என் மலர்
இந்தியா

அமெரிக்க SEC-யின் அதிரடி நடவடிக்கை: அதானி நிறுவனப் பங்குகள் கடும் சரிவு!
- சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்தது.
- அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது
அதானி குழுமப் பங்குகள் இன்று 10% வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 10% வரை சரிவைக் கண்டுள்ளன. கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் வாயிலாக நேரடியாக சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கோரியுள்ள நிலையில் அதானி குழும பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.
சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்ததால், அவை தோல்வியடைந்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அறிவிப்புகளை வழங்க அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியப் பெருநிறுவனம் ஒன்று தொடர்புடைய மிக முக்கியமான சட்ட வழக்காக இது கருதப்படுகிறது.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் 10% சரிந்து ஒருநாள் வர்த்தகத்தில் குறைந்தபட்ச விலையான ரூ. 823-ஐ எட்டின. அதே சமயம் குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸின் பங்குகள் 8% சரிந்து ரூ. 1,936-ஐத் தொட்டன. மேலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 5% சரிந்து ரூ. 1,343-க்கும், அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 8% சரிந்து ஒரு பங்கின் விலை ரூ. 852-க்கும் சரிந்தது.
முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி தயாரிக்கும் மின்சாரத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகள் எழுந்தது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும், தனது நிலைப்பாட்டைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது.






