என் மலர்
வழிபாடு

தஞ்சையில் இன்று காலை 16 கோவில் பெருமாள்கள் நவநீத சேவை
- 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை ஆகியவை சார்பில் 91-ம் ஆண்டு கருட சேவை பெருவிழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, 26 பெருமாள்கள் கருடசேவை விழா நேற்று (திங்கட்கிழமை) நடந்தது.
இதனைத் தொடர்ந்து, 16 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி பெருவிழா என்கிற நவநீத சேவை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதில் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜவீதி நவநீத கிருஷ்ணன், விஜயராமர் சன்னதி, எல்லையம்மன் தெரு ஜனார்த்தனப் பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழ ராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு ராஜவீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராம சுவாமி பெருமாள், மகர்நோம்புச்சாவடி நவநீத கிருஷ்ணசாமி, பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதப் பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய 16 கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து 16 பெருமாள்களும் புறப்பட்டு கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஒரே நேரத்தில் 16 சுவாமிகள் அவர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.






