என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Mayor"

    • தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது.
    • அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரை முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. 54ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    31 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், சாமானியர்களுக்கும் பட்டியல் இனத்தவர்க்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க.

    மகளிருக்கும் சம உரிமை கொடுத்து, திறமைக்கேற்ப பதவிக் கொடுத்து அழகு பார்த்த கட்சி அ.தி.மு.க. ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம். ஆனால் தி.மு.க.வில் பிரிந்த அ.தி.மு.க. இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது.

    எங்கள் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்.

    வைகை கரையில் சாலைகள் அமைத்து அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைப் படைத்தோம். தி.மு.க. ஆட்சியில் கலைஞர் நூலகம், ஏறு தழுவுதல் அரங்கம் இதை தான் சாதனையாக மதுரைக்குச் சொல்கிறார்கள்.

    170 கோடியில் கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்தின் திட்டத்தை வடிவமைத்தது அ.தி.மு.க. அரசு. அதனை விரைவுப்படுத்த முடியாமல், தி.மு.க. ஆட்சியில் பாலப்பணி இன்னும் நிறைவடையவில்லை.

    மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி, 200 கோடி மாநகராட்சி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தோம். கல்யாண மண்டபங்களுக்கும் வீடுகளுக்கான சொத்து வரியை விதித்து ஊழல் செய்தது தி.மு.க.

    இன்று ஊழல் வழக்கில் மேயர் இந்திராணி ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் மதுரை மாநகராட்சியில் நடந்து இருக்கிறது. இந்த புகாரில் மேயர் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும் மதுரையில் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது தி.மு.க. 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து 2 மாதங்களாகி விட்டது. 69 தி.மு.க. கவுன்சிலர்கள் இருந்தும், தி.மு.க.வால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை.

    இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சியாக தி.மு.க.. இருக்கிறது. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்.

    தி.மு.க. 2026-ல் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. நாங்கள் கூட்டணிக்காக அலையவில்லை. அ.தி.மு.க. எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை.

    எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம்.

    அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பன் என்றால் நண்பன். நண்பனுக்கு உயிரையும் தோளையும் கொடுப்போம்.

    ஆனால் அதே தோழன் காதை கடித்தால் தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம். இது தான் அ.தி.மு.க. வரலாறு. இது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார்.
    • தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது.

    மதுரை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த இந்திராணி (வயது 45) இருந்து வந்தார். மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மேயர் இந்திராணி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் கூறியபோது, குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்து இந்திராணி கடிதம் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக துணை மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் துணை மேயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமாவுக்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் ராஜினாமா ஏற்கப்பட்டது. புதிய மேயர் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    • மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர்.
    • அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி சொத்துவரி முறைகேடு புகாரில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த 5 மண்டல தலைவர்கள் மற்றும் 2 நிலை குழு தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் கருப்பு சேலை அணிந்திருந்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் சோலைராஜா தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சண்முகவள்ளி, பைக்காரா கருப்புசாமி, ரூபிணி குமார், நாகஜோதி, ரவி, மாயத்தேவன் ஆகியோர் எழுந்து நின்று மேயர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கிளம்பியது. இதனால் மாமன்ற கூட்டம் தொடங்கியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சோலை ராஜா தலைமையில் கூட்ட மன்ற அரங்கின் மையப்பகுதிக்கு வந்து மேயர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    அப்போது மேயர் இந்திராணி பேசுகையில், இது மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய இடம். அ.தி.மு.க.வினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள், கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வந்து கபட நாடகம் ஆட வேண்டாம் என்று தெரிவித்தார்.

    மேயரின் பேச்சுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்களும் கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. கவுன்சிலர்களை உடனடியாக வெளியேற்றும்படி மேயர் இந்திராணி மாமன்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாமன்ற அறைக்கு வெளியே இருந்த போலீசார் உள்ளே வந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினர்.

    வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். சொத்துவரி முறைகேட்டில் தொடர்புடைய மண்டல தலைவர்கள் பதவிகளை மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மேயர் இந்திராணியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா தெரிவித்தார்.

    இதனிடையே மாநகராட்சி சொத்து வரி விவகாரத்தில் மண்டல தலைவர் பதவியை ராஜினாமா செய்து மேயரிடம் கடிதம் அளித்த மண்டல தலைவர்கள் வாசுகி, சுவிதா, பாண்டிச்செல்வி, சண்முக புவனேஸ்வரி, முகேஷ் சர்மா, நிலைகுழு தலைவர்கள் மூவேந்திரன், விஜயலட்சுமி ஆகியோரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஒப்புதல் அளித்த தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×