search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிக்கை"

    • இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
    • இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    ▪️ தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ பணிப் பலன்கள், மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை முறையாக பெற்று வழங்க அரசு நடவடிக்கை.

    ▪️ மணிமுத்தாறு அருகே அரசு சார்பில் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள 240 வீடுகளை தொழிலாளர்களுக்கு வழங்க அரசு தயராக உள்ளது. இலவச வீட்டு மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை.

    ▪️ ₹11.54 லட்சம் மதிப்பு கொண்ட ஒரு வீட்டுக்கு அரசு ₹8.5 லட்சம் மானியமாக வழங்குகிறது. மீதம் ₹3.04 லட்சத்தை மட்டும் பயனாளிகள் செலுத்த வேண்டும். கூடுதல் மானியம் அளித்து வீடுகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

    ▪️ 55 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் மற்றும் நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் ஏற்பாடு செய்ய அரசு தயார்.

    ▪️ இளைஞர்களுக்கு திறன் பயிற்சியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ▪️ சிறு கால்நடைப் பண்ணை அமைக்க அல்லது கறவை மாடுகள், ஆடுகள் வாங்கிட வட்டியில்லாத கடன் வழங்க நடவடிக்கை.

    ▪️ குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பிய பள்ளியில் சேர்க்கவும், விடுதிகளில் தங்க வைத்து படிக்க வைக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களின் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை அவர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றி வழங்க ஒற்றைச் சாரள முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

    ▪️ தொழிலாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும் 'பர்மா பாம்பே டிரேடிங் கம்பெனி' நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துதுறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
    • ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.

    போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    • மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    • மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.

    • மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.

    • ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல், தக்க மேல் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

    • தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.
    • பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 4.83 விழுக்காடு. அதாவது யூனிட்டுக்கு 20 காசுகள் முதல் 55 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து எந்த கவலையும் இல்லாமல் இரு ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதே அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு குறைந்தது 6% அல்லது அந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் பணவீக்கம். இவற்றில் எது குறைவோ, அந்த அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்த ஆணைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நான். இனிவரும் ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று வலியுறுத்தினேன். அதையும் மீறி தமிழக அரசும், மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏழை மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடிய தாக்குதலாகும்.

    பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால், அதை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களில் 80%க்கும் கூடுதலானவர்கள் அமைப்புசாரா தொழில்களை நம்பியிருப்பவர்கள் ஆவர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், அவர்களின் வருவாய் பணவீக்கத்திற்கு இணையாக உயருவதற்கு வாய்ப்பே இல்லை. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஓராண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கே முழுமையாக வழங்கப்படவில்லை.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி கடந்த 100 மாதங்களுக்கு மேலாக உயர்த்தப்படவில்லை. இத்தகைய சூழலில் பணவீக்கத்திற்கு இணையாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது ஏழைகளின் வாழ்நிலையை அறியாத மன்னர் வாழ்க்கையை வாழும் ஆட்சியாளர்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.

    மின்சாரக் கட்டண உயர்வும். அது அறிவிக்கப்பட்டுள்ள நேரமும் தமிழ்நாட்டு மக்களை ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக கருதுகின்றனர் என்பதையே காட்டுகிறது. ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கான மின்கட்டண உயர்வை அதற்கு முன்பாகவே அறிவித்திருக்க வேண்டும். ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருந்து அறிவித்திருப்பதிலிருந்தே அவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ள முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இதிலிருந்து தமிழக அரசும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் தப்ப முடியாது.

    ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்பதால் அந்தக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மே மாதத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டு மக்கள் நலனின் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வீடுகளுக்கான 2.18% மின்கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டதைப் போல இப்போதும் ஏற்றுக் கொண்டிருக்கலாம்; இல்லாவிட்டால் ஜூன் 10-ஆம் நாள் விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே கட்டண உயர்வை அறிவித்திருக்கலாம். ஆனால். மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு கட்டண உயர்வை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு இம்முறை கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ளாததும், விக்கிரவாண்டி தேர்தல் முடிவடைந்த பிறகு கட்டண உயர்வை அறிவிப்பதும் மக்களை அரசு எந்த அளவுக்கு ஏமாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இனியாவது அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

