search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adani"

    • அதானியின் இளைய மகனான ஜீத் அதானி அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
    • ஜீத் அதானி தனது வருங்கால மனைவி திவா ஷாவுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.

    இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் அதானி. அவரின் இளைய மகனான ஜீத் அதானிக்கும் திவா ஜெய்மின் ஷாவிற்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

    திருமணத்திற்கு முன்பாக ஜீத் அதானி தனது வருங்கால மனைவியுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில், இந்த ஜோடி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மிட்டி கஃபேவிற்கு ஒன்றாக சென்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் இந்த கஃபேவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது திருமண பத்திரிகையை அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும், ஊழியர்களுடன் சேர்ந்து ஜீட் அதானி - திவ்யா ஷா ஜோடி கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

    2023 ஆண்டு ஜூலை மாதம் இந்த மிட்டி கஃபேவை ஜீத் அதானி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனையடுத்து, மிட்டி கஃபே நிறுவனரான அலினா ஆலம், ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா ஜோடிக்கு நன்றி கூறியதோடு அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

    • அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மறுத்தன.
    • இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

    அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி மூடப்பட்டதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்தார்.

    "கடந்த ஆண்டு இறுதியிலிருந்து நான் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டபடி, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் பணியாற்றி வந்த திட்டங்களை முடித்த பிறகு திட்டம் முடிவடையும். நாங்கள் சமீபத்தில் முடித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட கடைசி போன்சி வழக்குகளின்படி, அந்த நாள் இன்று," என்று ஆண்டர்சன் அறிவித்தார்.

    கடந்த சில ஆண்டுகளில், ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட அதன் அறிக்கைகள் இந்திய கோடீஸ்வரரான அதானிக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை ஏற்படுத்தின. ஹிண்டன்பர்க் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மறுத்தன.

    ஜோ பைடன் நிர்வாகத்தின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையவும் ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கும் ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பே, ஆண்டர்சன் தனது நிறுவனத்தை கலைத்திருக்கிறார். எனினும், இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

    "இப்போது ஏன் கலைக்க வேண்டும்? ஒரு விஷயமும் இல்லை - அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை, பெரிதாக தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட கட்டத்தில் வெற்றிகரமான தொழில் ஒரு சுயநலச் செயலாக மாறும் என்று ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார். ஆரம்பத்தில், சில விஷயங்களை நானே நிரூபிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அநேகமாக என் வாழ்க்கையில் முதல் முறையாக, இப்போது எனக்குள் சில ஆறுதல்களைக் கண்டேன்," என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 8 மணி நேரம் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார்
    • இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.

    ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வரை [ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை] வேலை செய்ய வேண்டும் என்று பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இணை நிறுவனரும் கோடீஸ்வரருமான நாராயண மூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வதே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டும் நிலையில் நாராயண மூர்த்தியின் இந்த கருத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இந்நிலையில் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரபல முன்னணி சர்ச்சை தொழிலதிபர் கௌதம் அதானி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உங்கள் வேலை வாழ்க்கை சமநிலையை என்மீது திணிக்கக்கூடாது, எனது வேலை வாழ்க்கை சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன்.

    ஒருவர் தனது குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார், மற்றொருவர் 8 மணி நேரம் அவர்களுடன் நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பார். அது அவர்களின் சமநிலை. உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவு செய்கிறீர்கள் என்பதால் மட்டுமே அது நடக்காமல் இருக்கப்போவதில்லை.

     

     மேலும் உங்கள் குழந்தைகளும், உங்களுக்கு குடும்ப மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகம் இல்லை என்று அறிந்து அதையே பின்பற்றும்.

     

    உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகம் பிடித்திருக்கும். இதை தாண்டி ஒரு உலகம் நமக்கு இல்லை. யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவர் அறிந்துகொண்டால் வாழ்க்கை ரொம்ப சிம்பிள் என கூறியுள்ளார்.

    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழும நிறுவனத்திற்கு வழங்கப்படவிருந்த நிலையில், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருப்பது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வசூலிக்கப்படும் மின் கட்டணத்தின் பெரும் பகுதி அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்படவிருந்தது தடுக்கப்பட்டிருப்பதும், அதற்காக பங்காற்றியதும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கான நடைமுறையில் தொடக்கத்திலிருந்தே ஏராளமான குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன. ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரப்பட்டன. அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது எந்த வகையில் நியாயம்? இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பார்கள்? என்று கடந்த 6-ஆம் தேதி வினா எழுப்பியிருந்தேன்.

    அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஒரு மீட்டருக்கான மொத்த செலவு ரூ.6169 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை ரூ.4,000 என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில், தமிழக அரசால் வழங்கப்படும் முன்பணம் தவிர, அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக ரூ.15,000 வீதம் 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும் என்று வினா எழுப்பிய நான், அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக மறு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதும் தேவையற்றது. அவ்வாறு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டால், மக்களின் பணம் அதானி குழுமத்திற்கு பதிலாக இன்னொரு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதற்குத் தான் வழிவகுக்கும். எனவே, அந்த முடிவை கைவிட்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

    அதேபோல், அதானி குழும நிறுவனம் தயாரிக்கும் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்காக வழங்கப்படும் கட்டணமான யூனிட்டுக்கு ரூ.2.61 என்பது மிகவும் அதிகம் என்பதாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாலும் அதற்கான ஒப்பந்தத்தையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும்.
    • டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியான செய்திகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தது.

    ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதானி வில்மர் நிறுவனத்தில் அதானிக்கு 43.94 சதவீத பங்குகள் உள்ளன.
    • இந்த அனைத்து பங்குகளையும் வில்மர் நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடிவு.

    சமையல் எண்ணெய் (Fortune) கோதுமை மாவு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக அதானி வில்மர் திகழ்ந்து வருகிறது.

    சிங்கப்பூர் பார்ட்னருடன் இணைந்து இந்த நிறுவனத்தை அதானி குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் 43.94 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ளது. தற்போது இந்த 43.94 சதவீது பங்குகளையும் அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

    வில்மர் சர்வதேச (Wilmar International) நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது. குறைந்தபட்ச பொது பங்குதாரர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 13 சதவீத பங்குகளை பொது வெளியில் விற்பனை செய்ய இருக்கிறது.

    31.06 சதவீத பங்குகளை வில்மருக்கு விற்பனை செய்வதன் மூலம் (ஒரு பங்கின் விலை 305 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது) அதான் என்டர்பிரைசர்ஸ் லிமிடெட்டிற்கு 12,314 கோடி ரூபாய் கிடைக்கும். OFS மூலம் பங்குகளை விற்பனை செய்வது மூலம் என மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 17,100 கோடி ரூபாய்) கிடைக்கும்.

    இதன் மூலம் அதானி வில்மரில் இருந்து அதான் என்டர்பிரைசர்ஸ் முழுமையாக வெளியேறும். அதானி வில்மர் லிமிடெட்டில் இருந்து அதானி பரிந்துரை செய்த டைரக்டர்கள் பதவி விலக உள்ளனர்.

    அதானி வில்மரில் இருந்து முழுமையாக வெளியேறும் நடவடிக்கை அடுத்த வருடம் மார்ச் 31-ந்தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்க நீதிமன்றம் அதானி மீது குற்றச்சாட்டிய நிலையில், அதானி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்கு மாற்றம் இதுவாகும்

    இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

    அதானி வில்மர் நிறுவனம் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமையல் எண்ணெய், கோதுமை மாவு, பருப்புகள், அரசி, சர்க்கரை ஆகியவற்றை விற்பனை செய்கிறது. நாடு முழுவதும் 10 மாநிலங்களில் 23 ஆலைகள் உள்ளன.

    • அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்
    • டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய  அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

     

    இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

    அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.

    கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.

     

    இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார். 

    • அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி நாடு வழி நடத்தப்பட வேண்டு என கூறியவர் சாவர்க்கர்.
    • நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    மக்களவையில் இன்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் சாசனம் உலகிலேயே மிக நீண்ட காலம் எழுதப்பட்ட அரசியல் சாசனம் என்று மக்கள் கூறுகின்றனர்.

    குறிப்பிட்ட சிந்தனைகளையும், குறிப்பிட்ட சித்தாந்தங்களையும் உள்ளடக்கியது தான் நமது அரசியல் சாசனம்.

    அரசியல் சாசனத்தை திறந்தால் அதில் அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் குரல்களையும், சிந்தனைகளையும் கேட்க முடியும்.

