என் மலர்
நீங்கள் தேடியது "J Deepa"
- பொருட்கள் ஏலம் விடுவதற்கு தடை நீடிப்பு.
- விசாரணை ஜனவரி 3-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
பெங்களூரு:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் கர்நாடக அரசு வசம் உள்ளது. அந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை ஜெயலலிதாவின் அபராத தொகையை செலுத்தும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு அந்த கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே ஜெயலலிதாவின் வாரிசு என்பதால் அவரது பொருட்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ.தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி ஆஜரானார்.
அப்போது அவர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜராகி வாதிட மூத்த வக்கீல் சந்தேஷ் சவுட்டா தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி ஒரு கடிதத்தை நீதிபதியிடம் வழங்கினார். அதை நீதிபதி சிவசங்கர அமரன்னவர் ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் ஏலம் விடுவதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.
- ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
- ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் மார்ச் மாதம் 6, 7-ந் தேதிகளில் ஒப்படைக்குமாறு கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி கர்நாடக அரசு ஜெயலலிதாவின் தங்க, வைர, வைடூரிய நகைகள், வெள்ளி பொருட்களை தமிழக அரசிடம் இன்று (புதன்கிழமை) ஒப்படைக்க ஏற்பாடுகளை செய்திருந்தது. முன்னதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதாவின் வாரிசான தன்னிடம், அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி உரிமை கொண்டாடினார். ஆனால் அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு நேற்று நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஜெயலலிதாவின் வாரிசிடம் தான் அவரது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பில் இருந்து ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளியாக கருத முடியாது என்றும் வாதிட்டார்.
மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்குமாறும் கோரினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முகமது நவாஸ், ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் இதுதொடர்பான அடுத்த விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஐகோர்ட்டின் இந்த உத்தரவால், ஜெயலலிதாவின் பொருட்கள் திட்டமிட்டபடி இன்று தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.
- ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 468 வகையான 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா 1136 பக்க தீர்ப்பு வழங்கினார்.
அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து இவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கு சென்றது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் அதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் காலாவதியாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனாலும் மற்ற 3 பேரும் 4 வருட சிறை தண்டனை அனுபவித்து அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்கும் வகையில் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை திரட்டுவதற்காக அவரது சொத்துக்களை விற்க நீதித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை அடுத்த மாதம் (மார்ச்) 6, 7-ந் தேதிகளில் தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்க பெங்களூரு 36-வது சிட்டி சிவில் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் 27 கிலோவில் 20 கிலோ நகைகளை மட்டும் விற்க வேண்டும் என்றும் மீதியுள்ள 7 கிலோ நகைகள் ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்று கருதப்படுவதால் இவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தனர். மேலும் ஜெயலலிதா கணக்கு வைத்திருந்த நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.59 லட்சத்தை ஒப்படைத்தது. மேலும் ஜெயலலிதாவின் நகைகளை பெற தமிழக உள்துறை செயலாளர் வருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகைகளை கொண்டு செல்லும்போது தேவையான பாதுகாப்புடன் வீடியோகிராபர் மற்றும் 6 பெரிய டிரங்க் பெட்டிகளுடன் வரவேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூருவில் இருந்து 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது. அவை, தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்படும்.
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 20 கிலோ நகையை ஏலம் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 7 கிலோ நகை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் உண்மையான சட்ட வாரிசாக ஜெ.தீபா உள்ளார். அவரிடம் தான் தற்போது போயஸ் கார்டன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எனவே பாரம்பரியமான குடும்ப நகையான இந்த 7 கிலோ நகையும் ஜெ.தீபாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
- ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- சமூக ஆர்வலர் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார்.
பெங்களூரு :
பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்றும், அதனால் அவரது இந்த பொருட்கள் தங்களுக்கு சேர வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவலி, சொத்து குவிப்பு வழக்கில் 3 பேர் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், அதனால் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.
மேலும் ஜெயலலிதாவின் 29 வகையான பொருட்களில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே தற்போது இங்கு உள்ளதாகவும், மீதமுள்ள 28 பொருட்கள் குறித்து தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டார்.
- சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.
பெங்களூரு
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஏற்கனவே கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தரப்பில் வக்கீல் சத்யமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.
அப்போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என்று கூறி சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அறிவித்து, சொத்துகளை ஒப்படைத்துள்ளது. எனவே கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் பொருட்கள், பிற உடைமைகளை தீபாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் உங்களது தரப்பில் இருந்து முறையாக மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினார். மேலும் முறையாக மனு தாக்கல் செய்யும்படி தீபா தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதே நேரத்தில் நரசிம்மமூர்த்தி கூறியபடி அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.
இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் முறையான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கணவர் மாதவனுடன் தீபா சென்றார்.
- தனது மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்தார்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
தற்போது அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வைக்க அவர் திட்டமிட்டார். அவ்விழாவிற்கு முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கணவர் மாதவனுடன் தீபா சென்றார்.
மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
- ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள்.
- சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார்.
சென்னை:
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கும், சசிகலாவுக்கும் மோதல் வலுத்து வருகிறது. சசிகலாவுக்கு எதிராக தீபா பரபரப்பான ஆடியோ வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தீபா புதிதாக வெளியிட்டு உள்ள ஆடியோவில் கூறி இருப்பதாவது:-
ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொள்வது போல் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டார்கள். அது அப்பல்லோ மருத்துவமனையே கிடையாது என்று பலரும் பல தடவை சொல்லி இருக்கிறார்கள்.
குறிப்பாக அது 2016-ம் ஆண்டு எடுத்த போட்டோ கிடையாது. கமிஷன் விசாரணை நடக்கும்போது அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குள் நான் சென்றேன். அங்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையை காண்பித்தார்கள். அது ரொம்ப பெரிய அறையாக இருந்தது. அது போட்டோவில் இருப்பது போன்று சிறிய அறை அல்ல. ஜன்னல் வழியாக ஒரு மரம் இருப்பது போல் காட்டுகிறார்கள். அது கிடையாது. இதுவும் ஒரு அப்பட்டமான பொய்.
அந்த வீடியோ வெளியிட்ட அப்போதைய அ.தி.மு.க. பிரமுகர் சசிகலா தரப்பை சேர்ந்தவர். சசிகலா சொல்லி தான் பழைய வீடியோவை தயார் செய்து கொடுத்து வெளியிட்டுள்ளனர். போலி வீடியோ தயார் செய்வதில் சசிகலாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். அது தான் அவர்கள் தொழிலே. அதை நல்லா ரெடி பண்ணி இருக்கிறார்கள்.
அவர்களின் சொந்த குடும்பத்தினர் எல்லோருமே அதிகாரத்தை விரும்புவார்கள். டி.டி.வி. தினகரனை அரசியலை விட்டு விலக சொல்லுங்கள். உங்களுக்கு எதற்கு அரசியல். நீங்கள் எப்போதும் நல்லவர்கள் தானே. உங்களுக்கு எதுவும் வேண்டாம் தானே. ஜெயலலிதாவை பாதுகாத்தவர்கள் தானே. அரசியல் வேண்டாம் என்று விலகி விடுங்கள். எதற்கு அதில் இருக்கிறீர்கள்?
ஜெயலலிதாவுக்கு துணையாக மட்டும் தானே நீங்கள் இருந்தீர்கள். சசிகலா அரசியல் வேண்டும் என்று ஏன் இப்போது ரோடு ரோடாக அலைகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொள்கிறார்.
மக்களால் விரட்டியடித்து துரத்தப்பட்ட நீங்கள் அ.தி.மு.க.வுக்கு பொதுச்செயலாளரா? அப்போது என் வீட்டு வாசலில் எதற்காக வந்து நின்றார்கள். நீங்கள் வேண்டாம் என்று தானே மக்கள் வந்தார்கள். நீங்கள் தியாகத்தலைவி தானே. எல்லாவற்றையும் விட்டு செல்லுங்கள். இப்போது எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் உங்களை எல்லோரும் நம்புவார்கள்.
எனது தாயாரை பற்றி பேச நீங்கள் யார்? உங்கள் அண்ணி இளவரசி அண்ணியா? யாருக்கு அண்ணி? உங்களுக்கு தானே? எனது தாயார் பெயரை விஜயலட்சுமி என்று சொல்ல நீங்கள் யார்? எனது தம்பியை கெடுத்து, எனது குடும்பத்தை அழித்து, எனது அப்பாவை கொன்று, எனது அத்தையை கொன்று, என் வாழ்க்கையை அழித்து, என் வயிற்றில் வளர்ந்த குழந்தையை அழித்து, பணத்துக்காகவும், அதிகார ஆசைக்காகவும், எவ்வளவு செய்வீர்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம். ஏதோ ஒரு மூலையில் தானே வாழ்ந்து கொண்டிருந்தோம். எனது தாயார் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் தடுத்து ஏமாற்றியவர் தானே நீங்கள். நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று எனக்குத்தான் தெரியும். என் தம்பி எப்படி உண்மையை சொல்லுவான். நீங்கள் தான் அவரை கைக்குள் வைத்திருக்கிறீர்களே? முதலில் அவரை விடுங்கள்.
