என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி லட்டு"

    • சிறிய அளவிலான கலப்படத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்.
    • நெய் மற்றும் உலர் பழங்கள் உள்பட 60 பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தகவல்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எலாக்ட்ரினிக் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று ஆந்திர மாநில சுகாதார அமைச்சர் சத்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமைச்சர் சத்ய குமார் யாதவ் கூறியதாவது:-

    அதி நவீன உணவு ஆய்வகம் மூலம் எலக்ட்ரானிக் உபகரணங்கள் (E-Tongue and E-Nose) ஆகியவற்றைக் கொண்டு நெய்யில் சிறிய அளவிலான கலப்படத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும். இந்த ஆய்வகம் திருமலையில் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.

    இந்த உபகரணங்கள் பிரான்சில் இருந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆய்வகம் இந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளது. ஆந்திராவில் முதன்முறையாக அமைய இருக்கிறது. 25 கோடி ரூபாயில் அமையவிருக்கும் இந்த ஆய்வகத்தின், 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதத்தில் இருந்து செயல்படும்.

    நெய் மற்றும் உலர் பழங்கள் உள்பட லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் 60 பொருட்கள் தரத்தை சரிபார்க்க இந்த ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் சத்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    • நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
    • குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்க குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

    முந்தைய ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு வினியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார்.

    இவ்விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.

    இதுதொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக திரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

    இந்த விசாரணைக்காக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்தது.
    • புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

    கர்னூல் மாவட்டம் களுகோட்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

    இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

    முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் பவன் கல்யாண் பரிகார விரதம் இருந்தார் .
    • ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்டு வரும் பிரசாத லட்டு தயாரிக்க, மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்த நெய்யை பயன்படுத்தியதாக 2024 ஆம் ஆண்டு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார்.

    லட்டிற்கு தயாரிக்கப்படும் நெய் சுத்தமானது இல்லை. அதில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருந்தது என முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது குற்றம் சுமத்தினார்.

    இதனையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

    மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

    இதனிடையே திருப்பத்தி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரத்தில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகார விரதம் இருந்து அலிபிரி நடைபாதை வழியாக திருப்பதி மலைக்கு நடந்து சென்றார்.

    இதனிடையே ஏழுமலையான் கோவிலில் மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் விலங்குகளின் கொழுப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றசாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரியவந்துள்ளன.

    • 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரிப்பு.
    • ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    2025-ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 13.52 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளை விட மிகப்பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.

    2024ம் ஆண்டில் மொத்த லட்டு விற்பனை 12.15 கோடியாகவும், 2025-ல் 13.52 கோடியாகவும் உள்ளது. இது, 1.37 கோடி அதாவது 10 சதவீதம் அதிகளவு விற்பனையாகும்.

    இதேபோல், 2024-ம் ஆண்டில் 2.55 கோடியாக இருந்த பக்தர்களின் வருகை, 2025ம் ஆண்டில் 2.70 கோடியாக அதிகரித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 27, 2025 அன்று ஒரே நாளில் மட்டும் 5.13 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத ஒரு நாள் சாதனையாகும்.

    பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு நாளைக்குச் சராசரியாக 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விசேஷ நாட்களில் இது 8 முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கப்படுகிறது.

    2024-ல் எழுந்த நெய் கலப்பட சர்ச்சைகளுக்குப் பிறகு, 2025-ல் தரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, லட்டுகளின் தரம் உறுதி செய்யப்பட்டதால் பக்தர்களின் நம்பிக்கை மற்றும் வரவேற்பு அதிகரித்துள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ 2.43 கோடி வருவாய் கிடைத்தது.
    • தற்போது பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் இருப்பு வைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தரத்துடன் சுவையாக உள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் ஒரே நாளில் 4,86,134 லட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ 2.43 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ஒரே நாளில் 3.24 லட்சம் லட்டுகள் விற்பனையானது. இதே போல் கடந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 350 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 கோடியே 24 லட்சத்து 40 ஆயிரத்து 82 லட்டுகள் தயார் செய்யப்பட்டது. தற்போது பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் இருப்பு வைத்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 65,112 பேர் தரிசனம் செய்தனர். 27,331 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.49 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
    • விரைவில், வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகளை இதே ஏந்திரத்தின் மூலமாக பெறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் லட்டுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லாத ஒரு புதிய முறையை தேவஸ்தானம் செயல்படுத்த உள்ளது. அதில் பக்தர்கள் வரிசையில் காத்திருக்காமல் டிஜிட்டல் முறையில் லட்டுகளைப் பெறலாம்.

    இதற்காக தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிஜிட்டல் லட்டு கொள்முதல் முறையைத் தொடங்க உள்ளது.

    இந்த புதிய முறையில், பக்தர்கள் தங்கள் தரிசன டிக்கெட் எண்ணை அதற்கென வைக்கப்பட்டுள்ள எந்திரத்தில் பதிவு செய்து, தங்களுக்குத் தேவையான லட்டுகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, யூ.பி.ஐ. அல்லது பிற டிஜிட்டல் மூலம் பணம் செலுத்தி லட்டுக்கான டிக்கெட்டை பெறலாம்.