    2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. 2022-23ஆம் ஆண்டின் 7 மாதங்களில் மட்டும் மின்சார வாரியத்திற்கு ரூ.23.863 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. அதற்கு முன் மின் வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022-23ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10.000 கோடியாக அதிகரித்தது. 2023-ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், கடந்த ஆண்டும் மின்சார வாரியம் கடும் இழப்பை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மின்வாரியத்தின் இழப்புக்கு அங்கு நிலவும் ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடுகளும் தான் காரணம் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. அதை சரி செய்யாமல் மின்கட்டணத்தை மட்டும் உயர்த்துவது ஓட்டை வாளியில் நீர் பிடிப்பதற்கு ஒப்பான செயல் ஆகும்.

    மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.000 மிச்சமாகும் வகையில் மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் 3 முறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.15,000 கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலையை திமுக அரசு உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை ஏற்பார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய. பகுதி. நகர. பேரூர். வட்ட, கிளை நிர்வாகிகளும், இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நுகர்வோர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்பர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
    • ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த வாரம் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

     

    நிகழ்ச்சியில் 88,000 பேர் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 2.5 லட்சம் பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

    அந்த அறிக்கையில், அனுமதிக்கபட்டத்தை விட அதிகம் பேர் கலந்துகொண்டதே இந்த கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி முடியும் தருவாயில் போலே பாபா ஏறிச் சென்ற காரில் இருந்து கிளம்பிய புழுதியை எடுப்பதற்காக மக்கள் நெறுக்கிப்பிடித்துள்ளனர்.

    அவ்வாறு முன்னேறியவர்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிடித்துத் தள்ளியுள்ளனர். இதனால் பலர் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். விழுந்தவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர், " தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ஹத்ராஸ் விபத்து குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு, வரும் ஜூலை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

     

    • பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.
    • சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு எந்த சமூகப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.

    கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2&ஆம் நாள் பிறப்பித்த ஆணையில் ''கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை சமூகநீதிக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 3-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,'' பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்" என்று கூறியிருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தமது ஆணையை திரும்பப் பெற்றுள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம், ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்த 22.05.2024-ஆம் தேதியிட்ட உயர்கல்வித்துறை அரசாணை எண் 110-இன்படி, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

     

    அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் சமூகநீதிக்கு துரோகம் செய்த திமுக அரசு, பொதுவெளியில் அம்பலப்பட்டதால் அதன் தவறை இப்போது திருத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்தது ஏன்? அவ்வாறு செய்ய அவரைத் தூண்டியது யார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

    சமூக நீதிக்கு துரோகம் இழைக்க முயன்றதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குனரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கி விட்டு, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.
    • ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

    இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், மாடு வளர்ப்போர் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இன்று ஒரே நாளில் நெல்லை மாநகர் பகுதிகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

    • இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
    • இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.

    பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று  பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.

     

     

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.
    • தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனி நபர் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு [Human consumption expenditure survey -HCES ] 2022-23 அறிக்கை வெளியாகியுள்ளது. அதனபடி இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.

    தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில் ஒரு சில மாநிலங்களே உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளதாகவும், அதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளதாகவும் அறிக்கையில் குறியப்படடுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகர்ப் புறத்தில் சராசரியாக ஒருவர் ரூ. 7,630 செலவழிக்கிறார். அதுவே கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆக உள்ளது. இந்திய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் 44 சதேவீதமாக மட்டுமே உள்ளது.

     

    இதற்கு முக்கிய கரணம் தமிழகத்தில் நாகபுரத்துக்கு ஈடாக கிராமப்புரத்தில் உள்ள இளைஞர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதால் அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எனவே தமிழகத்தில் நகர்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினம் உள்ளதாகவே பார்க்கமுடிகிறது. மேலும் கலாசார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    உதாரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை இதற்கு முந்தைய காலத்தில் குறைவாகவே இருந்த நிலையில் தற்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுவிட்டனர் என்பதை நாம் பார்க்கலாம்.

    குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது கண்கூடு. இதுதவிர்த்து இந்த செலவின அறிக்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை நிலையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்க்கது.

