என் மலர்
நீங்கள் தேடியது "Thaipoosam Festival"
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்ய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டு தோறும் தைப்பூசவிழா நடைபெறும். இந்த ஆண்டு 155-வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையிலும், சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து ஞான சபையில் கொடியோற்றம், பார்வதிபுரம் கிராமமக்கள் சார்பில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மசாலை மேடையில் திருவருட்பா இன்னிசையும், இரவு 6 மணி முதல் 9 மணி வரை சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
தைப்பூச விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை காலை 5.30 மணி என 6 காலம் 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு ஜோதி தரிசனம் பெற்றனர்.
தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு நாளைமறுநாள் (3-ந்தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை (பேழை) பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச விழாவையொட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பனி, குளிரை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.
- உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
- இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!
சென்னை:
தமிழகம் முழுவதும் இன்று தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முருகன் கோவில்களில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
- பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
- கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தை மாதம் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகன் கோவில்களில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான், உமா தேவியுடன் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பசியை போக்கும் வகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் ஆங்காங்கே இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
- திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
- முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.
வாழ்க்கை என்பது இன்றைய கால கட்டத்தில் ஒரு பெரிய சவாலாகவே இருக்கின்றது. எல்லோர் மனதிலும் எனக்கு மகிழ்ச்சியும் வேண்டாம். துக்கமும் வேண்டாம். பிரச்சினை இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்தால் போதும் என்றுதான் இருக்கின்றது. ஆனால் அதனை கடப்பதற்கே ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வருமானம் இவை அடிப்படை தேவை ஆகின்றன. இதில் குடும்பம், உறவுகள் இவர்களின் மீதுள்ள பாசமே நம்மை துரத்தி இயக்குகின்றது எனலாம். நூறு பிரச்சினைகளும், போராட்டங்களும் 24 மணி நேரமும் நம் உடலினையும், மனதினையும் ஆட்டிப் படைக்கின்றன. முயற்சி செய்தும் இலக்கை-அடிப்படை தேவையை அடைய முடியாத பொழுது அநேகர் நடமாடும் ஜீவன் அற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரங்களில் மனிதனுக்கு ஒரு வடிகால் தேவைப்படுகின்றது. அந்த வடிகால்தான் இறைவன்.
அவரை நீங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் எனலாம்
குல தெய்வம் எனலாம். இஷ்ட தெய்வம் எனலாம்
பிள்ளையார், முருகன், அம்மன் எனலாம்
அல்லா எனலாம் இயேசு எனலாம்
இன்னும் எத்தனையோ தெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபடலாம்.
பலர் தன் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை என்ற உறுதியுடனும் இருக்கலாம்.
இது ஒவ்வொரு தனி மனிதனின் விருப்பம் சுதந்திரம். அநேகர் அவரவர் பரம்பரை வழியில் பார்த்து வருவதால் அதனை தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.
ஆக மனிதனுக்கு அவன் வாழ்க்கையினைக் கடக்க ஒரு துடுப்பு தேவையாக இருக்கின்றது. பிடிப்பு தேவையாக இருக்கின்றது. பொதுவாக நம் தமிழ்நாட்டில் முருக வழிபாடு என்பது காலம் காலமாய் இருக்கின்றது. சஷ்டி விரதமும், காவடி வழிபாடும் கோலாகலமாக காணப்படும் ஒன்று.
'எங்களுக்கு பாதுகாப்பு கொடு, ஞானம் கொடு... என்று அவரவர் தேவைக்கேற்ப வேண்டுதல்களை வைத்து விரதம், மவுன விரதம், பாதயாத்திரை செய்து ஊர் குலுங்கும் விழாவாக நடத்துகின்றனர்.
* முருகன் என்றாலே அழகுதான். ஓம் என்ற பிரணவத்தின் வடிவம்.

* ஆறு பகைவர்களை அழித்தவர். (ஆணவம், கம்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்)
* சரவணப் பொய்கையில் முருகன் ஆறு குழந்தைகளாய் பிறந்தார்.
