்.. பிரபல சூழலியல் அறிஞர் மாதவ் காட்கில் மறைவு
    X

    மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாவலர்.. பிரபல சூழலியல் அறிஞர் மாதவ் காட்கில் மறைவு

    • நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.
    • பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளரும், மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக முக்கிய பங்காற்றியவருமான மாதவ் காட்கில் காலமானார். அவருக்கு வயது 83.

    வயது மூப்பு காரணமாக அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் புனேவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு இயற்கை எய்தினார்.

    2010-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழுவின் தலைவராக காட்கில் இருந்தார். இது 'காட்கில் கமிஷன்' எனப்படுகிறது.

    இவர் தாக்கல் செய்த 'காட்கில் அறிக்கை' மேற்குத் தொடர்ச்சி மலையின் 75% பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தியது. அங்குச் சுரங்கப் பணிகள் மற்றும் பெரிய கட்டுமானங்களுக்குத் தடை விதிக்கக் கோரியது.

    காட்கில் அறிக்கை, இன்றுவரை சூழலியல் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

    1986-ம் ஆண்டு இந்தியாவின் முதலாவது பயோஷ்பியர் ரிசர்வ் ஆன நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றினார்.

    வனப்பகுதிகளைப் பாதுகாப்பதில் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

    இந்தியாவின் 'உயிரியல் பன்முகத்தன்மை சட்டம்' உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐநா-வின் உயரிய விருதான 'சாம்பியன்ஸ் ஆப் எர்த்' உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

    பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) நீண்ட காலம் பேராசிரியராக காட்கில் பணியாற்றினார் .

    சுமார் 215 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 6 முக்கியப் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

    அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×