என் மலர்
இந்தியா

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு பொய்யானது: திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு இல்லை - சிபிஐ
- திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் பரிகார விரதம் இருந்தார் .
- ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.
லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.
இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.
இதனிடையே ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்துள்ளன.