    மேலும், தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வாங்கும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. அவர்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம் 2 லட்டுகளை வாங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. இருப்பினும், எதிர் காலத்தில், இந்த வரம்பை 4 லட்டுகளாக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வருபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    தற்போது, யூனியன் வங்கி மற்றும் கனரா வங்கியின் கீழ் லட்டு கவுண்டரில் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.பி.சி. விசாரணை மையத்தில் மேலும் 3 எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இத்துடன் மேலும் சி.ஆர்.ஓ. அலுவலகம், பத்மாவதி விருந்தினர் மாளிகை மற்றும் விருந்தினர் மாளிகைகளிலும் இத்திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. விரைவில், வி.ஐ.பி தரிசன டிக்கெட்டுகளை இதே ஏந்திரத்தின் மூலமாக பெறும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.
    • ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்றது.

    சமீபத்தில் ஆந்திராவின் திருப்பதி திருமலை கோவிலின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது.

    இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த போலே பாபா நிறுவனம் வழங்கியது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தேவஸ்தானத்தில் போலே பாபா டெய்ரி நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளதால் நேரடியாக ஒப்பந்தம் பெற முடியாமல் ஏ.ஆர்.டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் பெற்று விநியோகித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான குற்றச்சாட்டில் சிபிஐ தொடர்புடையவர்களைக் கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு ஜாமின் வழங்க சிபிஐ நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  

    • கடந்த மாதத்தில் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
    • லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.

    திருமலை

    திருமலையில் பக்தா்களிடம் குறைகள் கேட்கும் (டயல் யுவர் இ.ஓ) நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமலையில் ரூ.120 கோடியில் புதிய தோற்றத்துடன் அதிநவீன எஸ்.வி.அருங்காட்சியகம் இந்த ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். உலகத்திலேயே நம்பர் ஒன் அருங்காட்சியமாக இது இருக்கும். அருங்காட்சியகத்தில் 3டி இமேஜிங் முறையில் வெங்கடாசலபதியின் தங்க நகைகள் பக்தர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரமான, சரியான எடையில் லட்டு பிரசாதங்களை தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.50 கோடியில் தானியங்கி எந்திரத்தை காணிக்கையாக வழங்க உள்ளது. அதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதலாக சுகாதாரமான, சுவையான லட்டு பிரசாதங்களை தயாரித்து வழங்க முடியும்.

    ஆகாச கங்கை தீர்த்தம் பகுதியில் அஞ்சனாத்ரி கோவில் கட்டும் பணி பக்தர்களின் காணிக்கையில் ரூ.50 கோடியில் இருந்து ரூ.60 கோடி வரையிலான செலவில் நடந்து வருகிறது. புதிய பரகாமணி கட்டிடம் 5-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும்.

    திருமலையில் உள்ள அக்கேசியா தோட்டம் விரைவில் மாற்றப்பட உள்ளது. அதற்கானப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அக்கேசியா தோட்டத்தில் பல வண்ண மரங்கள், செடி, கொடிகள் அமைக்கப்படும்.

    அத்துடன் சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள், செடி, கொடிகள், அரிய வகை மூலிகை தாவரங்கள் அக்கேசியாவுக்கு மாற்றப்படும். அதை, பக்தர்கள் பார்த்து மகிழலாம்.

    கடந்த மாதத்தில் 20 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 7 லட்சத்து 51 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    ஒருமாத உண்டியல் வருமானமாக ரூ.123.07 கோடி கிடைத்தது. 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. லட்டுகள் விற்பனை மூலம் ரூ.7 கோடி வருமானம் கிடைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றை தயார் செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
    • சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

    இந்நிலையில், இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
    • சணல் பை பயன்படுத்தப்பட்டது.

    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதத்தை பெற்றுச்ெசல்ல கவுண்ட்டர்களுக்கு வரும் பக்தர்கள் முதலில் பாலித்தீன் கவர்களை விலை கொடுத்து வாங்கி, அதில் லட்டு பிரசாதங்களை வாங்கி எடுத்துச்சென்றனர்.

    பாலித்தீன் கவர்களாலும், பிளாஸ்டிக் பொருட்களாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை தற்போது வரை அமலில் உள்ளது. இதனையடுத்து சணல் பை பயன்படுத்தப்பட்டது.

    ஆனால் லட்டுகளில் உள்ள நெய்யை சணல் உறிஞ்சி விடுவதால் சுவை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின்னர் காகித அட்டைப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முயற்சியாக லட்டு பிரசாதத்துக்காக பனை ஓலைகளால் தயார் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளின் பயன்பாட்டை திருப்பதி தேவஸ்தானம் நடைமுறைப்படுத்தி உள்ளது.

    அதன்படி பக்தர்களுக்கு வினியோகிக்கும் லட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பல்வேறு அளவுகளில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பெட்டிகள், கூடைகளை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டியிடம் வேளாண் விஞ்ஞானி விஜயராம் வழங்கினார்.

    இவை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இதன் மூலம் பனை ஓலை பெட்டிகள், கூடைகள் விரைவில் லட்டு கவுண்ட்டர்களில் பயன்படுத்தப்படும் என்றும் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்தார்.

    • இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து இருக்கிறோம்.

    இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் ஆந்திர மாநில விளைபொருள் விற்பனை துறை அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான விலையில் கொள்முதல் செய்ய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 2 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 3-ந்தேதி துவங்கி 16-ந்தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×