என் மலர்
இந்தியா

ஊழல் வழக்கில் வீட்டில் சோதனை.. சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற எம்எல்ஏ - தட்டித் தூக்கிய அமலாக்கத்துறை
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.






