search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரிசி கொம்பனை எங்கள் பகுதியிலேயே கொண்டு வந்து விடுங்கள்- மூணாறு மக்களின் உணர்ச்சிப் போராட்டம்
    X

    அரிசி கொம்பன் யானையை கொண்டு வர வலியுறுத்தி சின்னக்கானல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    அரிசி கொம்பனை எங்கள் பகுதியிலேயே கொண்டு வந்து விடுங்கள்- மூணாறு மக்களின் உணர்ச்சிப் போராட்டம்

    • பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
    • யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    Next Story
    ×