என் மலர்
இந்தியா

பிரதமரை வரவேற்று பதாகைகள் வைத்த விவகாரம்: பா.ஜ.க.வுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த அதிகாரி இடமாற்றம்
- வரவேற்பு பதாகைகள் அகற்றப்படவில்லை.
- கேரளாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், அந்த மாநகராட்சியே அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 23-ந் தேதி கேரள மாநிலம் வந்தார். திருவனந்தபுரத்தில் நடந்த ரெயில்வே மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். கேரளா வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் விழா நடைபெற்ற புத்தேரிகண்டம் வரை பாரதிய ஜனதாவினர் வரவேற்பு பதாகைகள் அமைத்திருந்தனர்.
இந்த பதாகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் திருவனந்தபுரம் மாநகராட்சி, பா.ஜ.க. நகர தலைவருக்கு நோட்டீசு அனுப்பியது. ஆனால் வரவேற்பு பதாகைகள் அகற்றப்படவில்லை. இதனை தொடர்ந்து பா.ஜ.க.வினருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டது.
இது பாரதிய ஜனதா கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் திருவனந்தபுரம் மாநகராட்சியை சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கைப்பற்றி, அந்த கட்சியை சேர்ந்தவர் மேயராக இருப்பது தான். கேரளாவில் முதன் முறையாக பாரதிய ஜனதா மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், அந்த மாநகராட்சியே அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வருவாய் அதிகாரியாக இருந்த ஷைனி தற்போது திடீரென வருவாய் பிரிவில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் தான் பிரதமரை வரவேற்று பதாகைகள் வைத்த விவகாரத்தில் பா.ஜ.க.வினருக்கு அபராதம் விதித்தவர் என கூறப்படுகிறது. அதன் பின்னணியில் தான் இட மாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.






