search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    அது என்ன வாடகைத்தாய் முறை? அறிந்து கொள்ளலாம் வாங்க...
    X

    அது என்ன வாடகைத்தாய் முறை? அறிந்து கொள்ளலாம் வாங்க...

    • குழந்தை பிறப்புக்கு வாடகைத்தாயை அமர்த்துவதில் பல்வேறு முறைகள் உள்ளன.
    • சில ஆண்டுகளாக வாடகைத்தாய் முறை பிரபலம் அடைந்து வருகிறது.

    அந்த காலத்தில் குழந்தை பாக்கியம் தாமதமாகும் பெண்கள், குழந்தை வேண்டி அரச மரத்தை சுற்றுவார்கள். சில தம்பதியர் வேறொருவரின் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார்கள். இது இன்னும் வழக்கத்தில் இருந்தபோதிலும், செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்பத்திரிகளையும், செயற்கை கருத்தரிப்பு மையங்களையும் பெண்கள் தற்போது நாடுகிறார்கள். ''தங்கள் குழந்தை, தங்கள் ரத்தம்'' என்ற உணர்வே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

    அத்துடன் 'பதிலித்தாய்' எனப்படும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கும் சமீப காலமாக அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.

    அது என்ன வாடகைத்தாய் முறை?...

    ''ஒரு பெண், விருப்பப்பட்டு முன் வரும் ஒரு தம்பதியின் குழந்தையை சுமந்து, அதை பெற்றெடுத்த பின் அந்த தம்பதியிடம் ஒப்படைக்கும் நடைமுறைக்கு பெயர்தான் வாடகைத்தாய் முறை'' என்று சட்டம் சொல்கிறது.

    எளிமையாக சொல்வது என்றால், பஸ் நிலையத்திலோ, ரெயில் நிலையத்திலோ நம்மால் தூக்கிச்செல்ல முடியாத சுமையை சுமந்து செல்ல கூலித் தொழிலாளியை அமர்த்துகிறோம் அல்லவா? அதுபோல் தங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத தம்பதியர், தங்களுக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க ஒரு பெண்ணை அமர்த்திக்கொள்வதற்கு பெயர்தான் வாடகைத்தாய் முறை.

    இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ஆஸ்பத்திரிகள் ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

    * குழந்தை பிறப்புக்கு வாடகைத்தாயை அமர்த்துவதில் பல்வேறு முறைகள் உள்ளன. ஒரு பெண்ணின் கருப்பை கருவை தாங்கும் சக்தியின்றி பலவீனமாக இருந்தால், அந்த பெண்ணின் கருமுட்டையையும், அவரது கணவரின் உயிரணுவையும் எடுத்து சேர்த்து கருவை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட நாளில் வாடகைத்தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணின் கருப்பையில் வைத்து விடுவார்கள். அங்கு குழந்தை வளரும். அந்த பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்ததும், அவரது வேலை முடிந்துவிடும். இந்த முறையில் அவர் குழந்தையை சுமந்தவர் மட்டுமே ஆவார். மரபியல் ரீதியாக அவருக்கும் குழந்தைக்கும் எந்த உறவும் கிடையாது. கருவை சுமக்கும்போது மட்டுமே குழந்தைக்கு தாயாக இருப்பார். தேவைப்பட்டால் சில காலம் அவர் அந்த தம்பதியினருடன் இருந்து குழந்தைக்கு பாலூட்டுவார். அவ்வளவுதான்.

    * பெண் மலட்டுத்தன்மையுடன் இருந்தால், டாக்டர்கள் அவரது கணவரின் உயிரணுவையும் வாடகைக்தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணின் கருமுட்டையையும் சேர்த்து கருவை உருவாக்குவார்கள். பின்னர் அதை வாடகைத்தாய் தன் வயிற்றில் சுமந்து, குழந்தையை பெற்றுக்கொடுப்பார்.

    * இதேபோல் சம்பந்தப்பட்ட தம்பதியரில் கணவரின் உயிரணு பலவீனமாக இருந்தால் அந்த பெண்ணின் கருமுட்டையையும் வேறொரு ஆணின் உயிரணுவையும் சேர்த்து கருவை உருவாக்கி வாடகைத்தாயின் கருப்பையில் வைத்து அவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

    * இது தவிர இருவருமே குழந்தை பெறும் தகுதி இல்லாதவர்கள் என்றாலும் வேறொரு ஆணிடம் இருந்து உயிரணுவை பெற்று வாடகைத்தாயின் கருமுட்டையுடன் சேர்த்து செயற்கை முறையில் கருவை உருவாக்கி அவரது கருப்பையில் வைத்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

    * இதேபோல் திருமணம் செய்து கொள்ளாத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ கூட இப்படி வாடகைத்தாய் மூலம் தங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும்.

    இந்த இரு முறைகளில் வாடகைத்தாயாக இருக்கும் பெண் மரபியல் ரீதியாகவும் குழந்தைக்கு தாயாக இருப்பார்.

    வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண்ணுக்கு சம்பந்தப்பட்ட தம்பதியர் தங்கள் தகுதிக்கு ஏற்ப பணம் கொடுக்கலாம், பிற உதவிகள், வசதிகள் செய்து தரலாம். எதுவுமே கொடுக்காமலும் இருக்கலாம். சில நாடுகளில் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம்; செல்லுபடி ஆகாது.