சசிகலா நீங்கள் அரசியலை விட்டு விலகுங்கள். டி.டி.வி. தினகரன், உங்கள் குடும்பம் எல்லோருமே விலகுங்கள். ரூ.5 லட்சம் கோடியை எங்கிருந்து சம்பாதித்தீர்கள். எங்கள் அத்தை தங்க முட்டையிடும் வாத்தா? இப்படித்தானே சொல்லிக்கொண்டு சுற்றுகிறீர்கள். உங்களுக்கு தங்க முட்டை இடுவதற்காக ஜெயலலிதாவை அடிமையாக வைத்திருந்தீர்களா?
தைரியம் இருந்தால் நீங்கள் என்னிடம் வந்து பேசுங்கள். வாருங்கள் உட்கார்ந்து பேசலாம். நாங்கள் என்ன செய்தோம், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று பேசுவோம். எனது அப்பாவுக்கும், அத்தைக்கும், எனக்கும், எனது தாயாருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எப்படியெல்லாம் நல்லுறவு என்று நான் காட்டுகிறேன்.
அந்த வீட்டுக்குள் இருக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? எதிரில் வீடு கட்டுகிறீர்களா? எப்படி வந்தது பணம். இதையெல்லாம் எல்லோரும் கேட்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் கேட்க வேண்டும். தமிழக மக்கள் கேட்க வேண்டும். தமிழக அரசு அவர்கள்மீது நடவடிக்கைகளை தள்ளிப் போடாமல் யாருக்கும் கட்டுப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை.
சசிகலா மற்றும் அவரை சேர்ந்தவர்களால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது. அதற்கு பயந்து தான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். எனது குடும்பத்துக்கு தெய்வம் எனது தாயார். அவர் எனது உயிர். எங்கள் குடும்பத்துக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனது தாயாரை பற்றி பேசினால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இவ்வாறு அந்த ஆடியோவில் தீபா கூறியுள்ளார்.
- அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதும் பொய்.
- எனது குடும்பத்தை பற்றியும், எனது அம்மா பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
சென்னை:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் ஜெ.தீபா பற்றியும், அவரது தாய் பற்றியும் அவர் பல தகவல்களை கூறி இருப்பதாக தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கும் தீபாவுக்கும் இணக்கமான சூழல் இருந்ததில்லை என்றும், ஜெயலலிதாவால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபாவின் தாய் விஜயலட்சுமி புகார் தெரிவித்து இருந்ததாகவும் சசிகலா கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீபா வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
சசிகலா உண்மை விரும்பியாக இருந்திருந்தால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்கிற கேள்வியே எழுந்திருக்காது.
எனது தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற 3-வது நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவிடம் எனது தாய் அத்தையை பற்றி புகார் கூறியதாக சசிகலா கூறி இருப்பதில் உண்மை இல்லை. எனது அத்தைக்கு சசிகலாவால் ஆபத்து உள்ளது என்றே அப்போது புகார் அளிக்கப்பட்டது.
வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சசிகலா அவர் மீதுள்ள தவறுகளையெல்லாம் மறைத்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கூறியுள்ளார்.
சசிகலா கூறுவது போல எனது அம்மா விஜயலட்சுமி, கருணாநிதியையோ, வாழப்பாடி ராமமூர்த்தியையோ போய் சந்தித்து பேசியதே இல்லை.
சசிகலாவுக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசட்டும். எனது அம்மாவை பற்றி பேசினால் நன்றாக இருக்காது. உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையென்றால் போலீசிடமும், கோர்ட்டிலும் நிரூபிக்க வேண்டும். மக்களிடமும் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எனக்கு காழ்ப்புணர்ச்சி என்றும், அத்தையை பற்றி எனது அம்மா தவறாக பேசினார் என்றும் தப்பு தப்பாக விமர்சிப்பது சரியாக இல்லை. இதற்காக சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.
அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும் பிடிக்கும் என்று சொல்வதும் பொய். எங்கள் அத்தை அப்படிப்பட்ட ஆள் இல்லை. 1997ல் மத்திய சிறைச்சாலையில் நானும் தீபக்கும் தான் சென்று பார்த்தோம். இதுபோல் பலமுறை சந்தித்துள்ளோம். அதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆனால் சசிகலாவின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்து முடிந்ததும் எனது தந்தை இறந்து போனார். அதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல்தான் உள்ளது.