* தமிழ் குறிஞ்சி நிலக் கடவுள். எத்தனை பெயர்கள் இவருக்கு கார்த்திகேயா, கந்தா, சுப்ரமணியா, குமரா, குகா, சண்முகா, ஆறுமுகா....
* பரம சிவன், பார்வதியின் புதல்வர், பிள்ளையாரின் இளைய சகோதரர்.
* சிவபிரான் நெற்றிக் கண்ணில் உதித்தவர்.
* கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர்.
* ஆறு குழந்தைகளை பார்வதி தாயார் ஒரு சேர அணைக்க ஆறு முகங்கள் கொண்ட ஒருவரானார்.
* என்றும் இளமையானவர்.
* அவரது வேல் வெறும் ஆயுதம் மட்டுமல்ல. அறியாமை தடைகளை நீக்கும் சக்தி கொண்டவை. அன்னை சக்தியால் அதை பெற்றவர்.
* மயில் வாகனம் கொண்டவர். மயில் காலில் பாம்பு. இவை ஆணவம், அழிவுப் பூர்வமான சிந்தனைகளை அழிக்கும் என குறிப்பிடுகின்றது.
* குகர்- குகைகளிலும், குன்றுகளிலும் இருப்பவர்.
* தந்தைக்கே உபதேசம் செய்த சாமிநாதன்.
* போர் கடவுள். அசுரர்களை அழித்தவர்.
* தமிழ் கடவுள்.
* ஆறுபடை வீடுகளைக் கொண்டவர்.
* தைப்பூச விழா மிகவும் சிறப்பு பெற்றது.
* வட இந்தியாவில் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றவர்.
* சிலோன், மலேசியா என ஏனைய நாடுகளிலும் இவர் கோவில்கள் உண்டு.
* அறுபடை வீடுகள்
* திருப்பரங்குன்றம்-தெய்வானை திருமணம் செய்த இடம்.
* திருச்செந்தூர்-சூரபத்மனை அழித்து சூரசம்ஹாரம் செய்த இடம்.
* பழநி-ஞானம் நிறைந்த இடம். சுவாமிமலை- ஓம் என்ற பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த தலம்.
திருத்தணி- அமைதி தரும் இடம்.
* பழமுதிர் சோலை-அவ்வையார் ஆசி பெற்ற இடம்.

கமலி ஸ்ரீபால்
எத்தனை எததனையோ முருக பக்தர்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் பழநியில் நவபாஷாண முருக சிலையினை உருவாக்கி ஸ்தாபித்த போகர் சித்தரை மறக்க முடியுமா? கி.மு. 200களில் வாழ்ந்தவர். இன்றும் பழநியில் ஜீவ சமாதியாக இருப்பவர். சீன நாட்டிற்க்கும் சென்றவர். பழநி நவபாஷாண சிலையின் அபிஷேக தீர்த்தம் மக்களின் நோய்களை போக்க வல்லது. இறைவன் மார்பில் இரவில் சந்தனம் சாற்றி மறுநாள் அதனையும் பிரசாதமாக வழங்குவர். இதே போன்று அவர் மற்றொரு நவ பாஷாண முருகர் சிலையினை உருவாக்கி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது. சிறந்த ஆன்மீக, தியான முறைகளை அருளியவர்.
அருணகிரி நாதரை அறியாத ஆன்மீக வழி மக்கள் குறைவு எனலாம். தன் வாழ்வினை எண்ணி வருந்தி கோவில் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்ற பொழுது அவரை தடுத்தாட் கொண்டவர் முருகபிரான். பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் முருகனைப் பாடியே முக்தி அடைந்தார். திருப்புகழினை பாடியவர். 15-ம் நூற்றாண்டினைச் சார்ந்தவர். ஆறு எழுத்து மந்திரமான 'சரவண பவ' அருணகிரிநாதரின் நாக்கில் முருகன் வேல் கொண்டு எழுதினார் என்றும் "ஓம்" என எழுதினார் என்றும் கூறப்படுகின்றன.
