என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Corporation"
- பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.
- மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்?
மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூலில் சுமார் ரூ.150 கோடிக்கும் அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மதுரை மேயர் திருமதி. இந்திராணி பொன் வசந்த் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கடும் அதிர்ச்சியையும் பல்வேறு குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.
திமுக அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கக் கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும், மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால், சிறிய மீன்களைப் பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாகக் குளறுபடிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளான கோவை, நெல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எந்தளவிற்கு தோல்வியடைந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டு.
மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க மேயர்கள் ராஜினாமா, புது மேயர் பொறுப்பேற்பு எனத் திமுக அரசு என்னதான் நாடகம் ஆடினாலும், மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியே வரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார்.
- தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த இந்திராணி (வயது 45) இருந்து வந்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மேயர் இந்திராணி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் கூறியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துணை மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் துணை மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமாவுக்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய மேயர் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.
மதுரை:
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.
பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.
அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.
இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.
- மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம்
- தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது
இந்நிலையில், மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
- 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
- மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும்.
மதுரை:
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் கடைசி இடமான 40-வது இடத்தை பிடித்தது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகரின் தூய்மை பணிகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. இது ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப டுத்தி வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்களின் பட்டியல் கடந்த 2024-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது மதுரை மாநகரில் தூய்மை பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் 1,152லிருந்து 749 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குப்பைகள் பெறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல், கட்டுமான பகுதிகளில் தூசியை குறைக்கும் பொருட்டு பச்சை நிற துணியை பயன்படுத்தாத கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கட்டுமான பகுதிகளில் பச்சை நிற துணியை பயன்படுத்துவதை மாநகராட்சி கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல், மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குப்பைகள் நிரம்பி வழியும்போது, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்ற ஏதுவாகிறது. இதே போல் மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை கண்காணிக்க நகரம் முழுவதும் 200 கியூ.ஆர். கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அதிகம் போடப்படும் இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இந்த கோலங்கள் போடப்படும் என்றார்.
மாநகராட்சியின் இந்த முயற்சிகள் குறித்து நேதாஜி ரோட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு பயன் அளித்தாலும், முழுமையாக பயன் தரவில்லை என்பதே உண்மை. ரங்கோலி கோலங்கள் போடப்படும் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறைந்துள்ளது. எனினும் சிலர் அவற்றை மதிக்காமல் தொடர்ந்து குப்பைகள் போடப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும் என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இந்த முயற்சி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தட்டது. அதே போன்ற முறை இங்கு முயற்சிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி. எனினும் குப்பைகள் அகற்றப்படுவதை முறைப்படுத்தாமல் இது போன்ற முயற்சிகள் வீணாகவே முடியும். ஏனெனில் மதுரை மாநகராட்சியின் பல வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதில்லை. ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் அனுப்பப்பட்டால் அவர்களில் 2 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் என்றார்.
- திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது.
- அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு பணக்காரர்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது துரோகம்.
பா.ம.க. தலைவர் அன்புணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சியில் கட்டிடங்களுக்கு சொத்துவரியை நிர்ணயம் செய்வதில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டை அதிர வைத்திருக்கும் இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டிய தமிழக அரசு, அதை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை மாநகராட்சியின் 2, 3, 4, 5 ஆகிய மண்டலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மண்டலத் தலைவர்களான சரவண புவனேஷ்வரி, முகேஷ் சர்மா, பாண்டி செல்வி, சுவிதா மற்றும் நிலைக்குழு தலைவர்கள் மூவேந்திரன் (நகர அமைப்பு), விஜயலட்சுமி (வரி விதிப்பு) ஆகியோர் கட்டாயப்படுத்தி பதவி விலக வைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி மேயரின் தனி உதவியாளரும் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த முறைகேடு தொடரபாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில் குமரன் உள்ளிட்ட 8 பேர் மதுரை மாநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு பதிலாக ஊழலை மூடி மறைப்பதில்தான் திமுக அரசு ஆர்வம் காட்டுகிறது.