இதேபோல் எத்ததையோ சந்தேகங்கள் அவர் மீது உள்ளது. எனது அத்தைக்கு ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும் சசிகலாவே காரணமாகும்.
அத்தையின் மரணத்தில் அவர்களது செயல்கள்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எந்த தவறும் செய்யவில்லை என்றால் அத்தையை பார்க்க என்னை அனுமதிக்காதது ஏன்? கேமராக்களை அணைத்து வைத்ததற்கு காரணம் என்ன? அவர்களின் ஆதாயத்துக்காக அத்தையை தவறாக பயன்படுத்தினர். எல்லா உண்மைகளும் நிச்சயம் ஒருநாள் வெளியில் வரும். எத்தனை காலம்தான் மறைத்து வைக்க முடியும். எனது குடும்பத்தை பற்றியும், எனது அம்மா பற்றியும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. சசிகலா இதோடு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
எனது தம்பியை கெடுத்து... எனது அப்பாவை கொன்று... எனது அத்தையை (ஜெயலலிதா) கொன்று எனது வாழ்க்கையை அழிச்சி, எனது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் சசிகலா அழித்துள்ளார். எனது அம்மாவின் சாவுக்குகூட அத்தையை வரவிடாமல் ஏமாற்றியவர்தான் சசிகலா. எனது தம்பியை பிடித்து கைக்குள் வைத்திருக்கிறீர்கள். முதலில் அவனை விடுங்கள். அவனை பிடித்த சனியனாவது ஒழியட்டும்.
அரசியலை விட்டு நீங்கள் (சசிகலா) விலக வேண்டும். எங்கிருந்து சம்பாதித்தீர்கள் இத்தனை கோடிகளை? தைரியமிருந்தால் என்னிடம் வந்து பேசுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாங்கள் என்ன செய்தோம் என பேசலாம்.
இத்தனை கோடிகள் எப்படி வந்தது என்பது பற்றி அ.தி.மு.க. தொண்டர்களும் தமிழக மக்களும் கேட்க வேண்டும். தமிழக அரசு, 'சசிகலா மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் எனக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் நிச்சயமாக ஆபத்து உள்ளது. அதற்கு பயந்துதான் நாங்கள் ஒதுங்கி இருக்கிறோம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன். எனது அம்மாவை பற்றி பேசியதற்கு சசிகலா பதில் சொல்லியே தீர வேண்டும்.
இவ்வாறு தீபா ஆடியோவில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
- அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
- அ.தி.மு.க. கட்சியாக அல்ல, ஒரு அமைப்பாக கூட இல்லை.
சென்னை:
ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும் பிளவு என்பது அ.தி.மு.க.வுக்கு புதிதல்ல. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, நல்ல தலைமை அ.தி.மு.க.வில் இல்லை என்பதால் இந்த பிளவு இருக்கிறது. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இப்போது அ.தி.மு.க. கட்சியாக அல்ல, ஒரு அமைப்பாக கூட இல்லை என்றுதான் சொல்வேன். அ.தி.மு.க.வை வழிநடத்த இப்போது யாருமில்லை.
எனக்கு ஒட்டுமொத்த அரசியலே பிடிக்கவில்லை. எனவே நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன். ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் சசிகலா மீதுதான் முதல் குற்றம் கூறப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இன்னும் சில தினங்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை வெளிப்படையாகவே நானும், எனது கணவரும் அறிவிக்க உள்ளோம்.
- பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு குழந்தை பிறந்து உள்ளதால் அதனை கவனமாக வளர்க்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.
சென்னை:
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா-மாதவன் தம்பதிக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதற்காக இருவரும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் தீபாவுக்கு வாடகை தாய் மூலமாக சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருப்பதாக இன்று காலை தகவல்கள் பரபரப்பாக வெளியானது.
இது தொடர்பாக தீபாவை தொடர்பு கொண்டு கேட்டபோது குழந்தை பிறந்து இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க தயங்கினார்.
5 வருட சிகிச்சைக்கு பிறகு தற்போது எனக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. இதற்கு முன்பு பலமுறை கருத்தரித்த நிலையிலும் அப்போது குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் இருந்தன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாமல் இருந்தது.
தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருக்கிறது. நானும், குழந்தையும் மருத்துவமனையில்தான் அவசர சிகிச்சையில் உள்ளோம்.