இவருக்கு பல இடங்களில் முருகர் காட்சி அளித்துள்ளார். திருவண்ணாமலையில் முருகன் அருணகிரி நாதருக்கு உபதேசம் செய்தார்.
திருச்செந்தூரில் நடன தரிசனம் தந்தார்.
வயலூரில் மயில் மீது அமர்ந்து காட்சி தந்தார். மேலும் சுவாமிமலை, திருவிடைக்கழி என பல இடங்களில் முருகனை கண்ணார கண்டுகளித்தவர் அருணகிரிநாதர். முருகனிடம் நேரடி உபதேசம் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆவர்.
மன்னர் ஒருவருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்ட போது அருணகிரி நாதர் கிளியாக மாறி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வந்து மன்னரின் கண் பார்வையினை மீட்டார் எனவும் கூறப்படுகின்றது.
இவரது திருப்புகழ் பாடல்களை ஒரு முறையாவது பொருள் அறிந்து படித்துதான் பார்க்கலாமே.
அது போலவே 'கந்தர் சஷ்டி கவசத்தினை' அன்றாடம் சொல்ல சிறு வயது முதலே குழந்தைகளை பழக்கலாமே.
இது போலத்தான் போகர் சித்தரும், மாபெரும் சித்தர் என்பதனை அறிந்தோம். ரசவாத ரகசியங்கள், மருத்துவ நுட்பங்கள், போகர்-1000 போன்ற நூல்களை படித்தால் பல அரிய விஷயங்களைக் கற்கலாம். மேரு மலையே சுற்றி வந்தவர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனிக்கு செல்லும் பக்தர்கள் முருகனை தரிசித்து, செவ்வாய் ஆதிக்கம் கொண்ட போகர் சமாதியிலும் வணங்கி வருவர்.
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் ஸ்ரீ மத் குமரகுரு சுவாமிகள் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான், ஞானி. 666 பாடல்களை சைவ சமயம், முருக வழிபாட்டில் பாடியுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது ஜீவ சமாதி உலகப் பிரசித்தி பெற்றது.
சண்முக கவசம், குமாரஸ்தவம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற பாடல்களை இயற்றியவர். 1929ல் ஜீவசமாதி அடைந்தவர். 'வேலும், மயிலும் துணை'. இது இவரது மந்திரச் சொல். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தங்க வேலினை வருடம் ஒருமுறை மலை சுனைக்கு எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து மேலே காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்து கொண்டு வருவர். மேள தாளங்களுடன் மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த வேல் பூஜை.
பாம்பன் சுவாமிகளுக்கு 1920-ல் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்திய நிலையில் அவரது பக்தர் 'சண்முக கவசத்தினை' தினமும் 11 முறை படித்தார். 11-ம் நாள் அவரது கனவில் இரு மயில்கள் வந்து நடனமாட, வேல் சுவாமிகளின் கால்களை சீர் செய்ய, முருக பிரான் சுவாமிகளின் அருகில் அமர்ந்திருப்பதனைக் கண்டார். பாம்பன் சுவாமிகளின் கால்களும் முழுமையாய் குணமடைந்து இருப்பதனைப் பார்தார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் மருத்துவமனை சென்ற பொழுது அவர் கனவில் கண்ட அனைத்தும் உண்மையிலேயே நடந்து இருந்தது. இன்றும் இதற்கான சாட்சியங்கள் உள்ளன.
பாம்பன் சுவாமிகள் கடுந்தவம் புரிந்த காலத்தில் முருகன், அருணகிரி நாதர், அகத்திய சுவாமிகள் ஆகிேயார் ஒரு சேர காட்சி அளித்தனர். அவர் தவம் செய்த காலத்தில் அவரை நெருங்கிய துஷ்ட சக்திகளை அவரது 'தண்டம்' துரத்தியது. இன்றும் திருப்பரங்குன்றம் பாம்பன் சுவாமிகளின் ஆலயத்தில் அத்திரு தண்டம் பூஜிக்கப்படுகின்றது.
