search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்...
    X

    அதிகரிக்கும் சிசேரியன் பிரசவங்களும், தவிர்க்கும் வழிமுறைகளும்...

    • தற்போது 'சிசேரியன்' பிரசவங்கள் அதிகரித்து வருகிறது.
    • உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம்.

    கர்ப்பம் தரித்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சுகப்பிரசவம் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், தற்போது 'சிசேரியன்' எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் தவிர்ப்பதற்கான வழிகள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர் அர்ச்சனா கந்தசாமி.

    சுகப்பிரசவம்: கருப்பையில் வளரும் குழந்தை, உரிய காலத்தில் தாயின் இடுப்பு எலும்பைத் தாண்டி கர்ப்பப்பையைக் கடக்கும். பிறகு கர்ப்பப்பை வாயைக் கடந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதுவே சுகப்பிரசவம்.

    சிசேரியன்: குழந்தை வெளியேறும் இந்தப் பாதையில் தடை ஏற்படுதல், பிரசவத்தின் போது உடல் நலம் காரணமாக, தாய் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகுதல், உரிய காலத்தில் பிரசவ வலி வராமல் இருத்தல் போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை வெளியே எடுப்பார்கள். இதுதான் சிசேரியன்.

    தற்போது சிசேரியன் அதிகரிக்க காரணம் என்ன?

    தாமதமான திருமணம் மற்றும் குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுவ தால் 35 வயதுக்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிரசவத்தில் ஏற்படும் பிரச்சினையே சிசேரியன் அதிகரிக்கக் காரணம். இது தவிர கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல் காரணமாகவும் சிசேரியன் செய்ய நேரிடும்.

    சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை மருத்துவர்கள் எப்போது தீர்மானிக்கிறார்கள்?

    கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மருத்துவரால் முற்றிலுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. அதைப் பொருத்தே சிசேரியன் செய்வது திட்டமிடப்படுகிறது. அதே சமயம், கடைசி நேரத்தில் சிசேரியன் தேவைப்படும் சூழலும் ஏற்படும். இரட்டைக் குழந்தையாக இருந்தால் பெரும்பாலும் சிசேரியன் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இது, தாய் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது.

    முதல் குழந்தை சிசேரியன் மூலம் பிறந்தால், அடுத்த குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதா?

    முதல் குழந்தை பிறப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, கர்ப்பப்பையை குறுக்கே வெட்டி தையல் போட்டிருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருத்தரிக்கையில் சுகப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டு.

    சிசேரியனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    உடல் ஆரோக்கியமாக இருந்தால் சிசேரியனைத் தவிர்க்கலாம். யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி எப்போதும் அவசியம். உணவு முறையிலும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.

    Next Story
    ×