என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
    X

    மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

    • மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.

    மதுரை:

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.

    கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.

    பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.

    அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.

    இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.

    இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.

    உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.

    முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.

    Next Story
    ×