    வாடகைத்தாயாக இருக்கும் பெண்கள் பணத்துக்காக குழந்தை பெற்றுக்கொடுத்தாலும் உளவியல் ரீதியாக அவர்கள் சில பிரச்சினைகளை சந்திப்பது உண்டு. தான் 10 மாதங்கள் சுமந்து பெற்ற குழந்தை எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறதே! அதன் முகத்தை கூட பார்க்க முடியவில்லையே! என்ற ஏக்கம் அவர்களுக்கு ஏற்படுவது உண்டு.

    உடல் ரீதியாகவோ அல்லது மருத்துவ ரீதியாகவோ ஒரு பெண் கருத்தரித்து குழந்தை பெற முடியாத நிலையில் இருந்தால், அதை காரணம் காட்டி கணவன் அவளை விவாகரத்து செய்துவிடாமல் தடுப்பதற்காக பழங்காலத்திலேயே வாடகைத்தாய் முறை இருந்ததாக பாபிலோனிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வாடகைத்தாய் முறை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

    இந்தியாவில் சமீபத்திய சில ஆண்டுகளாக வாடகைத்தாய் முறை பிரபலம் அடைந்து வருகிறது.

    இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான செலவு குறைவு என்பதால், வெளிநாட்டினர் ஏராளமானோர் இங்கு வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துக்கொண்டே போனது. நிலைமை மோசமானதால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டினருக்கு இனி சுற்றுலா விசா வழங்கப்படமாட்டாது என்று கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

    குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த வாடகைத்தாய் முறையை பேராசை கொண்ட சில டாக்டர்களும், இடைத்தரகர்களும் பணம் பறிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டதால், அதை தடுக்கும் பொருட்டு வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * வாடகைத்தாயாக உள்ள பெண்ணின் வயது 25 முதல் 35 வரை இருக்கவேண்டும்.

    * சம்பந்தப்பட்ட தம்பதியின் நெருங்கிய உறவு பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும். அதற்காக 3 முறை முயற்சி செய்யலாம்.

    * வாடகைத்தாய் கர்ப்பம் தரிப்பதற்கு முன், பின் என 16 மாத கால காப்பீடு செய்ய வேண்டும். மருத்துவ செலவு கொடுக்கலாம்.

    * ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.

    * ஒரு பெண் பணத்துக்காக வாடகைத்தாய் ஆக முடியாது. வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு இந்தியாவில் தடை உள்ளது.

    * வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விரும்பும் தம்பதி இந்தியராக இருப்பதோடு, திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கவேண்டும்.

    * தம்பதியில் மனைவியின் வயது 23-ல் இருந்து 50-க்குள் இருக்க வேண்டும். கணவரின் வயது 26-ல் இருந்து 55-க்குள் இருக்க வேண்டும்.

    * வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி அல்லது அவர்கள் இருவரில் ஒருவர் குழந்தைபேறுக்கு தகுதியான உடல்நிலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

    * தம்பதிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக்கூடாது. தத்துக்குழந்தையோ அல்லது ஏற்கனவே வாடகைத்தாய் மூலம் பெற்றுக்கொண்ட வேறு குழந்தையோ இருக்கக்கூடாது.

    * தம்பதிக்கு இயற்கையான முறையில் பிறந்த குழந்தை இருந்து அது குணப்படுத்த முடியாத தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ, உடல் நலம் மனநலம் ஆகியவற்றில் குறைபாடு இருந்தாலோ, மாவட்ட மருத்துவ வாரியத்திடம் அதற்கான சான்றிதழ் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.

    * திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், பிரிந்து வாழும் தம்பதி, தன் பாலின உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், ஏற்கனவே குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.

    * வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ஆஸ்பத்திரிகள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.

    * வாடகைத்தாய் முறையை வணிக ரீதியாக பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

    இதுபோன்று பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

    இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. அப்பாவி ஏழை பெண்களை வாடகைத்தாயாக பயன்படுத்தி, குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதிகளிடம் இருந்து ஆஸ்பத்திரிகள் பணம் கறப்பது குறையும் என்று சட்ட திருத்தத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.

    ''நெருங்கிய உறவு பெண்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க முடியும் என்பது உளவியல் ரீதியாக சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. யாரோ ஒரு பெண் என்றால் குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு போய்விடுவார். உறவுப்பெண் என்றால் அவர் தான் சுமந்து பெற்ற குழந்தையை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்படும். இது அவளுக்குள் ஒரு பாசப்போராட்டத்தை ஏற்படுத்துவதோடு, குழந்தையின் பெற்றோருக்கு தர்மசங்கடமான சூழ்நிலையையும் உருவாக்கும். மேலும் குழந்தை வளர வளர அதன் மனதிலும் பாதிப்புகள் ஏற்படலாம்'' என்பது சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களின் கருத்து.

    தம்பதிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரவேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வழங்கியுள்ள தனியுரிமைக்கு எதிரானது என்று சட்ட நிபுணர் அனில் மல்கோத்ரா கூறுகிறார்.

    வாடகைத்தாய் முறை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் என்றால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுக்கும் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள டாக்டர்கள் முன்வரமாட்டார்கள் என்று இந்த துறையின் நிபுணரான டாக்டர் நாராயண பட்டேல் கூறி இருக்கிறார்.

    Next Story
    ×