    இந்த சிந்தனை எல்லாம் நமது நாட்டின் ஆழமான பாரம்பரியத்தில் இருந்து வந்தது.

    அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் வெவ்வேறு வடிவங்களின் ஒரே சிந்தனை தான்.

    அரசியல் சாசனத்திற்கு பதிலாக மனு ஸ்மிருதி நாடு வழி நடத்தப்பட வேண்டு என கூறியவர் சாவர்க்கர்.

    உங்கள் தலைவரின் வார்த்தைகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக நீங்கள் பேசும்போது உங்கள் தலைவரான சாவர்க்கரை அவமதிக்கிறீர்கள்.

    என்னுடைய முந்தைய உரையில் மகாபாரத குருஷேத்திர போர்களை பற்றி குறிப்பிட்டேன். இந்தியாவில் இன்று அத்தகைய போர் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு பற்றி கேட்டால் பெரியார் என்று சொல்லுவோம்.

    நாட்டை நீங்கள் விரும்பியபடி வழிநடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

    1000 ஆண்டுகளுக்கு முன்பு 4 வயது குழந்தை ஒருவன் அதிகாலையில் எழுந்து தவம் செய்து கொண்டிருந்தான். நான் பல ஆண்டுகளாக கடுமையாக தவம் செய்கிறேன். என்னை குருவாக்குங்கள் என்று அந்த சிறுவன் துரோணாச்சார்யாவிடம் கூறினார். ஆனால், நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர் அல்ல என்று துரோணாச்சாரியார் அந்த சிறுவனை நிராகரித்தார்.

    சிறுவன் மீண்டும் காட்டுக்குச் சென்று தன்னுடைய தவத்தை தொடர்ந்தான்.

    பாண்டவர்களும், துரோணாச்சாரியாரும் காட்டை விட்டு சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர்களை பார்த்து குறைத்தது.

    துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவனின் விரலை வெட்டினாரோ, அதேபோல நீங்களும் இந்த தேசத்தின் விரலை வெட்டிவிட்டீர்கள்.

    அதானிக்கு தாராவியை தாரைவார்த்து விட்டீர்கள். தாராவி பகுதியில் உள்ள சிறு வணிகர்களின் விரல்களை வெட்டி விட்டீர்கள்.

    நாட்டில் உள்ள விமானங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு நிறுவனங்களை அதானிக்கு கொடுத்து விட்டீர்கள்.

    அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களின் விரல்களை துண்டித்து விட்டீர்கள்.

    நாட்டில் 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடைபெற்றுள்ளது. வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் விரல்களை துண்டித்துவிட்டீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.
    • இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்றைய மக்களவை கூட்டத்தில் அரசியலைப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றிய நிலையில் அவரைத் தொடர்ந்து வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

    தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் கண்ட பிரியங்கா வயநாடு இடைத்தேர்தலில் வென்று முதல் முறையாக மக்களவையில் ஆற்றும் கன்னி உரை இது.

    அதன்படி மக்களவையில் பிரியங்கா காந்தி தனது முதல் உரையில்,

    நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் கவசம், நீதி, ஒற்றுமை, பேச்சு சுதந்திரம் உரிமை ஆகியவற்றின் கவசம். ஆனால் 10 ஆண்டுகளில், ஆளும் தரப்பு இந்த கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது வருத்தமளிக்கிறது.

    அரசியல் சட்டம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதியளிக்கிறது. குறுக்கு வழியில் நுழைவது, தனியார்மயமாக்கல் மூலம், இந்த அரசு இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயல்கிறது.

    தேர்தல் முடிவு வேறு மாதிரி இருந்திருந்தால் அரசியல் சட்டத்தை மாற்றும் பணியை அவர்கள் தொடங்கியிருப்பார்கள். நாட்டின் அரசியலமைப்பை இந்த நாட்டு மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல்களில் அறிந்து கொண்டதால்தான் அவர்கள் அரசியல் சாசனத்தைப் பற்றித் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள் என்பதே உண்மை. 

     கிட்டத்தட்ட தோல்வியடைந்த நிலையில், இந்த தேர்தல்களில் வெற்றி பெற்றதால்தான் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய விவாதங்கள் இந்த நாட்டில் வேலை செய்யாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

    எவருடைய பெயரை [நேரு] நீங்கள் பேசத் தயங்குகிறீர்களோ, அவர் ஏற்படுத்திய HAL, BHEL, SAIL, GAIL, ONGC, NTPC, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும், ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்புவதில் அவரது பங்கு ஒருபோதும் மறைக்க முடியாதது.