தைப்பூசம்
இந்த விழா உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்களால் கொண்டாடப்படும் விழா. கோலா கலமான விழா. ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் என்று கொண்டாடப்படும் விழா. இம்முறை2026-ல் நாளை (1-ந்தேதி) அன்று வருகின்றது. ஆனால் அதற்கான ஆரம்ப வேலைகள் தை மாதத்திற்கு முன்பே ஆரம்பித்து விடும். பலர் 48 நாள் விரதம் எடுப்பர். கடும் விரதம் எடுப்பவர்களும் உண்டு. பலர் 21 நாள், 7 நாள் என்றும் விரதம் இருப்பர். விரத கோட்பாடுகளை பக்தியுடன் கடைபிடிப்பர். சிலர் பால், பழம் மட்டுமே அருந்துவார்கள். காவடி எடுப்பது, பால் குடம் ஏந்தி செல்வது என பல வேண்டுதல்கள் இருக்கும். அலகு குத்துவார்கள். பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்த தைப்பூசத்தில்தான் அகிலமே தோன்றி யது என்பவரும் உண்டு. பழநியில் இந்த விழா கூடுதல் சிறப்புடன் நிகழும்.
வறுமை நீங்க, வேண்டுதல்களின் காணிக்கையாக, பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் நீங்க இந்நாளில் சிறப்பு பூஜைகளும், விழாக்களும் நடக்கின்றன. சிவ, பார்வதி ஆனந்த நடனம் நிகழ்வது இந்நாளில் என்ற கருத்து உண்டு. குரு பகவான் வழிபாடும் நடைபெறும். வணங்கி வளம் பெறுவோம்.
- தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
- சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை, கருங்குழி, வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார். இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு காட்ட வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் சத்திய ஞானசபையையும், பசிப்பிணி போக்க சத்திய தருமசாலையும் நிறுவினார். வள்ளலார் நிறுவிய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு 155-வது தைப்பூச விழாவாக நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக ஜனவரி 24-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலும், தருமச்சாலையில் ஜனவரி 27முதல் 30-ந்தேதி வரை, அருட்பா முற்றோதலும் நடைபெற்றது.
இன்று(சனிக்கிழமை) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும், வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது.
மதியம் 1 மணி அளவில் திருவருட்பா இன்னிசை நடைபெற்றது. இரவு, 6 மணி முதல் 9 மணி வரை தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெறுகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி, மறுநாள் திங்கள் காலை 5.30 ஆகிய 6 காலம், 7 திரை நீக்கிய ஜோதி தரிசனம், நடைபெறுகிறது. இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின்பல பகுதியில் சிறப்பு பஸ்கள், மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தைப்பூசத்தன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையிலும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தொழிலாளர் நலன்மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட அரசு உயர்நிலை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளிவிட்டு 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள, வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறைஉள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன் மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தைப்பூச விழாவையொட்டி பிரமாண்ட கடை வீதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடைகளில் அலுமினிய பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள், பழக்கடைகள், அவல் பொறிகடை, டெல்லி அப்பளம் கடைகள், சர்க்கஸ் கூடாரங்கள், நடன நாட்டிய அரங்குகள், சிறுவருக்கான ராட்டினம் தொடங்கி பிரம்மாண்ட கடைத்தெருக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தம், செயல்அலுவலர் ராஜா சரவணக்குமார், அறங்காவலர்கள் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.
- நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்து வந்தும், வழிபாடு செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாளை தைப்பூச திருவிழாவையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலை வாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்தல் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நாளை தைப்பூச திருவிழாவில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 371-வது ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வருபம்,6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலாவும் நடக்கிறது.
- செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தைப்பூசத்தின் 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா இன்று காலை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து இரவில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருநாளில் தேர் திருவிழா நடைபெறும். இதில் செங்கோட்டையை சுற்றியுள்ள 20 மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து செல்வது வழக்கம். இறுதி நிகழ்ச்சியான தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருவார்கள். இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்து வருகின்றனர். 10 நாள் நடைபெறும் திருவிழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.