இன்னும் சில தினங்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை வெளிப்படையாகவே நானும், எனது கணவரும் அறிவிக்க உள்ளோம். பல ஆண்டு போராட்டத்துக்கு பிறகு குழந்தை பிறந்து உள்ளதால் அதனை கவனமாக வளர்க்க வேண்டும் என்பதில் இருவருமே உறுதியாக இருக்கிறோம்.
எனக்கும், எனது கணவருக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. எங்களது உறவினர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு குழந்தை பிறந்தது தொடர்பான தகவலை நானே தெரிவிப்பேன்.
இது தொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.
இவ்வாறு தீபா தெரிவித்தார்.
- ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே.
- அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேசமாட்டார்கள்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினரும் பொது மக்களும் அவர் இறந்த உடனேயே குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையை தற்போது தாக்கல் செய்து உள்ளது.
அதில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா உள்பட சரமாரியாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க முன் வராதது குறித்தும் பல்வேறு சந்தேகங்களை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் படி தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தி விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது தொடர்பாக மாலைமலர் நிருபருக்கு தீபா அளித்த பேட்டி வருமாறு:-
எனது அத்தை ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது அவர் மரணம் அடைந்த உடனேயே மிகப்பெரிய கேள்வியாக எழுந்தது. பொதுமக்களும் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது எப்படி? எந்த மாதிரி நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன? என்பவற்றையெல்லாம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றும் பொதுமக்கள் பலர் வலியுறுத்தினார்கள்.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா மீதும் ஓ.பன்னீர் செல்வம் மீதும் அப்போது இருந்த அமைச்சர், அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி இருக்கிறது. எனவே இதில் தவறு செய்த அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
காவல்துறையை பொறுத்தவரையில் சசிகலாவுக்கு தற்போது இருக்கும் அதிகாரிகள் பலரும் நெருக்கமானவர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவரது அதிகாரம் அப்படிப்பட்ட அதிகாரமாக இருந்தது.
எனவே இதையெல்லாம் ஆலோசித்து நேர்மையான காவல்துறை அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நடத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருவது நான் மட்டுமே. அ.தி.மு.க. தலைவர்கள் யாரும் இதற்காக ஒருபோதும் பேச மாட்டார்கள். நமது நாட்டில் பல தலைவர்கள் இதற்கு முன்பு உயிர் இழந்து உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி என அனைவரது மரணமும் இயற்கையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர். மரணமடைந்த நேரத்தில் இவ்வளவு தகவல் தொழில்நுட்ப வசதி கிடையாது. இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? எந்த நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக மக்களுக்கு தெரிவித்தனர்.
வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் அது போன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அ.தி.மு.க. தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை.
ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அப்போது இருந்த ஆட்சியாளர்களுக்கும், உடன் இருந்த சசிகலாவுக்கும் உண்டு.
திட்டமிட்டு சூழ்ச்சி செய்து எனது அத்தை உயிர் இழப்பதற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளனர்.
ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவரது இருக்கையில் அமர்வதற்கு சசிகலா ஆசைப்பட்டார். இதன் காரணமாகவே ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டாகும்.
எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக அரசு வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது எதற்காக? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர்தானே முதல்-அமைச்சராக இருந்தார். எனவே அவரும் ஜெயலலிதாவின் மரணத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இந்த விஷயத்தில் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அனைவரும் கடமை தவறி இருப்பது ஆணையத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
அ.தி.மு.க.வை வளர்ப்பதற்கு ஜெயலலிதா செய்த தியாகங்கள் எதையும் அவரால் பயனடைந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி நினைத்து பார்த்திருந்தால் அவரது உயிரை நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.
தற்போது சசிகலா தவறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஏன் எங்களை எல்லாம் பார்க்க விடவில்லை. நாங்கள் அவரை நெருங்க கூட முடியவில்லை. இதற்கு சசிகலாவும் அவருடன் இருந்தவர்களுமே காரணம்.
எனவே மரணத்துக்கு பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு சசிகலாவுக்கே உள்ளது.
அ.தி.மு.க.வில் தற்போது நடைபெற்று வருவது மிகப்பெரிய நாடகமாகும். பன்னீர்செல்வத்தை வெளியேற்றி விட்டு எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து நாடகமாடுகிறார்.
ஓ.பி.எஸ் வழியே சென்று சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் இருவருமே சேர்ந்து நாடகம் ஆடுவது உறுதியாகியுள்ளது. மக்கள் ஏமாளிகள் அல்ல.
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை. முதுகில் குத்தும் இந்த அரசியல் வேண்டாம் என்றுதான் நான் ஒதுங்கி இருக்கிறேன்.