திமுக ஆட்சிக்கு பிறகு 175% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அப்பாவி மக்களிடம் சுரண்டி எடுக்கும் திமுக அரசு, பணக்காரர்களிடம் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு சொத்துவரியை குறைத்து நிர்ணயிப்பது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பது மட்டுமின்றி மன்னிக்க முடியாத குற்றமும் ஆகும்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழலை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மாநகரக் காவல்துறை விசாரித்தால் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மதுரை மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
- அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை சிறப்பு சலுகை வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏற்படுத்தும் என்றும், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- பதில் மனு தாக்கல் குறித்து மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
- அபராத தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் அல்லது உரிய இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இறுதிக்கட்ட விசாரணைக்காக இந்த ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா? இல்லையா? அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா..? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால் இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.
மதுரை மாநகராட்சி கமிஷனரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரையில் உள்ள மழலை இல்லம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
மதுரையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கலாம்.
மதுரை மாநகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர் எவ்விதமான தாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையாக ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நிலையில், சான்றிதழை வழங்க வேண்டும்.
சிறார் நீதிச்சட்டம், அவர்களின் பாதுகாப்பையும், உரிமையும் உறுதி செய்வதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையத்திற்கு சான்றுகளை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை:
மேலவாசல் பகுதியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எயந்திரத்தினையும், மேல வாசல் முதல் திடீர் நகர் வரையுள்ள மழைநீர் வடிகாலில் ரூ.6.05 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சிலாப்புக்கள் அமைக்கப்பட்ட பணியினையும், பேச்சியம்மன் படித்துறை கோவில் மற்றும் தளவாய் அக்ரஹாரம் பகுதியில் உள்ள மழைநீர் வாய்க்காலில் ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு மூடிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கமிஷனர் ஆய்வு செய்தார்.
வடக்கு மாசி வீதியில் ரூ.28.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்து சாரதா நவீன ஸ்கேன் மையத்தினையும் ஆய்வு செய்தார்.
மேலும் தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது பள்ளியின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சுற்றுச்சுவர் அமைத்து தருமாறும், மாணவிகள் மிதிவண்டியினை நிறுத்துவதற்கு ஏதுவாக மேற்கூரை அமைத்து தருமாறும் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சுவர், பேவர் பிளாக் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதையும், ரெயில் நிலையத்தில் இருந்து டவுண்ஹால்ரோடு வழியாக திருமலை நாயக்கர் மகால் வரை ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடைபாதை பேவர் பிளாக் சாலை பணியினையும் ஆய்வு செய்தார்.
டவுண் ஹால் ரோடு பகுதியில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கினை உடனடியாக சரி செய்யுமாறும், மழை நீர் வாய்க்காலில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணியினை விரைவில் முடிக்குமாறு உத்தர விட்டார்.
ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம்குமார், செயற்பொறியாளர்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மதுரை மாநகராட்சி சார்பில் கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களாக 4660 கிலோ அரிசி, 800 கிலோ பருப்பு, 175 கிலோ கோதுமை, 839 சோப்புகள், 5240 நாப்கின்ஸ், 1704 பெட்சீட்கள், 1027 நைட்டீஸ், 1191 கைலிகள், 290 வேட்டிகள், 1336 துண்டுகள், 7810 மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள், 25 சில்வர் தட்டுகள், 30 சில்வர் பானைகள், 1 சாக்கு பொரிகடலை, 2 சாக்கு உப்பு, 2 சாக்கு புளி, 15 பண்டல் தலைவலி மருந்துகள், 5 தலையனைகள், 25 ஸ்வெட்டர்கள், 50 பாக்கெட் மாஸ்க்குகள், 4262 பாக்கெட் பிஸ்கட்ஸ் மற்றும் ரஸ்க் பொருட்கள், 3 பண்டல் மருந்து பொருட்கள் என 43 வகையான சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் 2 லாரிகள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் மதுரை மாநகராட்சியில் இருந்து 400 மூடைகள் கொண்ட 10 டன் பிளீச்சிங் பவுடர் 2 டிப்பர் லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் மணி வண்ணன், நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, நாராயணன், பிரேம்குமார், உதவி ஆணையாளர் (வருவாய்) ரங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #KeralaFloods #KeralaRain