    எல்லாப் பழியையும் நேரு மீது சொல்லும் நீங்கள் ஏன் நிகழ்காலத்தைப் பற்றி பேசவில்லை? விவசாயச் சட்டங்கள் அதிகாரம் படைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டவை. அரசு அதானிக்கு சாதகமாக உள்ளது.

    அரசியல் சட்டம் தங்களை பாதுகாக்கும் என்று மக்கள் நம்பினர், ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஒரு நபரைக் [அதானியை] காப்பாற்ற 1.4 பில்லியன்[ 140 கோடி] மக்கள் புறக்கணிக்கப்படுவதை நாடு கவனித்து வருகிறது. 

    • வருகிற 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.
    • பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மதகுரு ஜாக்கி வாசுதேவ்,

    உலகிற்கு ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக இருக்க நாம் விரும்பும் போது, இந்திய பாராளுமன்றத்தில் இடையூறுகள் ஏற்படுவதைக் காண்பது வருத்தமளிக்கிறது.

    இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள், வேலை வாய்ப்பை வழங்குபவர்களை அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளாகக்கூடாது.

     

    முரண்பாடுகள் இருந்தால், அதை சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு உரிய முறையில் அதற்கு தீர்வு காண வேண்டும் ஆனால் அவர்களை அரசியல் கால்பந்தாக பந்தாடக்கூடாது.

    மிக முக்கியமாக, இந்திய வணிகங்கள் செழிக்க வேண்டும்.பாரதம் பவ்ய பாரதமாக மாறுவதற்கான ஒரே வழி இதுதான்என்று தெரிவித்துள்ளார். 

    • அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
    • தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மோடி - அதானி கார்டூன் அச்சிடப்பட்ட பையுடன் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து போராட்டம் நடத்தினர்.

    இதற்கு முன்னதாக மோடியும் அதானியும் ஒன்று தான் என்ற வாசகத்தை காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தங்களது சட்டைக்கு பின்னால் அச்சிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கனிமொழி நோட்டீஸ்.
    • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கியது.

    அதானி குழும விவகாரம், உ.பி. கலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    மேலும் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, சபைக்கு அதன் சொந்த மரியாதை, உயர்தரம், கண்ணியம் உள்ளது. அவற்றை யாரும் தாழ்த்த முயற்சிக்க வேண்டாம். நாம் அனை வரும் சபையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்.

    ஆனால் சில நாட்களாக நல்லதல்லாத சில விஷயங்கள் நடந்ததை நான் கண்டேன். இந்த சம்பவங்களில் மூத்த தலைவர்கள் கூட பங்கேற்றது கவனிக்கத்தக்கது, இது நல்லதல்ல என்றார்.

    பின்னர் கேள்வி நேரத்தை பிர்லா தொடங்கினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை எழுப்ப முற்பட்டனர்.

    அவர்களிடம் சபாநாயகர் சபையை சாதாரணமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

    ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சபையில் தொடர்ந்து அமளி நிலவியதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    அதேபோல் மேல்-சபை இன்று கூடியதும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். இரு தரப்பு எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல்-குழுப்பம் நிலவியது. இதனால் மேல்-சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.

    மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

    இந்த நிலையில் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக குறித்து பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. பாராளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் வழங்கினார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாக்கூரும் நோட்டீஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக இன்று காலை பாராளுமன்றத்தின் பிரதான குழு அறையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்தது.

    இதில் பிரியங்கா காந்தி உள்பட எம்.பிக்கள் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் காங்கிரஸ் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


    பிரதமர் மோடி, அதானி ஒன்றாக இருக்கும் புகைப்படம் பொறித்த பையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.பிக்களும் அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் அதானி விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையே பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், மாநிலங்களவையில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்களும், மக்களவையில் உள்ள சில காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் பல கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.

    ராகுல் காந்திக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் மக்களின் வலி மற்றும் பிரச்சனைகளை அவரால் உணர முடியவில்லை. ஆனால் அதை மற்ற எம்.பி.க்கள் உணருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    ×