அத்தையின் மரண விவகாரத்தில் கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆணைய அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். அத்தையின் மரணத்தில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.
- 25 வருடமாக பழகி வந்த சசிகலாவை பணிப்பெண்ணாக மட்டுமே ஜெயலலிதா உடன் அழைத்து சென்றாரே தவிர, ஒருபோதும் மேடை ஏற்றியது கிடையாது.
- ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரி வாசலில் தவம் கிடந்தேன். ஆனால் பார்க்கவிடவில்லை.
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஏனெனில் ஆறுமுகசாமி ஆணையமே மேல் விசாரணை தேவை என்று பரிந்துரை செய்து இருக்கிறது. சசிகலாவால் கட்டுப்படுத்தப்பட்ட அ.தி.மு.க. இருந்ததால், அன்றைய காலக்கட்டத்தில் அது சாத்தியமாகவில்லை. அதனால் விசாரணையை முறையாக நடத்துவதற்கும் முன்வரவில்லை. இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக அரசியல் காய் நகர்த்தலாகத்தான் பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா என்பதிலேயே சர்ச்சை எழுந்தது.
அதில் இருந்து இந்த விவகாரம் விசாரிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு. அத்தை (ஜெயலலிதா) தனி நபராக வாழ்ந்தபோது, சசிகலாவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக அவருடன் இருந்தது. ரத்த சொந்தங்களோ, தூரத்து உறவினர்களோ அவருடன் இல்லை. யாரையுமே சசிகலா குடும்பம், ஜெயலலிதாவுடன் நெருங்கவும், கூட இருக்கவும் விடவில்லை. ஜெயலலிதாவை சுற்றிலும் சதித்திட்டம் இருந்ததை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சதித்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் கொடுக்கப்பட்ட தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று எப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது?, தமிழக முதல்-அமைச்சராக இருந்த அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு இருந்திருந்தால் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஜெயலலிதாவுடன் இருந்த அதிகாரிகளுக்கும், கட்சியை சேர்ந்த அடுத்தக்கட்ட தலைவர்களுக்கும், அவருடன் இருந்த சசிகலா குடும்பத்தினருக்கும் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு இருந்ததாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை.
அப்படியிருக்கும்போது, ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லை என்றால் உடல்நலக்குறைவு இருந்ததை ஏன் மறைத்தீர்கள்?. ஜெயலலிதாவுக்கு பெரிய நோய்கள் எதுவும் இருந்ததாக சொல்லவில்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வரை முதல்-அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். அப்படி ஏதாவது இருந்திருந்தால், அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. அரசுக்கும், ஜெயலலிதாவுடன் வசித்த சசிகலா குடும்பத்துக்கும் இருந்தது. 2 பேருமே அதனை செய்ய தவறி விட்டார்கள்.
ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை சசிகலா குடும்பம் பலவீனமாக கருதியது. அதை மையமாக வைத்து சசிகலா குடும்பம் என்ன செய்தார்களோ, எப்படி பயன்படுத்திக்கொண்டார்களோ தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள்.
25 வருடமாக பழகி வந்த சசிகலாவை பணிப்பெண்ணாக மட்டுமே ஜெயலலிதா உடன் அழைத்து சென்றாரே தவிர, ஒருபோதும் மேடை ஏற்றியது கிடையாது. ஆனால் ஆட்சி அதிகாரம், பதவி மேல் ஆசை இருந்ததை சசிகலா குடும்பமே பல இடங்களில் தெரிவித்து இருக்கிறது.
ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரி வாசலில் தவம் கிடந்தேன். ஆனால் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சசிகலா அதிகார மையமாக மாறிவிட்டார்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததா? அல்லது அதற்கு முன்பே பிரிந்துவிட்டதா? என்பதில் சர்ச்சைகளும், சந்தேகமும் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் சந்தேகமாக இருக்கிறது. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை, போலீசாரின் உதவி இல்லாமலும், யாரிடமும் தெரிவிக்காமலும் சசிகலாவும், அவர் உடன் இருந்தவர்களும் ஆம்புலன்சில் அழைத்து சென்றது ஏன்?. எந்த மாதிரியான உடல்நலக்குறைவு அவருக்கு இருந்தது?. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?.
வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்வதை தடுத்தது யார்? ரத்த உறவுகளான என்னிடமும், தீபக்கிடமும் (தீபாவின் சகோதரர்) தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தது யார்? என்ற பல சந்தேகங்கள் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.