என் மலர்
நீங்கள் தேடியது "வடலூர் சத்திய ஞான சபை"
- மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
- நேற்று இரவு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபை உள்ளது, இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாத பூச நட்சத்திரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு சத்திய ஞான சபையில், 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள், அருட்பெருஞ் சோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதியை தரிசித்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான, சன்மார்க்க அன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர், ஜோதி தரிசனத்தை தொடர்ந்து சபை வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தொடர்ந்து வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் திரு மாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.
ஞானசபை உள்ள பொதுவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
- நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது.
வடலூர்:
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதில் தை மாதம் வரும் பூசநட்சத்திரத்தன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆகையால் தைப்பூச ஜோதி தரிசன விழா இங்கு வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
அந்த வகையில், 154-வது ஆண்டு தைப்பூச விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதில் வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், வடலூர் சத்திய தருமச்சாலையிலும் இன்று காலை 7.30 மணி அளவில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சத்யஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதில், சத்தியஞானசபையில் 6 காலமாக 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
அதன்படி, நாளை காலை 6 மணிக்கு முதல் காலம் ஜோதி தரிசனம் நடக்கிறது. பின்னர், காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணிக்கும், 12-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலிக வாகன நிறுத்தங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவையும் வடலூர் நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தைப்பூச ஜோதி தரிசன விழா முடிந்த பின்னர், 13-ந்தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திரு அறை தரிசன பெருவிழா நடைபெற உள்ளது.
- 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் ஜோதி தரிசனத்தை காண மக்கள் வந்து செல்லும் வகையில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.






