என் மலர்
இந்தியா

டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டல்- பல்கலைக்கழக துணை வேந்தரிடம் ரூ.14 லட்சம் மோசடி
- பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
- பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெர்ஹாம்பூர்:
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், கீதாஞ்சலி தாஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறு கூறிய அவர்கள், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
அவர்களை ஒடிசா அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






