என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் அரசு பஸ்சை நள்ளிரவில் வழிமறித்த யானைகள்
- பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன.
- சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதிலும் குறிப்பாக கருமலை, சிறுகுன்றா, வெள்ளமலை, புதுத்தோட்டம், தாய்முடி, நடுமலை அம்மையப்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு உள்ளன.
மேலும் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டின் பல்வேறு இடங்களில் யானைகள் கூட்டம் தனித்தனியாக முகாமிட்டு சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அரசு பஸ் வால்பாறைக்கு புறப்பட்டு சென்றது.
அப்போது 3-வது கொண்டை ஊசி வளைவு அருகே குட்டியுடன் நின்ற 3 யானைகள் சாலையை வழிமறித்து நின்றன. இதனை பார்த்த அரசு பஸ் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். பயணிகளும் பீதி அடைந்தனர்.
அரசு பஸ் டிரைவர் உடனடியாக வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். தொடர்ந்து பஸ்சின் பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன.
வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் சிறிது நேரம் சுற்றி திரிந்த யானைகள் பின்னர் சாலையோரம் ஒதுங்கி சென்றன. அதன்பிறகு அந்த பகுதியில் வாகன போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பருவமழைக்கு பிறகு மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் வால்பாறை-பொள்ளாச்சி ரோட்டில் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரோட்டில் இரவு நேரத்தில் செல்வோர் வாகனங்களை மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மேலும் யானைகள் எதிரில் தென்பட்டால், சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அவை விலகி சென்று விடும். ஹாரன் ஒலித்து யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






