என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதாவின் வரி பாக்கி எவ்வளவு? - வருமான வரித்துறை தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு
- ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
- வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.36 கோடியே 56 லட்சம் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அதனை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
இதையடுத்து, நோட்டீசை திரும்ப பெற்ற வருமான வரித்துறை, ரூ.13 கோடியே 69 லட்சம் வரி பாக்கியை செலுத்தும் படி புதிய நோட்டீசை அனுப்பியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.பிரதாப், 'வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார். எனவே, வரி பாக்கித் தொகையை செலுத்த முடியாது என தீபா கூற முடியாது' என்றார்.
ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்தியகுமார், 'ஜெயலலிதா வருமான வரிப்பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி என தெரிவித்த வருமான வரித்துறை, பின்னர் ரூ.36 கோடியாக குறைத்தது.
தற்போது, ரூ.13 கோடியே 69 லட்சம் என கூறுகிறது. உண்மையிலே எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்பதை வருமான வரித்துறை தெளிவாக கூறவில்லை' என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு? என்பது குறித்து வருமான வரித்துறை விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.






