என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு கோர்ட்டு"

    • ரன்யா ராவிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூரு:

    பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3-ந்தேதி இரவு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடிகை ரன்யா ராவ், தருண்ராஜு ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடிகை ரன்யா ராவ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல், நடிகை ரன்யா ராவ் தங்கம் வாங்குவதற்காக ஹவாலா மூலம் பண பரிமாற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீது நாளை (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • ஜெயலலிதாவின் பொருட்களை உரிமை கோரிய ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    • சமூக ஆர்வலர் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார்.

    பெங்களூரு :

    பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுமாறு உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவலி நியமிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தாங்கள் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்றும், அதனால் அவரது இந்த பொருட்கள் தங்களுக்கு சேர வேண்டும் என்றும் கோரினர். இந்த வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவலி, சொத்து குவிப்பு வழக்கில் 3 பேர் சிறை தண்டனை அனுபவித்ததாகவும், அதனால் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.

    மேலும் ஜெயலலிதாவின் 29 வகையான பொருட்களில் 30 கிலோ தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே தற்போது இங்கு உள்ளதாகவும், மீதமுள்ள 28 பொருட்கள் குறித்து தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி வாய்மொழியாக உத்தரவிட்டார்.

    • சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    • 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

    இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.

    இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

    அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

    28 வகையான பொருட்கள் எவை?

    1.பட்டுப்புடவைகள்-11,344

    2.குளிர்சாதன எந்திரங்கள்-44

    3.தொலைபேசிகள்-33

    4.சூட்கேசுகள்-131

    5.கைக்கெடிகாரங்கள்-91

    6.சுவர்கெடிகாரங்கள்-27

    7.மின்விசிறிகள்-86

    8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146

    9.டீப்பாய்கள்-34

    10.மேஜைகள்-31

    11.மெத்தைகள்-24

    12.உடை அலங்கார டேபிள்கள்-9

    13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81

    14.ஷோபா ஷெட்டுகள்-20

    15.செருப்புகள்-750 ஜோடிகள்

    16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31

    17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215

    18.இரும்பு பெட்டகங்கள்-3

    19.சால்வைகள்-250

    20.குளிர்பதன பெட்டிகள்-12

    21.டி.விக்கள்-10

    22.வி.சி.ஆர்.கள்-8

    23.வீடியோ கேமரா-1

    24.சி.டி.பிளேயர்கள்-4

    25.ஆடியோ பிளேயர்கள்- 2

    26. ரேடியோ பெட்டிகள்-24

    27.வீடியோ கேசட்டுகள்-1,040

    28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.

    • சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் விடக்கோரி மனு
    • முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அத்துடன் சொத்து குவிப்பு வழக்கில் என்னென்ன இணைக்கப்பட்டிருந்தன என்ற விவரங்கள் முழுவதையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என தமிழக லஞ்சத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில், தமிழக லஞ்சத்துறை அதிகாரிகள் சார்பில் ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பொருட்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளை அரசு வழக்கறிஞரிடம் இருந்து கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவர்களின் முடக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணம், வைப்புநிதி உள்ளிட்ட விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கூறினார்.

    மனுதாக்கல் செய்திருந்த நபர், ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சால்வை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சட்ட விரோதமாக சேர்த்த சொத்துகள் பட்டியலில் இல்லாததை ஏலம் விட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    ஜெயலலிதாகவின் ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை சட்டவிரோதமாக சேர்த்த சொத்து பட்டியலில் இல்லை.

    ×