    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
    • இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14&ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். உங்களில் ஒருவராக பல பத்தாண்டுகளாக களமாடி வரும் அவரைப் பற்றி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் அதிகாலை 12.01 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாத காவல்துறை, சாலை மறியல் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும், என்னுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினரையும் கைது செய்து விட்டு, மனித வேட்டையை தொடங்கியது.

    பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது. அப்போதும் கொலைப்பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.

    இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13-ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகி விட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது, தாங்களாக முன்வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து விவாதத்தின் போது நான் விடுத்த சவாலில் வெற்றி பெறும் வகையில், 2020-ஆம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50% இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.

    வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், அதைக் கூட நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியாவது உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்ய மனமில்லாதவர் தான் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழித்து தான் 2023 ஜனவரி 12-ஆம் நாள் வன்னியர் உள் இடஓதுக்கீடு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டார். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 3 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. காரணம்... வன்னியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருப்பது வன்மம் தானே தவிர, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல.

    வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்வது இது முதல் முறையல்ல. 1970-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையில், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது வன்னியர்களுக்கு மட்டும் 15%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்த மறுத்தது அப்போதைய முதலமைச்சர் கலைஞர். 1989-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுனர் ஆட்சியில் 12.12.1988-ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக வன்னியர்களுக்கு 16% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் 107 சாதிகளுடன் வன்னியர்களையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்து அடித்துக் கொள்ள வைத்தார் கலைஞர்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மூன்று முறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த மூன்று வாய்ப்புகளையும் சீர்குலைத்தது திமுக அரசுகள் தான். தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கே துரோகம் செய்த கட்சி தான் திமுக. ஏ.ஜி. என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கூட திமுகவுக்கு மனம் இல்லை. 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு ஈகியர்கள் 21 பேருக்கு நினைவு மண்டபம் கட்டும் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

    திமுகவின் வன்னியர் துரோகம் இத்துடன் நின்று விடவில்லை. திமுகவிலும் வன்னியர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலும், பின்னர் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுகவில் கோலோச்சிய செஞ்சி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் ஆகியோர் திமுகவில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்களுக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட திமுகவுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு திமுக இழைத்து வரும் துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுப் போராளிகளின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் துரோகத்திற்கு கணக்குத் தீர்ப்பதற்குமான களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். எத்தனை, எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் திமுக தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் நமது வலிமை அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    • இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பார்க்கப்படுவது நதிகள் இணைப்பு ஆகும்.
    • பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பதவியேற்றுள்ளார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ள நரேந்திர மோடிக்கும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் பா.ம.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

    உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஒரு நாடு முன்னேறுவதற்கு சீர்திருத்தம் தான் சிறந்த வழி என்ற நிலை ஏற்பட்டுள்ள சூழலில், பல்வேறு முதன்மையான சீர்திருத்தங்களை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கிறது.

    இந்திய வளர்ச்சிக்கான உந்து சக்தியாக பார்க்கப்படுவது நதிகள் இணைப்பு ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பாக்கிறது. காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நதிகள் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நரேந்திர மோடி 3.0 அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தடை விதித்தல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் திட்டத்திற்கு கேரள அரசு போடும் முட்டுக்கட்டைகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் புதிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கிடப்பில் போடப்பட்டிருந்த காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
    • தமிழக அரசு அதன் சொந்த நிதியில் காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான "நடந்தாய் வாழி காவிரி" திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் இருந்து காவிரியில் பெருமளவில் கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. பொதுமக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாழ்பட்டு போன காவிரியை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.


    காவிரியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 'காவிரியைக் காப்போம்' என்ற தலைப்பில் கடந்த, 2017-ம் ஆண்டு ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். புனித நதியாக போற்றப்படும் காவிரி, நச்சு நதியாக மாறி வருவதை நாம் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

    காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மத்திய அரசிடமிருந்து மானியமாகவும், இன்னொரு பகுதியை தமிழக அரசின் பங்களிப்பாகவும் கொண்டு தவிர மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் நிதிக்காக காத்திருக்காமல் தமிழக அரசு அதன் சொந்த நிதியில் காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

    • திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை முதல் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகியுள்ள நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

     

    அந்த அறிக்கையில்,

    திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

    சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும். ஒளியும் காட்டக் கூடியவை.

    இந்தியா வாழ்க. தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க! என்று தெரிவித்துள்ளார். 

    ×